என் மலர்
சினிமா செய்திகள்
ஐ, 2.0 படங்களில் நடித்து மிகவும் பிரபலமான எமி ஜாக்சன், கர்ப்ப காலத்திலும் அடிக்கடி போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 என சில படங்களே நடித்த போதும், தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததால், தமிழில் வேகமாக முன்னேறினார். லண்டனைச் சேர்ந்த எமி 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.
மீண்டும் லண்டன் பறந்த அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி அறிவித்தார். இது தமிழ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

குழந்தை பிறந்த பின்னர் அவர்களது திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 22 வார கர்ப்பிணியாக இருக்கிறார் எமி. வரும் செப்டம்பரில் அவருக்கு குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூகவலைதளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டவர் எமி. தற்போது கர்ப்பமாக இருக்கும் சூழலிலும் அதே போன்ற புகைப்படங்களை அவர் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் முதன்முறையாக தனது கர்ப்பம் பற்றி வெளிப்படையாகப் பேசி வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ’நான் கருத்தரித்து 22 வாரங்கள் ஆகிவிட்டது. அதை உறுதிபடுத்தும் விதமாக இந்த வீடியோவை வெளியிடுகிறேன். இவ்வளவு நாட்கள் இது பற்றி உங்களிடம் பேச வேண்டும் என எனக்குத் தோன்றவில்லை. ஆனால், இனி தொடர்ந்து இதுபோன்ற கர்ப்பகால வீடியோக்களை பதிவேற்றுவேன்” என கூறியிருக்கிறார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தல் நடந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ள நிலையில், தற்போது நடிகர் சங்க தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்க நிர்வாகிகள் தேர்தல் மூலம் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். 2015-ம் ஆண்டு அக்டோபர் 18-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களின் பதவிக்காலம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. அந்த சமயத்தில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் நடைபெற்று வருவதால், தேர்தலை ஆறு மாதங்களுக்கு அப்போது தள்ளி வைத்தனர்.

ஆறு மாத காலக்கெடுவும் முடிவடைந்து விட்டதால், தேர்தல் நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தற்போது நடிகர் சங்க தேர்தல் 23ம் தேதி நடக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த தேர்தல் எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடக்க இருக்கிறது.
யஷ் கதாநாயகனாக நடிக்கும் கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இந்திரா காந்தி வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
கன்னடத்தில் உருவாகி தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் கடந்த ஆண்டு வெளியான படம் கேஜிஎப். யஷ் கதாநாயகனாக நடித்து இருந்த இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
படம் 1970 -1980களில் நடக்கும் கதை என்பதால் படத்தில் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரமும் வருகிறது. இதில் நடிப்பதற்கு பொருத்தமான நடிகையை தேடி வந்தனர். தற்போது இந்த வேடத்தில் பிரபல இந்தி நடிகை ரவீணா டாண்டன் நடித்து வருகிறார்.

ரவீணா டாண்டன் தமிழில் அர்ஜூனுடன் ‘சாது’, கமலுடன் ‘ஆளவந்தான்’ படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'பிசாசு' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த நடிகை பிரயாகா, தற்போது பிற மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
தனது முதல் படமான 'பிசாசு' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பிரயாகா மார்ட்டின். இவர் ஏற்கனவே பல்வேறு பிராந்திய மொழி சினிமாக்களில் நடித்து வருகிறார். எனினும், தமிழ் சினிமாவை மிகவும் சிறப்பானதாக அவர் கருதுகிறார்.
இது குறித்து அவர் கூறும்போது, "தமிழ்நாட்டின் அன்பும் பாசமும் நிபந்தனையற்றது. சில நேரங்களில், பிசாசு என்ற ஒரு படத்தில் நடித்த என்னை மக்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து உணர்ச்சி வசப்பட்டு விடுவேன். அதற்கு காரணமாக இருந்த மிஷ்கின் சாருக்கு நன்றி. உண்மையை சொல்வதென்றால், இந்த வெற்றி தான் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், மற்ற மொழி சினிமாக்களிலும் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்வு செய்ய என்னை தூண்டுகிறது. இங்கு கோலிவுட்டில் நல்ல முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை கேட்டு வருகிறேன். விரைவில் என் படங்களை பற்றிய நிறைய அறிவிப்புகள் இருக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'உல்டா' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் பிரயாகா. இப்படம் ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது. அடுத்து மலையாள திரைப்படமான "பிரதர்ஸ் டே" படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதில் முன்னணி ஹீரோ பிரித்விராஜுடன் இணைந்து நடிக்கிறார். ஓணம் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டுள்ள இந்த படத்தில் ஜூன் மாதத்தில் தன் பகுதிகளை முடித்துக் கொடுக்கிறார் பிரயாகா.
கன்னட சினிமாவில், கணேஷ் குமார் ஜோடியாக "கீதா" என்ற படத்தில் நடிக்கிறார். இது ஏற்கனவே கன்னட சினிமாவின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக பேசப்படுகிறது. இறுதி கட்ட படப்பிடிப்பை எதிர்நோக்கி இருக்கும் படக்குழு, மொத்த படப்பிடிப்பையும் விரைவில் முடித்து செப்டம்பர் மாதம் மிக பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளது.
பாக்ஸர் படத்துக்காக 8 மணி நேரம் இடைவிடாமல் அருண் விஜய் பயிற்சி எடுத்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாக இருக்கும் படம் ‘பாக்ஸர்’. இந்த படத்திற்காக, கதாபாத்திரத்திற்காக அவர் செய்யும் தீவிர பயிற்சிகளின் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் விவேக் கூறும்போது, "அருண் விஜய் ஒரு மாத கால நீண்ட பயிற்சியில் இருந்தார். நிஜ வாழ்க்கையில் தன் உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்வதில் அருண் விஜய் ஒரு பரிபூரணவாதி என்று அனைவருக்கும் தெரியும். நம் "பாக்ஸர்" படத்திற்காக அவர் கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
பீட்டர் ஹெயின் மாஸ்டர் பரிந்துரைக்கு இணங்க, வியட்நாமில் உள்ள லின் பாங்கில் பயிற்சி பெற்றார். அருண் விஜய் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தொடர்ந்து அங்கு பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. இருந்தாலும், அவர் மிகவும் கூலாக இருந்தார்.
அருண் விஜய் கடினமான முயற்சிகள் எடுக்கும் இந்த வீடியோ, இதுவரை நாங்கள் செய்ததைப் பற்றிய ஒரு பார்வை மட்டுமே. இன்னும் கடுமையான பயிற்சிகளின் வீடியோக்கள் நிறைய உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வீடியோவை ஆர்வமாக காத்திருந்த ரசிகர்களுக்காக வழங்க விரும்பினோம். நான் ரசிகர்கள் என்று சொல்வது அவரது படங்களை மட்டும் பார்ப்பவர்களை அல்ல, அவரை போலவே உடற்பயிற்சி செய்து அவரை தொடர்ந்து பின்பற்றுபவர்களையும் தான்" என்றார்.
ஒரு மாத கால கடுமையான பயிற்சிகளை முடித்து கொண்ட அருண் விஜய் இரண்டு நாட்களுக்கு முன் சென்னை திரும்பினார். தற்போது அவரது குடும்பத்துடன் விடுமுறையில் இருக்கிறார். திட்டமிட்டபடி, இந்த ஜூன் மாதம் படப்பிடிப்பை தொடங்கி, குறிப்பிட்ட காலத்தில் படத்தை முடிக்க இருக்கிறார்கள்.
இந்தப் படம் ஒரு புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரை பற்றியும், அவருக்குள் இருக்கும் தீய சக்தியை எதிர்த்து போராடும் ஒரு வீரனின் கதையை பற்றியது. ரித்திகா சிங் இந்த படத்தில் ஒரு விளையாட்டு பத்திரிகையாளரின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் நடிக்கும் டிம்பிள் கன்னாவிற்கு நடிகை ஸ்ருதிஹாசன் வாழ்த்து கூறியிருக்கிறார்.
1970, 1980களில் கவர்ச்சி கதாநாயகியாக திகழ்ந்தவர் டிம்பிள் கன்னா. ராஜ்கபூர் இயக்கத்தில் இவர் அறிமுகமான பாபி படத்தில் நீச்சலுடையில் நடித்து பரபரப்பை கிளப்பினார். அது முதல் பாபி என்றே அழைக்கப்படுகிறார். கமலின் விக்ரம் படத்திலும் நடித்திருந்தார். டிம்பிளை கமலுக்கு மட்டுமல்ல அவர் மகள் ஸ்ருதிக்கும் பிடிக்கும்.
பாலிவுட்டில் நடித்துக்கொண்டிருந்த டிம்பிள் தற்போது ஹாலிவுட்டில் நடிக்கிறார். இந்த படம் உளவு பிரிவு பற்றியதாக ‘டினெட்’ பெயரில் உருவாகிறது. பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்குகிறார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஸ்ருதி உடனடியாக டிம்பிளுக்கு வாழ்த்து பகிர்ந்திருக்கிறார். ‘எனக்கு மிகவும் பிடித்த டிம்பிள் மேம் கிறிஸ்டோபர் நோலன் படத்தில் நடிப்பதை அறிந்து மிக மிக சந்தோஷம் அடைந்தேன். ஐ லவ் யூ டிம்பிள்’ என குறிப்பிட்டுள்ளார்.
ஹன்சிகா நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘மஹா’ படத்திற்காக நடிகர் சிம்பு இடைவிடாமல் நடித்து வருவதாக படத்தின் தயாரிப்பாளர் கூறியிருக்கிறார்.
ஹன்சிகா நடிப்பில் தற்போது 'மஹா' திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பில் நிறைய சவால்களை சந்தித்தாலும் அதை ஒட்டுமொத்த படக்குழுவும் மிகத் திறமையாக கையாண்டு வருகிறது. தற்போது, கோவாவில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு சிம்பு மற்றும் ஹன்சிகா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மதியழகன், சிம்புவுடன் பணிபுரியும் மகிழ்ச்சியான அனுபவத்தால் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும்போது, "நாங்கள் திட்டமிட்ட 8 நாட்கள் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக கோவா படப்பிடிப்பில் இருக்கிறோம். இந்த கட்ட படப்பிடிப்பில் சிம்பு மற்றும் ஹன்சிகா ஆகியோர் நடிக்கும் ஒரு பாடல், சண்டைக் காட்சி, காதல் காட்சிகள், பார்ட்டி, காதல் பிரிவு மற்றும் திரும்ப சேர்தல் போன்ற காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளது.

சிம்பு உடனான தருணங்கள் என்னை உற்சாகப்படுத்துகின்றன. அவரை பற்றி வெளியில் சொல்லப்பட்டதில் இருந்து இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. முதல் நாளில் இருந்தே, நான் அவரது ஒவ்வொரு விஷயங்களையும் சந்தோஷமாக அனுபவிக்கிறேன். எங்களால் ஒரு சரியான கேரவன் கூட ஏற்பாடு செய்ய முடியவில்லை, சிம்பு ஏதாவது பிரச்சினை செய்வாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவரோ, "சார், இது ஒன்றும் திரையில் தெரிய போவதில்லை, படப்பிடிப்பில் நாம் கவனம் செலுத்துவோம் என்றார்.
நாங்கள் மதியம் 12 மணியில் இருந்து இரவு 12:30 மணி வரை 12 மணி நேரம் தொடர்ச்சியாக படம் பிடித்தோம். ஆனாலும் அவர் அடுத்த நாள் எத்தனை மணிக்கு வர வேண்டும் என கேட்டு விட்டு தான் செல்வார். அத்தகைய ஒரு நடிகரை பெறுவது எங்களை போன்ற ஒரு வளரும் தயாரிப்பாளருக்கு ஒரு பெரிய வரம்.
ஹன்சிகா முற்றிலும் ஒத்துழைப்பு கொடுத்து நடிக்கிறார். அவர்களின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக இருக்கிறது. இயக்குனர் ஜமீல் மிகத் திறமையாக சிறப்பாக செயல்படுகிறார். எந்த ஒரு அழுத்தத்தையும் சவால்களையும் மிகவும் எளிதாக கையாள்கிறார், ஒளிப்பதிவாளர் லக்ஷ்மணும் அவரை போலவே. இளைஞர்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த குழுவும் எனர்ஜியை முழுமையாக பரப்பி வருகின்றது" என்றார்.
அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சவுந்தரராஜா, விஜய் ஒத்திகை பார்க்க மாட்டார் என்று கூறியிருக்கிறார்.
சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் படங்களில் கவனிக்க வைத்த சவுந்தரராஜா அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விஜய் படத்தில் நடித்தது குறித்து சவுந்தரராஜா பேட்டி ஒன்றில் கூறியதாவது:
‘தளபதி 63 படத்தில் எனக்கு வெறும் 6 காட்சிகள் தான். படம் குறித்து எந்த தகவலையும் வெளியிடக் கூடாது என்று அட்லி தெரிவித்துள்ளார். அதனால் நான் இதற்கு மேல் எதுவும் கூற முடியாது. ஆனால் என் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. நான் ஏற்கனவே தெறி படத்தில் விஜய் சாருடன் சேர்ந்து நடித்துள்ளேன். அவருடன் சேர்ந்து நடிப்பதன் மூலம் நிறைய கற்றுக் கொள்கிறேன். அவர் தனது காட்சிகளை அவ்வளவாக ஒத்திகை பார்க்க மாட்டார்.

அன்றைய காட்சிகள் குறித்து அட்லி துணை நடிகர்களிடம் விளக்குவார். விஜய் வந்த உடன் அவர் என்ன செய்ய வேண்டும் என்று தெரிவிப்பார். விஜய் பெரும்பாலும் ஒரே டேக்கில் நடித்துவிடுவார். அவரின் அந்த திறமையை பார்த்து வியக்கிறேன். அவர் நடிப்பை பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன்.
காபி என்னும் திரைப்படத்தில் நான் ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வருகிறேன். சண்டை காட்சிகளுக்காக சிறப்பு பயிற்சி எடுத்து நடித்துள்ளேன். இப்படத்தை அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா எழுதி இயக்குகிறார்’. இவ்வாறு அவர் கூறினார்.
சுஜித் இயக்கத்தில் பிரபாஸ் - ஷ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சாஹோ’ படத்தில் இசையமைப்பதற்கு ஒப்பந்தமான சங்கர்-எஹ்ஸான்-லாய் படத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் அடுத்ததாக ‘சாஹோ’ படத்தில் நடித்து வருகிறார். சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
Thank you @ShankarEhsanLoy for all the support.. Means a lot.
— UV Creations (@UV_Creations) May 28, 2019
One of the nicest people to work with. Looking forward to working with you all soon.#Saaho
படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இப்படம் ஆகஸ்ட் 15-ந் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த படத்திற்கு இசையமைக்க இருந்த மூவேந்தர்களான சங்கர்-எஹ்ஸான்-லாய் படத்தில் இருந்து விலகியுள்ளனர். படக்குழு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

அவர்களுக்கு மாற்றாக வேறு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்வது குறித்து படக்குழு ஆலோசித்து வருகிறது. யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் அதிரடி படமாக உருவாகிறது. மதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை துபாயில் நடத்தியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகி இருக்கும் கீர்த்தி சுரேஷ், தமிழ் படங்கள் எதிலும் ஒப்பந்தமாகாத நிலையில், மும்பையில் குடியேற இருப்பதாக கூறப்படுகிறது.
இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமானாலும் ரஜினி முருகன் படம் மூலம் தான் கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகையானார். தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் சாவித்திரி வாழ்க்கை படத்தில் நடித்தார். யாரும் எதிர்பாராத வகையில் இந்த படத்துக்கும் கீர்த்தியின் நடிப்புக்கும் நாடு முழுக்க வரவேற்பு கிடைத்தது.
இந்த வரவேற்பால் திக்குமுக்காடி போன கீர்த்தி சுரேஷ் அடுத்த படத்தை தேர்வு செய்ய காலம் எடுத்துக்கொண்டார். தற்போது இந்தியில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து பாலிவுட் படங்களில் மட்டும் நடிக்க முடிவு செய்து இருக்கிறார்.

இதற்காக மும்பையில் ஒரு வீடு வாங்கியுள்ளார். அங்கு விரைவில் குடியேற இருப்பதாக தகவல் வருகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `தர்பார்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக மும்பை செல்லும் ரஜினிகாந்தை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்த இயக்குநர் சிறுத்தை சிவா அவரிடம் கதை கூறியிருப்பதாக கூறப்படுகிறது.
`பேட்ட' படத்தில் ரஜினிகாந்தின் துள்ளலான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `தர்பார்' படத்தில் போலீஸ் அதிகாரியாக அதிரடி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ரஜினிக்கு இரண்டு வேடங்கள் என்றும் கூறப்படுகிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு மே 29-ந் தேதி துவங்குகிறது.
இதற்காக ரஜினிகாந்த் இன்று மும்பை புறப்படுகிறார். இந்த நிலையில், விஸ்வாசம் படத்தின் இயக்குநர் சிவா, போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். இவர்களது சந்திப்பு சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக நடந்துள்ளது. எனவே ரஜினி - சிவா கூட்டணி விரைவில் இணைய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

முன்னதாக ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் சந்திப்பு நிகழ்ந்தது. தர்பார் படத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்றும் கூறுகிறார்கள். மேலும் பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், எச்.வினோத்திடமும் கதை கேட்டு வைத்திருக்கிறாராம்.
டெல்லியில் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க உள்ளேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்தல் வெற்றி மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி. தலைவனை முன்னிறுத்தி தான் வெற்றி கிடைக்கும்.
இந்திராகாந்தி, ராஜீவ் காந்தியை தொடர்ந்து மக்களை கவர்ந்த தலைவர் மோடி. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை நிலவியது. டெல்லியில் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க உள்ளேன்.
தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களால் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. எதிர்க்கட்சிகளின் வலுவான பிரசாரமும் அதிமுக கூட்டணி தோல்வியடைய காரணம்.
ராகுல் காந்தி பதவி விலக தேவையில்லை. எதிர்க்கட்சியின் செயல்பாடு முக்கியமானது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை.
கோதாவரி, கிருஷ்ணா நதிகளை இணைப்பதாக கூறிய நித்ன் கட்கரிக்கு பாராட்டுக்கள். நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகள் பெற்ற கமல்ஹாசனுக்கு பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.






