search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "director bharathiraja"

    தியேட்டர் அதிபர்கள் புதிய விகிதாசார முறையை செயல்படுத்தினால், அவர்களின் முடிவை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்று இயக்குனர் பாரதிராஜா கூறியிருக்கிறார்.
    சென்னை:

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஒரு சரியான தலைமை இல்லாத சூழ்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் எதிர்காலத்தை சூறையாடக்கூடிய ஒரு அபாயகரமான செயல் திட்டத்தை திருப்பூர் சுப்பிரமணியம் தலைமையில் இயங்குகிற தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    அந்த அறிக்கையின்படி, ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கு முதல் வாரத்தில் 60 சதவீத வசூலையும், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோரின் படங்களுக்கு 55 சதவீத வசூலையும், மற்ற நடிகர்களின் படங்களுக்கு 50 சதவீத வசூலையும், அந்த படத்தை வினியோகம் செய்பவர்களுக்கு இவர்கள் தருவார்களாம். இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    இந்த விகிதாசார முறை மட்டும் அமலுக்கு வருமானால், ஏற்கனவே மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் வர்க்கம் அடியோடு அழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது.



    இப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும், நிர்வாகிகளும் இல்லை என்றாலும், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு குழு இருக்கிறது. ஆகவே திரையரங்கு உரிமையாளர்கள் புதிதாக எந்த ஒரு முடிவை எடுத்தாலும், அதைப்பற்றி அந்த குழுவோடு கலந்து ஆலோசித்துவிட்டு, அதற்கு பின்னர் அந்த முடிவுகளை பற்றி தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

    தயாரிப்பாளர்களின் இந்த நியாயமான வேண்டுகோளை அறிவிப்பதுதான் முறையாக இருக்கும். இவை எல்லாவற்றையும் மீறி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டால், இந்த முடிவுகளை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்படுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

    இவ்வாறு அந்த அறிக்கையில் பாரதிராஜா கூறியிருக்கிறார்.

    வன்முறையை தூண்டும் விதமாக பேட்டியளித்த இயக்குநர் பாரதிராஜா மீது திருவல்லிக்கேணி போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். #Bharathiraja
    சென்னை:

    சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் நாராயணன். இவர் இந்து மக்கள் முன்னணியின் மாநில அமைப்பாளர் ஆவார். இவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார்.

    அந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:

    இயக்குனர் அமீருக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த இயக்குனர் பாரதிராஜா தமிழக அரசை மிரட்டும் விதமாகவும், தேசத்துக்கு விரோதமாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் மாவோயிஸ்டு மற்றும் நக்சலைட்டு இயக்கம் எதுவும் இல்லை என்றும், அப்படியொரு சூழலை ஏற்படுத்தி விடாதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே வடபழனி போலீஸ் நிலையத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    எனவே, மீண்டும் வன்முறையை தூண்டும் வகையில் பேட்டி கொடுத்துள்ளதால் பாரதிராஜா மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தார்.

    அந்த புகாரின் அடிப்படையில், இயக்குநர் பாரதிராஜா மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், மக்களையும் அரசையும் அச்சுறுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் நேற்று இரவு வழக்குப் பதிவுசெய்தனர்.
    ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று டைரக்டர் பாரதிராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ‘‘தடை அதை உடை’’ என்ற பெயரில் இசை ஆல்பம் இன்று வெளியிடப்பட்டது. சுமார் 4 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் டைரக்டரும் நடிகருமான அமீர், நடிகர்கள் விதார்த், அருள்தாஸ், சவுந்தர பாண்டியன், விஷ்வாந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்த இசை ஆல்பத்தை டைரக்டர் பாரதிராஜா வெளியிட்டார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், டிராபிக் ராமசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திற்கு எதிராக இத்தனை அடக்குமுறைகள் ஏன்? எமர்ஜென்சி காலத்தை விட இப்போது தான் தமிழகத்தில் அதிகமாக குண்டர் சட்டம் ஏவி விடப்படுகிறது, கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.

    தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது. இது தொடர்ந்தால் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், தமிழக அரசின் நடவடிகைகளுக்கு எதிராகவும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். அது அறவழியில் வித்தியாசமான போராட்டமாக இருக்கும். தமிழக அரசால் அந்த போராட்டத்தை தாங்கிக் கொள்ள முடியாது.

    பின்னர் பாரதிராஜாவிடம் சீமான் மீது போடப்பட்டுள்ள வழக்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-



    திருச்சியில் ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சியினர் மோதிக் கொண்டதில் சீமான் ஆதரவாளர்களை மட்டும் கைது செய்திருப்பது ஏன்? வைகோ மீது மட்டும் வழக்கு பதிவு செய்யாதது ஏன்? சீமானை கைது செய்ய போலீசார் அவரை தேடி வருகிறார்கள். எங்களது வலிமையையும், சக்தியையும் அடக்குவதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் பேசிய வேல்முருகனும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்ற தடியடிக்கு கண்டனம் தெரிவித்தார்.

    அவர் கூறும்போது தூத்துக்குடி மக்கள் 100 நாட்களாக போராட்டம் நடத்தியும் அரசு செவி சாய்க்காததால் இன்று தீவிரமாக குரல் எழுப்பி உள்ளனர். அவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இந்த பாடலை அந்தோனி தாசன் பாடி உள்ளார். பிரவீன் இசை அமைத்துள்ளார். மதன் இயக்கி உள்ளார்.

    ×