என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகி இருக்கும் ‘பிஎம் நரேந்திர மோடி’ படத்தின் வசூல் நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வெளியாகி இருக்கிறது. ஓமங்குமார் இயக்கி உள்ள இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் மோடியாக நடித்துள்ளார்.

    ‘பிஎம் நரேந்திர மோடி’ என்று பெயரிடப்பட்ட இந்த படம் கடந்த ஏப்ரல் 12-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் நேரம் என்பதால் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மே 24-ந்தேதி படம் திரைக்கு வந்தது.

    ரெயில் நிலையத்தில் டீ விற்பனை செய்து வந்த மோடி எப்படி கடுமையாக உழைத்து பிரதமர் ஆனார் என்பதை பற்றி படம் விளக்குகிறது. நரேந்திர மோடியின் நல்லப் பக்கங்கள் மட்டுமே படத்தில் பேசப்படுகிறது. அமித்ஷா வேடத்தில் மனோஜ் ஜோஷியும், மோடியின் அப்பாவாக ராஜேந்திர குப்தாவும் நடித்துள்ளனர்.



    பா.ஜனதா தலைவர்கள் பிஎம் நரேந்திர மோடி படத்தை பாராட்டினாலும் பொதுவெளியில் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை. பெரும்பாலான விமர்சகர்கள் படத்துக்கு குறைந்த மதிப்பெண்களே வழங்கி இருக்கின்றனர்.

    இந்நிலையில் இந்த படம் மூன்று நாட்களில் நாடு முழுவதும் சேர்த்து ரூ.11.14 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாளில், ரூ.2.88 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.3.76 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.4.50 கோடியும் வசூல் செய்துள்ளது.

    வரும் வாரங்களில் இந்த வசூல் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களிடம் போதிய வரவேற்பு இல்லாததே படம் தோல்வி அடைய காரணம் என்கிறார்கள்.
    சிம்பு மற்றும் பிரபுதேவா படங்களில் நடித்த நடிகை அடா சர்மா தற்போது பத்திரிகை ஒன்றுக்காக வித்தியாசமான போட்டோசூட் ஒன்றை எடுத்துள்ளார்.
    சிம்பு - நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அடா சர்மா. இவர் கடைசியாக பிரபுதேவாவுடன் இணைந்து `சார்லி சாப்ளின்-2' படத்தில் நடித்திருந்தார்.

    மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இந்தி, தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம். 



    தற்போது இவர் பத்திரிகை ஒன்றுக்காக வித்தியாசமான போட்டோசூட் ஒன்றை எடுத்துள்ளார். அதை வீடியோவாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் அதா சர்மா. ஒற்றை கையில் தலைகீழாக நிற்கும் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
    சைலன்ஸ் என்ற படத்தில் நடித்து வரும் அனுஷ்கா, மாதவனுக்கு அமெரிக்கா செல்வதில் விசா சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    அனுஷ்கா சைலன்ஸ் என்ற புதிய படத்தில் மாதவனுடன் இணைந்து நடிப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. மாதவனுடன் ரெண்டு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அனுஷ்கா நீண்ட இடைவெளிக்குப் பின் அவருடன் இணைந்து நடிக்கிறார். 

    இவர்களுடன் ஷாலினி பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சனும் படக்குழுவில் இணைந்துள்ளார். ஹேமந்த் மதுகர் இயக்கும் இந்த படத்தில் அமெரிக்காவில் கதை நடைபெறுவதாக அமைக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு அங்கு தொடங்கியது. 



    தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு நிசப்தம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தை அடுத்த ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே அனுஷ்கா - மாதவன் அமெரிக்கா செல்வதில் விசா சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    மேயாத மான் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை இந்துஜா தன்னுடைய உடல் எடையை குறைக்க முயற்சி செய்து வருவதாக கூறியிருக்கிறார்.
    மேயாத மான் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை இந்துஜா அடுத்து ஆர்யாவுக்கு ஜோடியாக மகாமுனி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஒரு குழந்தைக்கு அம்மா வேடம். 

    சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், ‘இந்த படத்தில் நடித்துக்கொண்டு இருந்தபோதுதான் ஆர்யாவுக்கு திருமணம் ஆனது. அவருடன் பேசுவதற்கு நேரம் இல்லை. திரவம் என்ற இணைய தொடரில் வக்கீலாக நடித்துள்ளேன். இடையில் கொஞ்சம் குண்டாகி விட்டேன். இப்போது எடையை குறைக்க முயற்சி செய்துவருகிறேன். வெளிநாட்டுக்கு போய் எடையை குறைக்கவில்லை. இங்கேயே குறைத்தேன். 



    முன்பெல்லாம் தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் குண்டாக இருந்தால் பிடிக்கும். ஆனால் இப்போது மும்பை நடிகைகளை போல ஒல்லியாக எதிர்பார்க்கிறார்கள். கடந்த ஒரு ஆண்டில் சில படங்களை இழந்துவிட்டேன். வரும் ஆண்டுகளில் நிறைய படங்களில் என்னை பார்க்கலாம்’. இவ்வாறு அவர் கூறினார்.
    காப்புரிமை பிரச்சனையால் இளையராஜா - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், இன்று இருவரும் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
    இசை அமைப்பாளர் இளையராஜா ‘காப்புரிமை பெறாமல் என் பாடலை கச்சேரிகளில் பாடக்கூடாது’ என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதால், இளையராஜா-எஸ்.பி.பி. இடையே பிரிவு ஏற்பட்டது. இதனால் இசை ரசிகர்கள் வேதனை அடைந்தனர்.

    இந்த நிலையில், இன்று இருவரும் சந்தித்து கட்டித்தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    இளையராஜாவின் பிறந்தநாளான வரும் ஜூன் 2-ந் தேதி சென்னையில் நடக்க இருக்கும் இளையராஜாவின் கச்சேரியில் எஸ்.பி.பி பாடவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஒத்திகை வரும் மே 22-ந்தேதி முதல் தொடங்க இருக்கிறது. எஸ்.பி.பி மட்டுமல்லாது யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ உட்பட பல முன்னணி பாடகர்கள் பங்கேற்று பாட இருக்கின்றனர்.

    ராயல்டி பிரச்சினையால் பேசாமல் இருந்து வந்த இந்த இரண்டு இசைக்கலைஞர்களும் ஒரு வழியாக இணைந்து ஒரே மேடையில் இசைக் கச்சேரியில் தோன்றுவது இசை ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.

    சிம்புவின் மன்தமன் படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமான சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் நிலையில், சிம்பு இயக்கும் புதிய படத்திலும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
    சிம்பு 14 ஆண்டுகளுக்கு முன் இயக்கிய திரைப்படம் `வல்லவன்'. நயன்தாரா, ரீமா சென் நடித்த இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் பிரிந்தனர். 

    இந்த படத்துக்கு பிறகு அவர் எந்த படத்தையும் இயக்காமல் இருந்தார். தற்போது சினிமாவில் அதிக கவனம் செலுத்தும் சிம்பு அடுத்து இயக்கத்திலும் இறங்க இருக்கிறார். சிம்பு இயக்கும் படத்துக்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன. இதில் சிம்புவுடன் சந்தானமும் இணைந்து நடிக்கிறார்.



    சிம்பு தற்போது ஹன்சிகாவின் மஹா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுதவிர வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்திலும், மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    `அஞ்சாதே' படத்தில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய நடிகர் பிரச்சனா, தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.
    `துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக `நரகாசூரன்' என்ற படத்தை இயக்கினார். பைனான்ஸ் பிரச்சனையால் அந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக `நாடக மேடை' என்ற படத்தை இயக்குவதாக அறிவத்தார். அந்த படம் பாதியில் நிற்கிறது.

    இந்த நிலையில், அவரது அடுத்த படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கிறார். குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரசன்னாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் முன்னதாக அஞ்சாதே, முரண் உள்ளிட்ட படங்களில் வில்லத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திரவம் என்ற இணைய தொடரில் நடித்து வருகிறார்.



    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா - சாய் பல்லவி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் `என்ஜிகே' படத்தின் முன்னோட்டம்.
    ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள படம் `என்ஜிகே'.

    சூர்யா நாயகனாகவும், சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நாயகிகளாகவும், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - சிவகுமார் விஜயன், படத்தொகுப்பு - பிரவீன்.கே.எல்., இசை - யுவன் ஷங்கர் ராஜா, பாடல்கள் - வைரமுத்து, உமாதேவி, ஒலி வடிவமைப்பு - ஹரிஹர சுதன், கலை இயக்கம் - ஆர்.கே.விஜய் முருகன், ஆடை வடிவமைப்பு - நீராஜா கோனா, பெருமாள் செல்வம், சண்டைப்பயிற்சி - அனல் அரசு, ஸ்டன்னர் சாம், தயாரிப்பு - எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு, எழுத்து, இயக்கம் - செல்வராகவன்.



    படம் பற்றி நடிகை சாய் பல்லவி கூறியதாவது,

    படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பிறகு அவர் சொல்வதைக் கேட்டு நடித்தால் தான் சரியாக இருக்கும். ஒரு வசனத்திற்கு எப்படி முகபாவனை செய்ய வேண்டும்? எப்படி அழ வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக சொல்லிக் கொடுப்பார். அவர் நினைக்கும் நடிப்பு நம்மிடம் வரும்வரை விடமாட்டார் என்றார்.

    படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    என்ஜிகே டிரைலர்:

    கய் ரிட்சி இயக்கத்தில் மெனா மசூத் - நாமி ஸ்காட் - வில் சுமித் நடிப்பில் வெளியாகி இருக்கும் `அலாதின்' படத்தின் விமர்சனம்.
    நாயகன் மெனா மசூத், அவரது குரங்குடன் சேர்ந்து சிறிய அளவில் திருடி தனது பிழைப்பை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அக்ரபா ராஜ்ஜியத்தின் இளவரசியான நாமி ஸ்காட் மாறுவேடத்தில் ஊருக்குள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாள். அப்போது மெனா மசூத்துடன், நாமி ஸ்காட்டுக்கு பழக்கம் ஏற்படுகிறது. 

    நாமி ஸ்காட் இளவரசி என்று அறியாமல் அவருடன் பழக ஆரம்பிக்க, இருவரும் புரிதலில் வரும் வேளையில் இளவரசியின் காப்பு காணாமல் போகிறது. இளவரசியின் காப்பை தனது குரங்கு திருடியதை அறிந்து மெனா மசூத் அதனை திரும்ப கொடுப்பதற்காக அரச காவல்களை தாண்டி அரண்மனைக்குள் செல்கிறார்.



    இது அந்த நாட்டு சுல்தானின் முக்கிய ஆலோசகரான மர்வான் கென்சாரிக்கு தெரிய வருகிறது. இதையடுத்து மெனா மசூத் மூலம் குகையில் இருக்கும் அற்புத விளக்கை எடுக்க மர்வான் முடிவு செய்கிறார். அவர் மூலமாக நாமி ஸ்காட் இளவரசி என்பதும் தெரியவருகிறது. பின்னர் மர்வானின் ஆலோசனையின் பேரில், அந்த குகைக்கு செல்லும் மெனா மசூத், விளக்கை எடுத்துக் கொண்டு வெளியே வர, அற்புத விளக்கை வாங்கிவிட்டு நாயகனை குகைக்குள் தள்ளிவிடுகிறார் மர்வான்.

    இதற்கிடையே மர்வான் வாங்கிய விளக்கை குரங்கு திருடி விடுகிறது. அந்த விளக்கை தேய்க்க விளக்கில் இருந்து வெளியே வரும் வில் சுமித் மெனா மசூத்துக்கு மூன்று வரங்களை அளிக்கிறார்.



    இளவரசியை கரம்பிடிக்க நினைக்கும் மெனா மசூத், அதில் ஒரு வரத்தின் மூலம் ராஜாவாகிறார். பின்னர், மெனா மசூத், இளவரசியை பெண் பார்க்க செல்ல அந்த அற்புத விளக்கு மெனா மசூத்திடம் இருப்பது மர்வானுக்கு தெரிய வருகிறது.

    கடைசியில், மெனா மசூத் - இளவரசியுடன் சேர்ந்தாரா? மர்வான் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டாரா? ஜீனியான வில் சுமித்துக்கு விடுதலை கிடைத்ததா? என்பதே அலாதின் படத்தின் மீதிக்கதை.



    மெனா மசூத், நாமி ஸ்காட் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து மனதில் பதிகின்றனர். வில் சுமித் தனது அலாதியான காமெடி பேச்சால் ரசிக்க வைக்கிறார். மர்வான் கென்சாரி ஆசை கலந்த வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

    அலாவுதீன் கதையை தற்போதைய தொழில்நுட்பத்தின் மூலம் வண்ணமயமாக கொடுத்திருக்கிறார் கய் ரிட்சி. படத்தில் வசனங்கள் கூட பாடல்களாகவே நகர்கின்றன. படத்தின் தொடக்கமும், முடிவும் ஒரே புள்ளியில் இருப்பது சிறப்பு. தமிழ் வசனங்கள், பாடல் வரிகள் என அனைத்துமே ரசிக்கும்படியாக உள்ளன.

    ஆலன் மென்கெனின் இசையும், ஆலன் ஸ்டீவார்ட்டின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம்.

    மொத்தத்தில் `அலாதீன்' அற்புதம்.

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    இயக்குநர் மணிரத்னமின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா ஷெட்டியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படக்குழு நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

    விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளனர். கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நாயகிகளாக நடிக்க, சத்யராஜ், மோகன் பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



    ஆதி, அமலாபாலிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விளையாட்டு படமொன்றில் நடிக்கும் ஆதி அதற்காக தனது உடல் எடையை குறைத்து வருவதால் அவர் படத்தில் ஒப்பந்தமாகவில்லை என்று கூறப்படுகிறது.

    மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீசுடன் பிரபல தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்திற்கான முதற்கட்ட பணிகளில் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் நிலையில், படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்க இருக்கிறது. 

    யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் ‘மஹா’ படத்தின் படப்பிடிப்பில் ஹன்சிகாவுடன் சிம்பு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மஹா’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் ஜமீல் மற்றும் ஹன்சிகாவுடன் சிம்பு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிம்பு - ஹன்சிகா இந்த படத்தில் கணவன் - மனைவியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.



    வாலு படத்தில் நடித்த போது சிம்பு, ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மனகசப்பு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது. அதன்பின்னர் இருவருமே தங்களது படங்களில் கவனம் செலுத்தத் துவங்கினர்.

    சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்திலும், மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க இருக்கிறார். இதில் மாநாடு படத்திற்காக வெளிநாடு சென்று தனது உடல் எடையை குறைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கசட தபற' படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் இணைந்துள்ளனர்.
    பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற'. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. 

    அந்த ஆறு முக்கிய கதாபாத்திரங்களில் சந்தீப் கிஷன், சாந்தணு, ஹரிஷ் கல்யாண், ரெஜினா கசாண்ட்ரா, விஜயலட்சுமி மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி நடித்துள்ளனர்.



    திரைக்கதை 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம்.சி.எஸ்., பிரேம்ஜி, ஷான் ரோல்டன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்களும், மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் உள்ளிட்ட 6 படத்தொகுப்பாளர்களும், பாலசுப்ரமணியம், எம்.எஸ்.பிரபு, விஜய் மில்டன், ஆர்.டி.ராஜசேகர், சக்தி சரவணன், எஸ்.ஆர்.கதிர் உள்ளிட்ட 6 ஒளிப்பதிவாளர்களும் படக்குழுவில் இணைந்துள்ளனர்.


    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

    ×