என் மலர்
சினிமா செய்திகள்
ரகுல் ப்ரீத் சிங் சிங் நடிப்பில் சூர்யாவின் என்ஜிகே படம் ரிலீசாகவிருக்கும் நிலையில், நல்ல கதைகளில் நடிக்க விரும்புவதாகவும், கவர்ச்சியாக நடிக்க தயார் என்றும் ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை ரகுல் பிரீத்திசிங். ‘தடையற தாக்க’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் நல்லவிதமாக அமைந்தது. கார்த்தியுடன் தொடர்ந்து ‘தேவ்’ படத்தில் நடித்தவர், தற்போது சூர்யாவுடன் ‘என்.ஜி.கே’ படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் வருகிற 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் ரகுல் இந்தியில் டெ டெ பியார் டெ என்ற படத்தில் அதிக கவர்ச்சியில் நடித்தார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ’நிறைய இயக்குனர்கள், நடிகர்களுடன் படம் பண்ணுகிறேன். எப்போதுமே முழுக் கதையையும் கேட்பேன். அதில் என் கதாபாத்திரம் எந்த அளவுக்கு அழுத்தமாக இருக்கிறது என்று பார்ப்பேன்.

எனக்கு கொஞ்சம் பிடிக்கவில்லை என்றாலும் அந்த படத்தில் கமிட் ஆகமாட்டேன். இந்தியில் நான் நடிச்ச `டெ டெ பியார் டெ’யில் கவர்ச்சி வேடம் பண்ணியிருக்கேன். காரணம், அந்த படத்துல எனக்கு முக்கியத்துவம் அதிகம். மொத்தம் மூணு கேரக்டர்களைச் சுத்திதான் படம் நகரும். தவிர, அது ஒரு சூப்பர் கேரக்டர். கிளாமர் இருக்கோ இல்லையோ... நல்ல கதைகள்தான் என் சாய்ஸ்’. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
கவர்ச்சிக்கு தயார் என்று கூறியதோடு படுகவர்ச்சியான படம் ஒன்றையும் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - அர்ஜுன் - ஆஷிமா நர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் `கொலைகாரன்' படத்தின் முன்னோட்டம்.
தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `கொலைகாரன்'.
விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஆஷிமா நர்வால் நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். அர்ஜூன், நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - முகேஷ், படத்தொகுப்பு - ரிச்சர்டு கெவின், இசை - சிமோன் கே.கிங், சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், நடனம் - கல்யாண், வெளியீடு - தனஞ்ஜெயன், தயாரிப்பு - பிரதீப், எழுத்து, இயக்கம் - ஆண்ட்ரூ லூயிஸ்.

படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, ‘எனக்கு ஒரு சைகாலஜிக்கல் பிரச்சினை இருக்கு. நான் நடிக்கும் போது எதிரில் இருப்பவர் நன்றாக நடித்தால் எனக்கு நடிக்க வராது. அவரை நான் ரசிக்க ஆரம்பித்துவிடுவேன். இளையராஜா இசையை ரசித்து தான் நான் இசையமைப்பாளர் ஆனேன். அதுபோல் தான் நல்ல நடிகர்களை பார்த்து, ரசித்து, இப்போது நடிகராகிவிட்டேன். ஆனால் நன்றாக நடிக்கிறேனா என எனக்கு தெரியவில்லை". இவ்வாறு அவர் கூறினார்.
கொலைகாரன் படம் ரம்ஜான் வெளியீடாக வருகிற ஜூன் 5-ந் தேதி திரைக்கு வருகிறது.
`கொலைகாரன்' படத்தின் டிரைலர்:
நடிகர் போஸ் வெங்கட் கன்னி மாடம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஈரநிலம்’ படத்தில் அறிமுகமாகி 60-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்திருப்பவர், போஸ் வெங்கட். இவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்துக்கு ‘கன்னிமாடம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களில் முடிந்தது. இதுபற்றி அவர் கூறியதாவது:-
“தயாரிப்பாளர் ஹஷீரின் முழு ஆதரவு இல்லாவிட்டால், 35 நாட்களில் படப்பிடிப்பை முடித்து இருக்க முடியாது. அவர் படைப்பு சுதந்திரத்தில் தலையிடவே இல்லை. ‘கன்னிமாடம்’ படம் மெட்ராஸ் என்றால் என்ன? என்பதை வரையறுக்கும். சாதிக்க நினைக்கும் கனவுகளோடு சென்னைக்கு வரும் இளைஞர்களை பற்றிய கதை, இது.

மேட்டுக்குப்பம், விஜயராகவபுரம், சூளைமேடு ஆகிய இடங்களில் அவர்கள் தங்குவது, பொதுவான விஷயம். இதற்காக சென்னையில் அந்த 3 இடங்களிலும் படப்பிடிப்பை நடத்தினோம். ஸ்ரீராம், காயத்ரி ஆகிய இருவரும் கதைநாயகன்-நாயகியாக நடித்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, படத்தொகுப்பு, குரல் சேர்ப்பு, பின்னணி இசை சேர்ப்பு ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.” என்றார்.
தனது பாடல்களை ‘96’ படத்தில் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இளையராஜா, அப்படி செய்வது இது அவர்களின் இயலாமை மற்றும் ஆண்மை இல்லாத்தனத்தை காட்டுவதாக கூறினார்.
இளையராஜா இசையமைத்த பாடல்கள் கச்சேரிகளில் பாடப்பட்டு வந்தன. இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். தனது பாடல்களை அனுமதி இல்லாமல் மேடை கச்சேரிகளில் பாடக்கூடாது என்று அறிவித்தார். மீறி பாடினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
வெளிநாடுகளில் இளையராஜா இசையில் உருவான பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடி வந்தார். அவருக்கும் இளையராஜா நோட்டீசு அனுப்பினார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் திரைக்கு வந்த சில படங்களில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. விஜய் சேதுபதி, திரிஷா நடித்து திரைக்கு வந்த ‘96’ படத்திலும் இளையராஜாவின் பழைய பாடல்களை பயன்படுத்தி இருந்தார்கள். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

அந்த படத்தில் “எனது பாடல்களை பயன்படுத்தியது தவறு. அந்த காலத்துக்கு தகுந்தாற்போன்ற பாடலை இசையமைத்து இருக்கலாமே. இது அவர்களின் இயலாமை மற்றும் ஆண்மை இல்லாத்தனம்” என்று சாடினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இளையராஜாவின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின.
இந்த நிலையில் ‘96’ படத்தில் பணியாற்றிய ஒருவர் ‘96’ படத்தில் நாங்கள் பயன்படுத்திய இளையராஜாவின் ஒவ்வொரு பாடலுக்கும் அனுமதி பெறப்பட்டது. அந்த பாடல்களுக்கு ராயல்டியும் கொடுக்கப்பட்டது என்று ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.
துருவங்கள் பதினாறு பட இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு மாஃபியா என்று தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
`தடம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் `அக்னிச் சிறகுகள்', `சாஹோ' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. `பாக்ஸர்' மற்றும் கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடிக்க இருக்கிறார். `துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்திலும் நடிக்கிறார்.
குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்திற்கு `மாஃபியா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். வில்லனாக நடிக்க பிரசன்னாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்த கார்த்திக் நரேன் திட்டமிட்டுள்ளார்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் - வித்யா பாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் பாலிவுட் பிரபலம் ஒருவர் இணைந்திருக்கிறார்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 59-வது படமாக உருவாகி வருகிறது ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.
இதில் அஜித் ஜோடியாக வித்யா பாலன், முக்கிய வேடங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் கே கே மேனன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இவர் இதற்கு முன்பாக உதயம் என்.எச்.4, காஸி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். பல்வேறு இந்தி படங்களிலும் நடித்து பாராட்டுக்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் பிசியாக நடித்து வரும் தமன்னா, தன்னுடைய ரசிகர்களிடையே தத்துவங்களை பகிர்ந்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் பிசியாக நடித்து வருபவர் தமன்னா. இவர் ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டவர். அதிலும் தத்துவ புத்தகங்களை விரும்பி படிக்கிறார். தத்துவத்தில் பெரிய நாட்டம் கொண்ட தமன்னா தன் சமூக வலைதளப்பக்கத்தில் தினம் ஒரு தத்துவம் என நிறைய தத்துவங்களை எழுதி பகிர்கிறார்.
ஆனால் இதை தமிழர்களால் வாசிக்க முடியாது. பெரும்பாலும் இந்தியில்தான் தத்துவங்களை போடுகிறார். இந்தி தெரிந்தவர்கள் தத்துவங்களை வாசிக்கலாம்.

தமன்னா நடிப்பில் தற்போது ‘தேவி 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
அனுசரண் முருகையா இயக்கத்தில், யோகிபாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ‘பன்னிகுட்டி’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் கருணாகரன், யோகிபாபு இருவரும் ‘பன்னிகுட்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து பின்னணி வேலைகளில் தீவிரம் காட்ட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அனுசரண் முருகையா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கருணாகரன், யோகிபாபுவுடன் சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி, டிபி.கஜேந்திரன், லட்சுமி ப்ரியா, ராமர், தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் கே இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து, அஜித் அடுத்ததாக போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.
விஸ்வாசம் படத்தில் உடல் தோற்றத்தை குண்டாக்கி வெள்ளை முடி தோற்றத்தில் நடித்த அஜித், தற்போது போனிகபூர் தயாரிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கோட்டு சூட்டு அணிந்து தனது தோற்றத்தை டிப் டாப்பாக காட்டியிருக்கிறார்.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க தன்னை தயார்படுத்தி வருகிறார் அஜித். இப்படத்திற்காக உடல் எடையை குறைக்க இயக்குனர் கேட்டுக் கொண்டதை அடுத்து ஜிம்மிலேயே கிடந்து தனது உடல் எடையை நிறையவே குறைத்திருக்கிறார்.

90களில் பார்த்தது போல் தற்போது கனக்கச்சிதமாக உடல் தோற்றத்தை வடிவமைத்திருக்கும் அஜித் அந்த தோற்றத்துடன் வெளியிடங்களில் நடமாடத் தொடங்கியிருக்கிறார்.
பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் தந்தையும் ஸ்டண்ட் மாஸ்டருமான வீரு தேவ்கன், உடல் நலக்குறைவு காரணமாக இன்று மும்பையில் காலமானார்.
பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் தந்தை வீரு தேவ்கன் இன்று காலமானார். 1941-ல் பஞ்சாபில் பிறந்த வீரு தேவ்கன் 80-க்கும் மேற்பட்ட இந்திப் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். 1999-ம் ஆண்டு ஹிந்துஸ்தான் கி கசம் என்ற படத்தை இயக்கி தயாரித்தார். இந்தப் படத்தில் அஜய் தேவ்கன், அமிதாப்பச்சன், மனீஷா கொய்ராலா, சுஷ்மிதா சென் போன்றோர் நடித்திருந்தனர். மேலும் ஒரு சில சில படங்களில் வீரு தேவ்கன் நடித்தும் இருக்கிறார்.
உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வீரு தேவ்கன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

வீரு தேவ்கனுக்கு வீணா தேவ்கன் என்ற மனைவியும், அஜய் தேவ்கன், அனில் தேவ்கன் என்ற இரண்டு மகன்களும், நீலம், கவிதா என இரண்டு மகள்களும் உள்ளனர்.
‘மான்ஸ்டர்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா பேசிய எஸ்.ஜே.சூர்யா, என்னை எலி மாமா என்று அழைக்கிறார்கள் என்று நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மான்ஸ்டர்’. நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில், ‘மான்ஸ்டர்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, ‘முதல் வாரம் வெற்றி, இரண்டாவது வாரம் இரட்டிப்பு வெற்றியானதில் மகிழ்ச்சி. நாயகனைத் தேர்ந்தெடுத்து படம் பார்க்கும் காலத்தில், கதைக்காக பார்க்க வருகிறார்கள் மக்கள். இப்படத்தில் கதைதான் நாயகன்.
அனைத்து திரையரங்கிலும் சென்று பார்த்தோம். தாத்தா, பாட்டி, குழந்தைகள் என்று குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். என்னைப் பார்த்து எலி மாமா என்று ஒரு குழந்தை கூறினான். அந்தச் சிறுவனை புகைப்படம் எடுத்து எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்.

இம்மாதிரி குழந்தைகளைப் பார்க்கும்போது இன்னும் 10 வருடங்கள் இதேபோல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன். பாகுபலிக்கு பிறகு இப்படத்திற்கு தான் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
எந்த உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற வள்ளலாரின் வரிகள் குழந்தைகள் மனதில் ஆழமாக பதியச் செய்ததே இயக்குநரின் வெற்றி. குழந்தைகள் மனதில் அன்பை விதைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன். இதே குழுவுடன் மீண்டும் ஒரு படம் நடிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்’ என்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகி இருக்கும் ‘பிஎம் நரேந்திர மோடி’ படத்தின் வசூல் நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வெளியாகி இருக்கிறது. ஓமங்குமார் இயக்கி உள்ள இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் மோடியாக நடித்துள்ளார்.
‘பிஎம் நரேந்திர மோடி’ என்று பெயரிடப்பட்ட இந்த படம் கடந்த ஏப்ரல் 12-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் நேரம் என்பதால் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மே 24-ந்தேதி படம் திரைக்கு வந்தது.
ரெயில் நிலையத்தில் டீ விற்பனை செய்து வந்த மோடி எப்படி கடுமையாக உழைத்து பிரதமர் ஆனார் என்பதை பற்றி படம் விளக்குகிறது. நரேந்திர மோடியின் நல்லப் பக்கங்கள் மட்டுமே படத்தில் பேசப்படுகிறது. அமித்ஷா வேடத்தில் மனோஜ் ஜோஷியும், மோடியின் அப்பாவாக ராஜேந்திர குப்தாவும் நடித்துள்ளனர்.

பா.ஜனதா தலைவர்கள் பிஎம் நரேந்திர மோடி படத்தை பாராட்டினாலும் பொதுவெளியில் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை. பெரும்பாலான விமர்சகர்கள் படத்துக்கு குறைந்த மதிப்பெண்களே வழங்கி இருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படம் மூன்று நாட்களில் நாடு முழுவதும் சேர்த்து ரூ.11.14 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாளில், ரூ.2.88 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.3.76 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.4.50 கோடியும் வசூல் செய்துள்ளது.
வரும் வாரங்களில் இந்த வசூல் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களிடம் போதிய வரவேற்பு இல்லாததே படம் தோல்வி அடைய காரணம் என்கிறார்கள்.






