என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இரண்டாவது லுக் போஸ்டரின் மூலம் `மெர்சல்' படத்தில் விஜய்யின் மற்றொரு கதாபாத்திரம் என்னவென்பது தெரிய வந்துள்ளது.
    அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61-வது படத்திற்கு `மெர்சல்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாகவே `மெர்சல்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. `மெர்சல்' போஸ்டரில், பாய்ந்து வரும் ஜல்லிக்கட்டு காளைகளைகளுக்கு நடுவே விஜய் முறுக்கு மீசையுடன் `மெர்சல்' லுக்கில் நிற்பது போல அந்த போஸ்டர் இருந்தது.

    மேலும் `மெர்சல்' என்ற தலைப்பின் முதல் எழுத்து ஜல்லிக்கட்டு காளையின் கொம்பில் ஆரம்பித்து வாலில் முடிவது போல அதன் லோகோ இருக்கிறது. படத்தில் ஜல்லிக்கட்டுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை தலைப்பு மற்றும் போஸ்டரை பார்க்கும் போதே தெரிகிறது.



    அதனைத் தொடர்ந்து விஜய் பிறந்தநாளான இன்று `மெர்சல்' படத்தின் இரண்டாவது போஸ்டரும் வெளியானது. அதில் விஜய் ஒரு சிவப்பு நிற கோட்டுடன் சீட்டுக்கட்டுகளை சிதற விடுகிறார். அவரது பின்னணியில் ஒரு கவர்ச்சிகரமான மாயை இருப்பது போல அந்த போஸ்டர் இருக்கிறது. மேலும் அந்த போஸ்டரில் விஜய்யின் கண்களை உற்று கவனிக்கும் போது, அவரது கண்களில் ஒரு ஈர்ப்பு இருப்பதும் தெரிகிறது. இதிலிருந்து படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் விஜய் ஒரு ஒரு மேஜிக் கலைஞர் என்பதை ஊகிக்க முடிகிறது.

    விஜய் நடிக்கும் மூன்று கதாபாத்திரங்களில் ஒன்று ஊர் தலைவர், மற்றொன்று மருத்துவர் என்பதை நாம் முன்னதாகவே பார்த்திருந்தோம். விஜய்யின் மூன்றாவது கதாபாத்திரம் என்னவென்பது ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், போஸ்டரின் மூலமாக அந்த கதாபாத்திரம் குறித்த தகவலும் தற்போது உறுதியாகியுள்ளது.



    இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடித்து வருகின்றனர். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, சத்யன், ஹரீஷ் பேரடி, யோகி பாபு, கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

    ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு `இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

    `மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.
    ஏ.எஸ். தமிழ்ச்செல்வன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் ‘கிடா விருந்து’ படத்தின் முன்னோட்டம்.
    கே.பி.என்.சினி சர்க்யூட் தயாரிக்கும் படம் ‘கிடா விருந்து’. இதில் எஸ்.பி. பிரசாத், ஷாலினி, கஞ்சா கருப்பு, ரஞ்சன், கே.பி.என். மகேஷ்வர், சேரன்ராஜ் , தங்கம், தமிழ், மணிமாறன், ‘வீரம்’ சையது, சுகி, ராணி,சுமிதா, அர்ச்சனா, திலக், அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - எஸ்.ஆர்.வெற்றி, இசை - ‘பிரின்ஸ்’ நல்ல தம்பி, எடிட்டிங் - கோபால், தயாரிப்பு - கே.பி.என்.மகேஸ்வர், இணை தயாரிப்பு - எஸ்.பி. பிரசாத், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஏ.எஸ். தமிழ்ச்செல்வன்.



    “ஒரு செல்வந்தரின் பிள்ளைகளான 4 பேர் பொறுப்பின்றி சுற்றித் திரிகிறார்கள், இவர்கள் ஒரு சமயத்தில் நிலை தடுமாறுகிறார்கள். அப்போது தங்களைப் பற்றி உணர்கிறார்கள். அதிலிருந்து மீண்டார்களா? பழைய நிலைக்கு திரும்பினார்களா? என்பதே கதை” என்றார்.

    படப்பிடிப்பு மேட்டூர் சேலம், கொளத்தூர், குருமனூர், மலைக் கிராமங்களில் 45 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது.
    "பிரியா'' படத்துக்கு முதன் முதலாக "ஸ்டீரியோ'' முறையில் பாடல்களை பதிவு செய்தார், இளையராஜா. அந்தப் பாட்டைக் கேட்ட பிரபல இந்தி இசை அமைப்பாளர் சலீல் சவுத்ரி, "இதுபோன்ற திரை இசையை இதுவரை நான் கேட்டது இல்லை'' என்று பாராட்டினார்.
    "பிரியா'' படத்துக்கு முதன் முதலாக "ஸ்டீரியோ'' முறையில் பாடல்களை பதிவு செய்தார், இளையராஜா. அந்தப் பாட்டைக் கேட்ட பிரபல இந்தி இசை அமைப்பாளர் சலீல் சவுத்ரி, "இதுபோன்ற திரை இசையை இதுவரை நான் கேட்டது இல்லை'' என்று பாராட்டினார்.

    திலீப்குமார் - வைஜயந்திமாலா நடித்த "மதுமதி'' உள்பட ஏராளமான இந்திப் படங்களுக்கு இசை அமைத்தவர் சலீல் சவுத்ரி. தென்னாட்டில் இருந்து முதன் முதலாக ஜனாதிபதியின் தங்கப்பதக்கம் பரிசு பெற்ற "செம்மீன்'' மலையாளப் படத்துக்கு இசை அமைத்தவரும் அவர்தான்.

    தனது இசைப்பயணம் குறித்து இளையராஜா தொடர்ந்து கூறியதாவது:-

    "முள்ளும் மலரும்'' படத்தில் டைரக்டர் மகேந்திரன் முடிவு செய்த இடைவேளை வேறு. இப்போது தியேட்டரில் பார்த்த இடைவேளை வேறு.

    இதனால் என்னைவிட, டைரக்டர் மகேந்திரன் அதிகம் அதிர்ந்து போனார். அதற்கப்புறம் படம் பார்க்கப் பிடிக்காமல் நாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்குத் திரும்பிவிட்டோம்.

    தியேட்டர் முதலாளி தன் வீட்டில் சமைத்த சாப்பாட்டுடன் எங்களைப் பார்க்க வந்திருந்தார்.

    அவரைப் பார்த்ததும் மகேந்திரன் கோபமாக, "என்ன சார் இது! இடைவேளை இந்த இடத்தில் இல்லையே! எப்படி மாறியது?'' என்று கேட்டார்.

    தியேட்டர் அதிபரோ எங்கள் டென்ஷனை கண்டுகொள்ளாமல் "ஓ! அதுவா... சார்! உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். நம்ம தியேட்டர் ஆபரேட்டர் இருக்கிறானே, அவன் ஒரு டைரக்டருக்கு மேல சார்! சொன்னா நம்பமாட்டீங்க. இந்த படத்துல இடைவேளை போடற இடம் சரியில்லை. ரஜினி மேல லாரி ஏறுகிற மாதிரி ஒரு சீன். அப்ப இடைவேளை போட்டாத்தான் "ரஜினிக்கு என்னாச்சு?'' என்ற பதட்டத்தோடு படத்தைப் பார்ப்பார்கள். அப்படிப் பார்க்கும்போது "கை மட்டும்தான் போய்விட்டது'' என்று காட்டினால் ஒரு `பஞ்ச்' இருக்கும் என்றான் சார்! சொன்னது சொன்னபடி சீனை கட் பண்ணி முன்னே பின்னே போட்டு எப்படி சூப்பரா பண்ணியிருக்கான் பார்த்தீங்களா? அதனாலதான் நான் அவன் விஷயத்திலே தலையிடறதே இல்லை சார்!'' என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.

    அதோடு, டைரக்டர் மகேந்திரனை பார்த்து, "இப்ப படம் எப்படியிருக்கு சார்?'' என்றும் கேட்டார்.

    மகேந்திரன் பதில் சொல்லவில்லை. ஆனால் நான் மகேந்திரனைப் பார்த்து, "நமக்கும் மேலே ஒருவனடா! அவன் நாலும் தெரிந்த தலைவனடா'' என்று பாடினேன்.

    பஞ்சு அருணாசலம் சார் அடுத்து "பிரியா'' படத்தை தயாரிக்க முடிவு செய்தார்.

    பஞ்சு சார் கதை வசனம் எழுத, சுஜாதா திரைக்கதை அமைக்க எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்வதாக ஏற்பாடு. ரஜினி, ஸ்ரீதேவி இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்கள்.

    இந்தப் படத்துக்கான பாடல்கள் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று பஞ்சு சார் விரும்பினார். அவர் விருப்பத்தில் எனக்கும் உடன்பாடுதான். எனவே யோசித்தேன். அப்போது ஜேசுதாஸ் தனது தரங்கிணி ஸ்டூடியோவிற்காக, "ஸ்டீரியோ'' முறையில் பாடல் பதிவு செய்வதற்கான கருவிகளை புதிதாக வாங்கியிருந்தார்.

    அவருடைய மெல்லிசை நிகழ்ச்சிகளில் இந்த புதிய கருவிகளைப் பயன்படுத்தி ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் விதத்தில் `சவுண்ட் சிஸ்டம்' அமைத்தார்.

    "பிரியா'' படத்தின் பாடல்களை இந்த `ஸ்டீரியோ' முறையில் பதிவு செய்ய முயன்று பார்த்தால் என்ன என்று தோன்றியது. "கம்போசிங்கிற்கு, பெங்களூர் போகலாம்'' என்றார், பஞ்சு அருணாசலம். போனோம்.

    முதல் நாள் ஓட்டலில் உட்கார்ந்தோம். கம்போசிங்கில் திருப்தி வரவில்லை. நான் பஞ்சு சாரிடம் "அண்ணே! பெங்களூர் வந்து ரூமிற்குள் அடைந்து கிடப்பதா? லால்பாக், கம்பன்பாக் போன்ற இடங்களுக்கே போய் கம்போஸ் செய்வோம்'' என்றேன்.

    பஞ்சு சாரும் சிரித்துக்கொண்டே, "சரி, அங்கேயே போவோம்'' என்றார்.

    காரில் வாத்தியங்களை ஏற்றிக்கொண்டு கிளம்பினோம்.

    லால்பாக்கில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியை தேர்ந்தெடுத்து அங்கே ஒரு பெட்ஷீட் விரித்து உட்கார்ந்து கம்போஸ் செய்ய ஆரம்பித்தோம். கூட்டம் நாங்கள் இருந்த பக்கமாக வரவில்லை என்பதால் `இசை'க்கு இடைïறு இல்லாதிருந்தது.

    இப்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் இடத்தில் கம்போசிங் நடந்ததில் 6 பாடல்களும் முடிந்தன.

    சென்னைக்கு திரும்பியதும், ஜேசுதாசிடம் எங்கள் புதிய இசை முயற்சி பற்றி தெரிவித்தேன். இது விஷயத்தில் எங்கள் ஆர்வத்துக்கு இணையாக ஜேசுதாஸ் உற்சாகமாகி விட்டார். "இன்னும் சில புதிய மெஷின்கள் வாங்கி விடுகிறேன்'' என்று சொன்னவர் கையோடு அப்போதே ஆர்டர் கொடுத்துவிடடார். புதிய மெஷின்களும் வந்து சேர்ந்தன.

    பரணி ஸ்டூடியோவில் அத்தனை மெஷின்களையும் செட்டப் செய்து, மைக், வயரிங், ஹெட்போன்ஸ் எல்லாம் அமைத்து முதன் முதலாக "என்னுயிர் நீதானே'' என்ற பாடலை பதிவு செய்தோம்.

    நம்பவே முடியவில்லை. இசை மிகத் தெளிவாக இருந்தது. தனியாகக் கேட்டபோதும் சரி, மொத்தமாக கேட்டபோதும் சரி துல்லியமாக ஒலித்தது பாட்டு. அளவு கடந்த மகிழ்ச்சியைத் தரும் இசையாக அது இருந்தது.

    தமிழ்த்திரை உலகில், உலகத் தரத்துக்கு ஒப்பாக ஒரு இசையைக் கேட்பது அதுதான் முதல் தடவை.

    இசைக் கலைஞர்கள் எல்லா ரெக்கார்டிங்குகளிலும் இதுபற்றியே பேசினார்கள். அப்போது ஒரு மலையாளப் படத்துக்கு இசையமைக்க சென்னை வந்திருந்த பிரபல இந்தி இசை அமைப்பாளர் சலீல் சவுத்ரி காதுக்கும் இந்த செய்தி சென்று விட்டது. அவர் ரெக்கார்டிங்கை பார்க்க பரணி ஸ்டூடியோவுக்கு வந்துவிட்டார். அவருடன் அவரது மகள், உதவியாளர் நேபு ஆகியோரும் வந்திருந்தார்கள்.

    அன்றைக்கு, பி.சுசீலா பாடிய "டார்லிங் டார்லிங்'' பாடல் பதிவாகியிருந்தது.

    சலீல் சவுத்ரி வந்தவுடன், அந்தப் பாடலைப் போட்டுக் காட்டினோம். அவர் முகம் பிரகாசம் அடைந்தது. பாடல் முழுவதையும் கேட்டுவிட்டு, "இதுபோன்ற சினிமா இசையை இதுவரை கேட்டதில்லை'' என்றார், பரவசக் குரலில். ஒரு உண்மைக் கலைஞரின் உயர்ந்த மனோபாவத்தை அது எடுத்துக்காட்டியது.

    இந்த வகையில் முதல் "ஸ்டீரியோ'' இந்தப் படத்தின் பாடல்கள்தான். ஜேசுதாஸ் அவர்களின் ஒத்துழைப்பால்தான் இதை சாதிக்க முடிந்தது.

    இந்த ரெக்கார்டிங் முடிவதற்குள், ரெக்கார்டு செய்த பாடல்களைக் கேட்கும் உற்சாகத்தில் சவுண்டு என்ஜினீயர் வால்ïமை ஏற்ற, ஒரு `ஸ்பீக்கர்' போய்விட்டது.

    ஜேசுதாஸ் அதையும் பொருட்படுத்தாமல், உடனடியாக வேறு ஸ்பீக்கருக்கு ஏற்பாடு செய்தார்.

    "பிரியா'' படம் முழுக்க முழுக்க மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் படமானது. சண்டைக் காட்சிகளும், சேஸிங் காட்சிகளும் பாடல்களுமாக "பிரியா'' ஜனரஞ்சகமான படமாக வெளிவந்தது.

    இந்தப் படத்தின் ஒரு ரீலில் தொடர்ந்து 10 நிமிடம் வசனம் எதுவும் வராது. `சைலன்ட் மூவி' போல இருக்கும் இந்த இடத்தில் மிïசிக் 10 நிமிடமும் வந்தாக வேண்டும்.

    ரஜினியும், ஸ்ரீதேவியும் சிங்கப்பூரில் உள்ள டூரிஸ இடங்களையெல்லாம் ஜாலியாக பார்த்துத் திரிவது போன்ற காட்சிகள், டால்பின் ஷோ, கிளிகள் விளையாட்டு இதுபோல பலப்பல காட்சிகள் இடம் பெற்ற இந்த ரீலுக்கு இசையமைப்பது என்பது ஒரு சவாலாகவே இருந்தது. சரியான தாள கதியில் மிïசிக்கை கண்டக்ட் செய்யாவிட்டால் கிளி விளையாட்டுக்கு வரவேண்டிய மிïசிக் வேறு இடத்துக்கு போய்விடும்! அந்த காலகட்டத்தில் எந்த வசதியும் இல்லாமல் ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஒவ்வொரு மிïசிக் வரவைப்பதென்பது எவ்வளவு கடினம் என்பது இப்போதுதான் தெரிகிறது. அன்றைக்கு நான் ஏதோ விளையாட்டுப் போல அதை செய்துவிட்டேன். அன்று அரை மணி நேரத்தில் முடிந்த அந்த ரீலுக்கு, இன்று மிïசிக் செய்தால் மூன்று நாட்களாவது ஆகும். அதிலும் அன்றைக்கு கிடைத்த அந்த இசை கிடைக்காது என்பது மட்டும் நிச்சயம்.

    தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.க்காக "சிகப்பு ரோஜாக்கள்'' என்ற படத்தை பாரதிராஜா டைரக்ட் செய்யும் வாய்ப்பு வந்தது.

    கமலஹாசன் - ஸ்ரீதேவி நடித்த இந்த படத்தை, ஒரு "மர்டர் மிஸ்ட்ரி'' படமாகத்தர பாரதி திட்டமிட்டிருந்தார். படத்தில் இரண்டே பாடல்கள். ஒன்று கவிஞர் கண்ணதாசன் எழுதிய "இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது.'' அடுத்தது வாலி எழுதிய "நினைவோ ஒரு பறவை'' பாடல்.

    ரெக்கார்டிங்கை பார்ப்பதற்காக, கமல் வந்திருந்தார். ரிகர்சல் பார்த்து முடித்த நேரத்தில் "பிரேக்'' விடப்பட்டது

    அந்த நேரத்தில் கமல் சில ஆங்கிலப் பாடல்களைப் பாடிக்காட்டினார். நன்றாக இருந்தது.

    நான் கமலிடம், "படத்திலும் நீங்களே இந்தப் பாட்டை பாடிவிடுங்கள்'' என்றேன்.

    "ஓ பாடலாமே'' என்றார். ஜானகியுடன் சேர்ந்து பாடினார். "சிகப்பு ரோஜாக்கள்'' படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களுமே "ஹிட்'' ஆயின. படமும்தான்.

    இதுவரை இளையதளபதியாக வலம்வந்த விஜய் தற்போது தளபதியாக புரோமோஷன் ஆகியுள்ளார்.
    விஜய் சினிமாவிலும் சரி, ரசிகர்கள் மத்தியிலும் இளைய தளபதி என்ற பட்டப்பெயருடன் வலம் வந்து கொண்டிருந்தார். இருந்தாலும் கடந்த சிலவருடங்களாக அவரது ரசிகர்கள் விஜய்யை ‘தளபதி’ என்றே அழைத்து வந்தார்கள். ஆனால், தற்போது அவர் இளைய தளபதியிலிருந்து புரோமோஷன் ஆகி ரசிகர்கள் மத்தியில் தளபதி ஆகியிருக்கிறார்.

    அது என்னவென்றால், விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் புதிய படத்தின் தலைப்பு இன்று வெளியிடப்பட்டது. ‘மெர்சல்’ என்ற தலைப்புடன் வெளிவந்த அந்த போஸ்டரில் விஜய் முறுக்கு மீசையுடன், பின்னணியில் காளைகள் பாய்ந்து வருவது போலவும், அவற்றை அடக்க இவர் தயாராக இருப்பதுபோலவும் வடிவமைத்திருந்தனர். இந்த போஸ்டரில் விஜய் பெயருக்கு முன்னதாக இளையதளபதிக்கு பதிலாக தளபதி என்று அடைமொழி வைத்துள்ளனர்.



    படக்குழுவினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ போஸ்டரிலேயே விஜய்க்கு தளபதி அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. நாளை பிறந்தநாள் கொண்டாடும் விஜய், தனது ரசிகர்களுக்கு கொடுத்த சஸ்பென்ஸ் விருந்தாகவே ‘தளபதி’ என்ற அடைமொழியை படக்குழுவினர் கொடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. 
    விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் புதிய படத்திற்கு ‘மெர்சல்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
    விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘தளபதி 61’ படத்தை அட்லி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை விஜய்யின் பிறந்தநாளான நாளை (ஜுன் 22) அன்று வெளியிடப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால், அதன்பின்னர் ஒருநாள் முன்னதாகவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், தலைப்பையும் படக்குழுவினர் வெளியிடப்போவதாக அறிவித்தனர்.

    இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் ரொம்பவும் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், தலைப்பையும் படக்குழுவினர் வெளியிட்டனர். படத்தின் தலைப்பாக ‘மெர்சல்’ என்று சென்னை பாஷையில் பெயர் வைத்துள்ளனர். பனியனுடன் விஜய் முறுக்கு மீசையுடன் இருப்பதுபோன்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். பின்னணியில் காளைகள் பாய்ந்து வருவது போலவும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைத்துள்ளனர்.

    இப்படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கதாநாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடிக்கின்றனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தன்னுடைய 100-வது தயாரிப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறது.

    தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது. அதற்கு முன்னதாக வரும் ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் ஆடியோ வெளியீடு நடைபெறவிருக்கிறது. இந்த விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
    சிம்புவுக்கு 100 அடி நீளத்தில் பேனர் வைத்து மதுரை ரசிகர்கள் அசத்தியுள்ளார்கள்.
    முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவரும்போதெல்லாம் அவர்களது ரசிகர்கள் அந்த நடிகர்களின் கட்-அவுட்களை பிரம்மாண்டமாக அமைப்பது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சிம்பு நடிப்பில் வருகிற 23-ந் தேதி வெளியாகவுள்ள ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்காக 100 அடி நீளத்தில் பேனர் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    எந்தவொரு நடிகருக்கும் கட்-அவுட் மற்றும் பேனர்கள் வைப்பதில் வல்லவர்களான மதுரை ரசிகர்கள்தான் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர். 100 அடி தூரத்திற்கு பிரம்மாண்ட பேனர் ஒன்றை மதுரை நகரின் முக்கியமான வீதிகளின் ஒட்டுவதற்கு அவர்கள் ஏற்பாடு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.



    ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா, சானாகான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இரண்டு பாகமாக வெளிவரவுள்ள இப்படத்தில் சிம்பு 4 கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

    இதில், மதுர மைக்கேல், அஸ்வின் தாத்தா ஆகிய கெட்டப்புகள் முதல் பாகத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை குளோபல் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.  
    அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள திருமாவளவனுடன் ரஜினிகாந்த் போனில் பேசியுள்ளார். சுமார் அரைமணி நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
    ஜெயலலிதா மரணம் அடைந்ததால் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை குறிவைத்து ரஜினி அரசியலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.

    அரசியலுக்கு வருவது பற்றி ரஜினி சில முக்கிய பிரமுகர்களை சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

    ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று தமிழருவி மணியன் அவரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். தென்னக நதிகள் இணைப்பு குழு தலைவர் அய்யாக்கண்ணு ரஜினியை சந்தித்தபோது விவசாயிகளுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பதாக உறுதி அளித்தார்.

    இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் நேற்று முன்தினம் ரஜினியை சந்தித்து அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.



    ரஜினி புன்முறுவலுடன் சிரித்தபடி அதை ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. ரஜினியை சந்தித்து விட்டு வெளியே வந்த அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறுகையில், “ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார். அவர் தனிக்கட்சி தொடங்குவார்” என்று பேட்டி அளித்தார்.

    ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று பலர் அவரை நேரில் சந்தித்து வலியுறுத்தி வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும், தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று பகிரங்கமாக பேட்டி கொடுத்து அழைப்பு விடுத்தார்.

    ரஜினிகாந்த் சினிமா கதாநாயகர் என்பதால் அவருக்கு செல்வாக்கு உள்ளது. அதை பயன்படுத்தி அவர் ஜெயலலிதாவின் வெற்றிடத்தை நிரப்பக்கூடும். அவர் 45 ஆண்டுகளாக சினிமா மூலம் ஆளுமை செலுத்தி வருகிறார். அவர் இந்த தேசத்து குடிமகன். அவருக்கு அரசியலில் ஈடுபட உரிமை உள்ளது. அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறினார்.



    இந்த பேட்டியை படித்ததும் ரஜினி, திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக அவர் பேசி உள்ளார்.

    இதுவரை எல்லோரும் என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசியபோது மட்டுமே என்னை அரசியலுக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் நீங்கள் மட்டும்தான் நான் அரசியலுக்கு வர வேண்டும், தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று வெளிப்படையாக கூறி உள்ளீர்கள் என்று கூறி நெகிழ்ந்ததாக கூறப்படுகிறது.

    தன் குடும்பத்தினரும் அந்த பேட்டியை படித்துவிட்டு பாராட்டினர் என்று ரஜினி திருமாவளவனிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
    ‘வனமகன்’ படத்துக்காக இயக்குனர் விஜய் பிழிந்து எடுத்துவிட்டதாக ‘வனமகன்’ படத்தில் நடித்துள்ள ஜெயம்ரவி தெரிவித்துள்ளார்.
    இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘வனமகன்’. நாயகியாக சாயிஷா நடித்து இருக்கிறார். திங்பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார்.

    வருகிற 23-ந் தேதி ‘வனமகன்’ திரைக்கு வருகிறது. இதையொட்டி ஜெயம் ரவி அளித்த பேட்டி...

    “இந்த படத்தில் பணியாற்றிய போது, என்னை ஒரு குழந்தை போல கவனித்துக்கொண்டார்கள். என் அப்பாவுக்கு பிறகு இந்த படத்தை அதிக செலவு செய்து எடுத்திருக்கிறார்கள். விஜய் இந்த படத்துக்காக என்னை பிழிந்து எடுத்து விட்டார். படப்பிடிப்புக்காக மொத்த படக்குழுவும் காடுகளில் பல மணி நேரம் நடக்க வேண்டியது இருந்தது. மேக்கப் இல்லாமல் ஆதிவாசியாக அலைய விட்டார். மரம் விட்டு மரம் தாவவிட்டார். இந்த வலிகளை எல்லாம் தாங்கிக்கொண்டு நடித்தேன்.



    இந்த படம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். போட்ட காசை விட அனைவரும் அதிகம் எடுப்பார்கள். அப்படி இல்லையென்றால், நான் விஜய்க்காக மீண்டும் ஒரு படம் சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுப்பேன். நானும் அவருடன் சேர்ந்து தயாரிப்பேன். என் வண்டியும் ஓட வேண்டுமே.

    திருட்டு வி.சி.டி., ஆன்லைன் மூலம் படம் வெளியிடப்படுவதால் தமிழ் பட தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அப்படி இதை செய்பவன் உண்மையாகவே தமிழனாக இருந்தால் இணையதளத்தில் வெளியிடாதே” என்றார் ஆவேசமாக.

    இயக்குனர் விஜய், “ஜெயம்ரவி இல்லாமல் ‘வனமகன்’ இல்லை. அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு புது நாயகியாக சாயிஷா கிடைத்திருக்கிறார்.இந்த படத்தின் ஸ்டண்ட் வடிவமைப்பு முக்கிய இடம் பிடிக்கும்” என்று கூறினார்.
    ‘அமரகாவியம்’ மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான மியாஜார்ஜை இதுவரை ஒரு கோடி ரசிகர்கள் பேஸ்புக் பக்கத்தில் பின்பற்றுகிறார்கள்.
    ‘அமரகாவியம்’ மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மியாஜார்ஜ். தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இதனால் அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.

    மியாஜார்ஜ் தனது பெயரில் பேஸ்புக் பக்கம் வைத்துள்ளார். அதில் தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இதை விரும்பும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது வரை மியாஜார்ஜ் பேஸ்புக் பக்கத்தை 1 கோடி பேர் ‘லைக்’ செய்திருக்கிறார்கள்.



    மியா ஜார்ஜ் இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில், “நான் விளையாட்டாக தொடங்கிய பேஸ்புக் பக்கத்தை 1 கோடி பேர் ‘லைக்’ செய்திருக்கிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனது பேஸ்புக் பக்கத்தை ‘லைக்’ செய்த தமிழ், மலையாளம்,தெலுங்கு ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

    ஏற்கனவே, நஸ்ரியா பேஸ்புக் பக்கத்துக்கு 75 லட்சம் ரசிகர்கள் ‘லைக்’ கிடைத்தது மலையாள பட உலகில் பெரிதாக பேசப்பட்டது. இப்போது மியாஜார்ஜ் பேஸ்புக் பக்கத்தை 1 கோடி ரசிகர்கள் ‘லைக்’ செய்து அதை முறியடித்து இருக்கிறார்கள்.
    இந்தி பட உலகின் பிரபல டைரக்டர் மகள் வயது பெண்ணை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
    இந்தி பட உலகின் பிரபல டைரக்டர் அனுராக் கஷ்யப். இவர், ஆர்த்தி பாஜாஜை திருமணம் செய்தார். 6 வருடங்கள் கழித்து அவரை விவாகரத்து செய்தார். இவர்கள் மூலம் பிறந்த மகள் ஆல்யாவுக்கு இப்போது வயது 16. அடுத்து நடிகை கல்கி கொச்லினை கஷ்யப் காதலித்து மணந்தார். 2011-ல் இவர்களுக்கு திருமணம் நடந்தது. 4 வருடங்களில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

    பின்னர் டைரக்டர் அனுராக் கஷ்யப்புக்கும் நடிகை ஹூமா குரேஷிக்கும் காதல் என்று இந்தி பட உலகில் பரவலாக பேசப்பட்டது. தற்போது ஹூமா குரேஷியை சல்மான்கான் தம்பி சொஹைல் காதலிப்பதாக கூறப்படுகிறது.



    இந்த நிலையில், அனுராக் கஷ்யப் மீண்டும் காதலில் விழுந்து இருக்கிறார். அதுவும் 23 வயதே ஆன பெண்ணிடம். இவரது வலையில் விழுந்த இளம் பெண் பெயர் ஷுப்ரா ரெட்டி. டைரக்டர் அனுராக் கஷ்யப்-ஷுப்ரா ரெட்டியுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

    மகள் வயது பெண்ணை பிரபல டைரக்டர் கஷ்யப் காதலித்து வருவது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காதலிக்கும் இளம் பெண்ணை விட டைரக்டருக்கு 20 வயது அதிகம். இந்த பெண்ணை அனுராக் 3-வது திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
    புலிமுருகன் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்த ஆர்.பி.பாலாவை மோகன்லால் பாராட்டியுள்ளார்.
    கேரளாவில் 180 கோடி ரூபாய் என்று வசூலில் வரலாற்றுச் சாதனை படைத்த ‘புலிமுருகன்’ தமிழில் 350 திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழில் இதை ஒரு நேரடித் தமிழ்ப்படமாக மாற்ற உரிய நபரை தேடியபோது படத்தை மலையாளத்தில் தயாரித்த முலக்குப் பாடம் பிலிம்ஸ் நிறுவனத்தினர் ஆர்.பி.பாலாவை அழைத்திருக்கிறார்கள்.

    வசனம் எழுத ஒப்பந்தம் செய்த பாலாவையே டப்பிங் பணிகளுக்கும் தேர்வு செய்தது மகிழ்ச்சி என்றும், இவர் தகுதியான நபர்தான் என்றும் கேரள சூப்பர்ஸ்டார் மோகன்லால் பாராட்டியுள்ளார்.

    தமிழ் ‘புலிமுருகன்’ படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து ஆர்.பி.பாலா கூறும்போது, 'பாகுபலி' ஒரு டப்பிங் படமாக பெரிய வெற்றி பெற்ற படம். அதைப்போல 'புலிமுருகன்' படத்தையும் தமிழில் கொண்டுவர நினைத்தார்கள். அதற்கு 'பாகுபலி' போல இதற்கு பெரிய சரியான நபரைத்தேடி இருக்கிறார்கள்.



    அப்படித்தான் மலையாளத்தில் படத்தைத் தயாரித்த முலக்குப் பாடம் டோமிச்சன் அவர்கள் என்னை அழைத்தார்கள். தமிழில் டப்பிங் பணிகளின் பொறுப்பேற்றபோது மோகன்லால் சாரைப் பார்க்கப் போனேன். ஏற்கெனவே படத்தை மலையாளத்தில் பார்த்திருந்த நான் மோகன்லால் சம்பந்தப்பட்ட சில வசனங்களை தமிழில், மலையாளத்தில், ஆங்கிலத்தில் எல்லாம் எழுதி டம்மியாகக் குரல் பதிவு செய்துகொண்டு போயிருந்தேன். அதைக் கேட்ட மோகன்லாலுக்கு உடனே பிடித்து விட்டது.

    முதலில் இப்படத்திற்கு வசனம் எழுதத்தான் போனேன். ஆனால் இதைத் தமிழில் பெரிய படமாக வெளியிட  தயாரிப்பாளர் முலக்குப் பாடம் பிலிம்ஸ் டோமிச்சனும் நாயகன் மோகன்லாலும் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். மொழிமாற்றுப் பணிகளுக்கு என்னையே பொறுப்பேற்கச் சொன்னார்கள். நானும் ஏற்றுக் கொண்டேன்.



    இதற்கு வசனம் எழுதியது மட்டுமல்ல 'முருகா முருகா புலி முருகா' என்கிற டைட்டில் பாடலும் எழுதினேன். டப்பிங்கில் பெரிதும் கவனம் செலுத்தினேன். பொதுவாக ஒரு டப்பிங் படமென்றால் ஐந்தாறு நாட்களில் பேசி முடித்து விடுவார்கள். இதற்கு 45 நாட்கள் எடுத்துக் கொண்டேன். மோகன்லால், கிஷோர் எல்லாரையும் சொந்தக் குரலில் பேச வைத்திருக்கிறேன். வழக்கமான குரல்கள் இதில் இருக்காது. நடிகர்கள், தோற்றம், அவர்களின் குரல் இவை எல்லாம் பார்த்து ஒரு குரலுக்கு 10 பேரைப் பார்த்து தேர்வு செய்து பயன்படுத்தியிருக்கிறேன்.

    மோகன்லால் ஒருநாள் டப்பிங்கிற்கு தேதி கொடுத்தார். நான் அவரைப் பாடாய்ப் படுத்தி அந்த ஒருநாளில் இரண்டே இரண்டு காட்சிகள் தான் பேச வைத்தேன். என் ஈடுபாட்டைப் பார்த்து உன் விருப்பப்படி செய் என்று மேலும்
    5 நாள் பேசி ஒத்துழைத்தார். இங்கு ரஜினி சார் மாதிரி கேரளாவில் அவர்தான் சூப்பர் ஸ்டார். முதலில் அவரை அணுக எனக்கு பயம், தயக்கம் இருந்தது. ஆனால் அவர் சகஜமாகப் பழகினார். டப்பிங் ஒப்பந்தமான போதே என்னை அவருக்குப் பிடித்து விட்டது.

    தமிழில் 'புலி முருகன்' சிறப்பாக வர பாலாதான் காரணம் என்று மேடையிலேயே கூறியிருக்கிறார். என்னை எப்போது பார்த்தாலும் புலி பாலா என்றே கூப்பிடுவார். இதுவரை ஆர்.பி.பாலாவாக இருந்த நான் இப்போது புலிமுருகன் பாலா ஆகியிருக்கிறேன். காரணம் மோகன்லால் சார் கொடுத்த ஊக்கம்தான்.



    டப்பிங்கில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு சாதாரணமானதல்ல. அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்றாலும் எத்தனை டேக் என்றாலும் பேசி ஒத்துழைத்தார். அதுமட்டுமல்ல அவரது கொச்சின் விஷூமஹால் ஸ்டுடியோவில்தான் டப்பிங் நடந்தது. அப்போது என்னை அன்பாக ஒரு விருந்தினரைப் போல அவ்வளவு கவனித்து அன்பு காட்டினார். பழகுவதில் அவ்வளவு  எளிமையை அவரிடம் கண்டேன்.

    முதலில் இது ஒரு டப்பிங் படம் என்கிற உணர்வு வரக் கூடாது என்று முடிவு செய்து கொண்டோம். அதற்காகவே மிகவும் மெனக்கெட்டோம். ஆறு மாத காலம் பாடுபட்டோம். 'புலி முருகன்' கதை தேனிப் பக்கம் நடப்பது போல அமைத்தோம். எல்லாரையும் தேனி வட்டார மொழி பேச வைத்தோம். மண் மணம், கலாச்சார மணம் வந்து விட்டது.
    இதற்காக அதிக சிரமப்பட்டோம். அதற்குரிய பலன் கிடைத்திருக்கிறது. அசல் தமிழ்ப் படமாக மாறிவிட்டது. படம் பார்த்த சில நிமிடங்களிலேயே அது நம்ம ஊர்ப்படமாக மாறிவிடும். எளிதில் உள்ளே நுழைந்து விடுவோம்.

    இது ஒரு மொழிமாற்றுப் படம் என்கிற உணர்வே போய்விடும். நமது மண் மணம் நேட்டிவிட்டி மாறாமல் படத்தில்  கொண்டு வந்திருப்பதே எங்கள் பெரிய வேலை. அது மட்டுமல்ல படத்தின் விளம்பரம், போஸ்டர், டிசைன், ட்ரெய்லர் வரை நான் செய்ததுதான். ட்ரெய்லர் டிரெண்டிங்கில் வந்து சாதனை படைத்தது.



    இதன் வெளியீட்டுத் திரைகளின் எண்ணிக்கை ஒரு ரெக்கார்டு பிரேக். ஆமாம் இதுவரை 300 திரையரங்குகள் என்று  இருந்தது. இப்போது மேலும் 60 திரையரங்குகள் அதிகரித்துள்ளன. நிச்சயம் இதன் ஸ்டண்ட் பற்றிப் பேசப்படும்.  இப்படத்துக்காகவே பீட்டர் ஹெயின் மாஸ்டர் நாட்டிலேயே முதன்முதலில் தேசிய விருது பெற்றுள்ளார்.

    இந்தப் படம் தமிழில் நன்றாக வர முலக்குப் பாடம் நிறுவனத்  தயாரிப்பாளர் டோமிச்சன் , நாயகன்  மோகன்லால் இருவரும் அத்தனை ஒத்துழைப்பு கொடுத்தார்கள். தமிழில் செந்தூர் சினிமாஸ் வெளியிடுகிறது. படம் வெளிவரும் முன்பே எனக்கு நான்கு புதிய படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்புகள் வந்துள்ளன. மோகன்லால் தன் 'ஒப்பம் 'என்கிற  படத்தை தெலுங்கில் டப்பிங் செய்ய வசனம் எழுத வாய்ப்பு கொடுத்தார். அடுத்தடுத்த படங்களுக்கும் என்னையே வசனம்
    எழுதும்படி கூறியுள்ளார்.

    ஒரு தயாரிப்பாளராக நான் இப்போது 'போட்டின்னு வந்துட்டா சிங்கம்' என்கிற படத்தை 'மாநகரம்' நாயகர் சந்தீப், ரெஜினாவை வைத்து தயாரித்து வருகிறேன். புலி முருகன் என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு திருப்புமுனையை
    ஏற்படுத்தியுள்ளது. தமிழில் அதன் வெற்றி எழுதப்பட்ட ஒன்று என்பதை இன்னும் சில நாட்களில் அனைவரும் உணர்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் மணிரத்னம் இருவரும் நடிகர் பிரபுதேவாவுக்காக இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
    `பீட்சா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த கார்த்திக் சுப்புராஜ், அதனைத்தொடர்ந்து `ஜிகர்தண்டா', `இறைவி' படங்களை இயக்கினார்.

    இந்நிலையில், தனுஷை வைத்து ஹாலிவுட் தரத்தில் புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ள கார்த்திக் சுப்புராஜ், அதற்கு முன்னதாக பிரபுதேவாவை வைத்து புதிய படம் ஒன்றை  தற்போது இயக்கி முடித்துள்ளார். மேலும் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் விரைவில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது.



    இந்நிலையில், அந்த படம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் விரைவில் பிரம்மாண்டமாக நடத்த கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளாராம். அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் மணிரத்னம் இணைந்து, படம் குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×