என் மலர்tooltip icon
    • ஒரு படத்தையே ‘ஏ.ஐ.’ தொழில்நுட்பத்தில் எடுப்பது வரை சினிமா வளர்ச்சி கண்டிருக்கிறது.
    • ஒரு புதிய முயற்சியாகத்தான் ‘மெட்டா: தி டேஸ்லிங் கேர்ள்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.

    உலக சினிமா பல்வேறு வளர்ச்சி நிலைகளை அடைந்து வந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் ஒலி இல்லாத படமாக வெளிவந்து, தொழில்நுட்ப வளர்ச்சியடைந்து பேசும் படம் உருவானது. கருப்பு-வெள்ளை படத்தில் இருந்து ஈஸ்மெண்ட் கலர், பின்னர் கலர் திரைப்படங்கள் உருவாகின. சினிமாவை எடுக்கும் தொழில்நுட்பங்களிலும் பல்வேறு வளர்ச்சியை திரைத்துறை கண்டிருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகளிலும் பல்வேறு படிநிலைகளை கடந்து வந்து விட்டோம். ஒரு படத்தையே 'ஏ.ஐ.' தொழில்நுட்பத்தில் எடுப்பது வரை சினிமா வளர்ச்சி கண்டிருக்கிறது.

    இந்த காலகட்டத்திலும் விருதுக்காகவும், பாராட்டுக்காகவும் மெனக்கெடும் திரை கலைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தங்கள் படத்தில் ஏதாவது ஒரு புதுமையை புகுத்தி, அதன் மூலம் சினிமா ரசிகர்களை தன் பக்கம் திரும்ப வைக்கலாம் என்று எண்ணுகிறார்கள். அப்படி ஒரு புதிய முயற்சியாகத்தான் 'மெட்டா: தி டேஸ்லிங் கேர்ள்' திரைப்படம் உருவாகியிருக்கிறது.


    மெட்டா: தி டேஸ்லிங் கேர்ள்:

    ஊமைப்படம், பேசும்படம் தொடங்கி, ஏ.ஐ. தொழில்நுட்ப சினிமா வரை வந்திருந்தாலும், இதுவரை எவரும் முகம் மறைத்து திரைப்படங்களை எடுத்ததில்லை. அந்தப் புதுமையை 'மெட்டா' திரைப்படம் செய்திருக்கிறது.

    இது ஒரு இந்திய திரைப்படம், அவ்வளவுதான். இந்தப் படத்திற்கு தனி மொழி கிடையாது. ஆனால் திகில், மர்மம், சென்டிமெண்ட், திரில்லர், கற்பனை ஆகிய ஜானர்களை உள்ளடக்கியதாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

    இந்தப் படத்தில் ஒற்றை கதாபாத்திரம்தான். அந்தப் பெண் கதாபாத்திரமும் முகம் காட்டாதபடி வந்துபோகிறது. படத்தில் எந்த வசனமும் கிடையாது. இப்படி ஒரு திரைப்படம் உலக அரங்கில் இதுவரை வந்ததில்லை என்கிறார்கள். இதுதான் முதல் முறையாம். அதைப் பெருமையாக படத்தின் தொடக்கத்திலேயே 'கார்டு' போட்டு சொல்லவும் செய்திருக்கிறார்கள். 'இந்தப் படம் உலகின் முதல் முகமற்ற, மொழியற்ற, வார்த்தைகள் அற்ற, ஒற்றை கதாபாத்திரம் உயிர்வாழும் படம், உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்டது' என்பதை பதிவு செய்கிறார்கள்.


    இந்தப் படத்தின் கதைப்படி, மெட்டா என்ற இளம்பெண், தொல்பொருள் ஆய்வாளராக இருக்கிறார். அவர் தனது அகழ்வாராய்ச்சிக்காக மலைப்பகுதி ஒன்றில், பழைய இடிபாடுகளைக் கொண்ட கட்டிடத்தைக் காண்கிறாள். அங்கே தங்கி தன்னுடைய ஆராய்ச்சியை மேற்கொள்கிறாள். அப்போது அவளை அறியாமலேயே ஒரு சாபத்தில் சிக்கிக்கொள்கிறாள். அந்த சாபம் அவள் தலையை, ஒரு மாயப் பானையில் சிக்க வைக்கிறது. அந்தப் பெண், தன்னை அறியாமல் செய்த கர்ம விணை இயற்கை அளித்த பதிலடியாக இது அமைகிறது. ஒரு சாதாரண நாளில் அவளுக்கு ஏற்படும் இந்த எதிர்பாராத அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க, மெட்டா எடுக்கும் அறிவு சார்ந்த மற்றும் சாகச முயற்சிதான், இந்தப் படத்தின் கதை.

    இந்தப் படத்தை பிரசாந்த் மாம்புல்லி இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ஒற்றை நபராக, எந்த காட்சியிலும் முகத்தை பதிவு செய்யாத கதாபாத்திரத்தில் பிரணிதா வாக்சவுரே என்பவர் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் கூட, இந்தப் பெண்ணின் தலையில் பானையை கவிழ்த்தி, அவர் முகம் தெரியாத வகையில்தான் அறிமுகம் செய்தனர். அதனால் அந்தப் படத்தில் நடித்த பெண் யார் என்பதில் கூட இன்றும் ஒரு தெளிவு இல்லாத நிலை இருக்கிறது. வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட உள்ள இந்தத் திரைப்படம், முன்னதாக உலக திரைப்பட விழாக்களில் காட்சிப்படுத்தப்பட்டு, விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.


    'மெட்டா: திடேஸ்லிங் கேர்ள்' திரைப்படத்தை இயக்கியவர், பிரசாந்த் மாம்புல்லி. இவர் கேரள மாநிலம் குருவாயூரை பூர்வீகமாகக் கொண்டவர். 2009-ம் ஆண்டு மோகன்லாலை கதாநாயகனாக வைத்து, 'பகவான்' என்ற படத்தை இயக்கி, திரைத்துறைக்கு அறிமுகமானார். இந்தப் படத்தை அவர் 19 மணி நேரத்தில் இயக்கி சாதனை படைத்திருந்தார்.

    அடுத்ததாக கன்னடத்தில் அறிமுகமான இவர், அங்கு சிவராஜ்குமாரை நாயகனாக வைத்து 'சுக்ரீவா' என்ற படத்தை இயக்கினார். அந்தப் படத்தை 18 மணி நேரத்தில் எடுத்து முடித்தார். இதன் மூலம் தன்னுடைய முந்தைய சாதனையை அவரே முறியடித்தார். இந்த சாதனையானது, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

    இப்படி இதுவரை பிரசாந்த் மாம்புல்லி இயக்கிய 7 படங்களும் ஏதோ ஒரு வகையில் சாதனைக்குரிய படமாகவே அமைந்திருக்கிறது. அந்த வரிசையில்தான் இப்போது 'மெட்டா' திரைப்படம் முகமற்ற, மொழியற்ற, வார்த்தைகள் அற்ற திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

    • அண்ணல் காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் உணர வேண்டும்!
    • ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும்!

    சென்னை:

    அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அ.தி.மு.க.வையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை மேடவாக்கத்தில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    MGNREGA-வை மீட்டெடுக்கவும், தங்களது வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ளவும் தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள்!

    இது தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்பதை, அண்ணல் காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் உணர வேண்டும்! ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும்! என்று கூறியுள்ளார்.


    • பீகார் அணியில் சூர்யவன்ஷி, சகிபுல் கனி சதம் விளாசினர்.
    • ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் சதம் விளாசினார்.

    33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இதன் 'எலைட்' வகைப்பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'பிளேட்' வகைப்பிரிவில் நாகாலாந்து, பீகார், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன.

    இந்நிலையில் இந்த தொடரில் 3 இந்திய வீரர்கள் அதிரடியான ஆட்டத்தின் மூலம் அதிவேக சதம் அடித்து பல சாதனைகளை குவித்து வருகின்றனர். பிளேட் வகைப்பிரிவில் அருணாச்சல பிரதேசம் அணிக்கு எதிரான போட்டியில் பீகார் அணியை சேர்ந்த இளம் வீரர் சூர்யவன்ஷி 36 பந்தில் சதம் விளாசினார். இதன்மூலம் குறைந்த பந்தில் சதம் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் அவர் இடம் பிடித்தார்.

    இதே போட்டியில் பீகார் அணியின் கேப்டன் சகிபுல் கனி 32 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்தார். இதன்மூலம் வைபவ் சாதனையை சகிபுல் முறியடித்தார்.

    எலைட் வகைப்பிரிவில் கர்நாடகா அணிக்கு எதிரான போட்டியில் ஜார்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் 33 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

    ஒரு இந்தியரின் வேகமான லிஸ்ட் ஏ சதங்கள்:

    32 பந்துகள்: சகிபுல் கனி (பீகார்)

    33 பந்துகள்: இஷான் கிஷன் (ஜார்க்கண்ட்)

    35 பந்துகள்: அன்மோல்பிரீத் சிங் (பஞ்சாப்)

    36 பந்துகள்: வைபவ் சூர்யவன்ஷி (பீகார்)

    40 பந்துகள்: யூசுப் பதான் (பரோடா)

    41 பந்துகள்: உர்வில் படேல் (குஜராத்)

    42 பந்துகள்: அபிஷேக் சர்மா (பஞ்சாப்)

    முதல் தர கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த வீரர்கள்:-

    29 பந்துகள் - ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க்

    31 பந்துகள் - ஏபி டி வில்லியர்ஸ்

    32 பந்துகள்: சகிபுல் கனி

    33 பந்துகள்: இஷான் கிஷன்

    35 பந்துகள் - அன்மோல்பிரீத் சிங்

    36 பந்துகள் - கோரி ஆண்டர்சன்

    36 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி

    37 பந்துகள் - ஷாஹித் அப்ரிடி

    • உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    நாளை வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    26-ந்தேதி மற்றும் 27-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    28 மற்றும் 29-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    30-ந்தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இதனிடையே இன்று முதல் 28-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

    உறைபனி எச்சரிக்கை:

    24 மற்றும் 25-ந்தேதிகளில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 27ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • ‘ஜன நாயகன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் நடிகர் தனுஷுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.
    • இந்த படத்தில் நடிக்க உள்ள பிற நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநராக வலம் வருபவர் எச்.வினோத். இவரது இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. விஜயின் கடைசி படம் 'ஜன நாயகன்' எனக்கூறப்படுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.

    'ஜன நாயகன்' படத்தை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் நடிகர் தனுஷுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாக உள்ள இப்படத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

     

    இந்த நிலையில், இயக்குநர் எச்.வினோத்- நடிகர் தனுஷ் இணையும் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளார். இதனை அவரே உறுதிப்படுத்தி உள்ளார். இந்த படத்தில் நடிக்க உள்ள பிற நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பா.ஜ.க. அரசை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் கொட்டாரம் சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அ.தி.மு.க.வையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் 400 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்தோடு, மகாத்மா காந்தி பெயரை மாற்றிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி கலந்து கொண்டு கண்டன குரல் எழுப்பினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • விஜய் ஹசாரே கோப்பை தொடரில் பீகார்- அருணாச்சல பிரதேசம் அணி விளையாடி வருகிறது.
    • முதல் பேட்டிங் செய்த பீகார் அணியில் 3 பேர் சதம் விளாசினர்

    33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    'பிளேட்' வகைப்பிரிவில் நாகாலாந்து, பீகார், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் இந்த பிரிவில் பீகார் - அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற பீகார் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பீகார் அணியில் சூர்யவன்ஷி 190, சகிபுல் கனி 128, ஆயுஷ் லோஹருகா 116, பியூஷ் சிங் 77 ரன்கள் விளாசியுள்ளனர்.

    இதனால் பீகார் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 574 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 50 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையை பீகார் அணி படைத்துள்ளது.

    இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அணி 506 ரன்களை குவித்தது. அதுவே லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்திருந்தது. இன்று அந்த வரலாற்று சாதனையை பீகார் அணி முறியடித்துள்ளது.

    • ஆப்பிரிக்க பயிற்சியாளரிடம், நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
    • இந்தி கற்கவில்லை என்றால் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும் என பாஜக கவுன்சிலர் மிரட்டினார்.

    டெல்லியில் பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி, ஆப்பிரிக்க கால்பந்து பயிற்சியாளர் ஒருவரை ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வரும் வீடியோவில், உள்ளூர் குழந்தைகளுக்கு கால்பந்து பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த ஆப்பிரிக்க பயிற்சியாளரிடம், நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை என கேள்வி எழுப்பினார். அவர் அதற்கு பதிலளிக்காததால், நான் சொல்வதை நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை? ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்.

    இல்லையென்றால் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் இங்கே பணம் சம்பாதிக்கிறீர்கள் என்றால், இந்தியும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்" எனப் பேசியுள்ளார். மேலும் மற்றொருவரிடம் (பூங்கா காவலாளியா என்பது சரியாக தெரியவில்லை) நான் உங்களுக்குச் சொல்கிறேன், பூங்கா இரவு 8 மணிக்குள் மூடப்பட வேண்டும். இல்லையெனில் ஏதேனும் குற்றச் செயல் நடந்தால், நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினார்,.

    இந்த வீடியோ வைரலாக ரேணு சவுத்ரிக்கு பெரும் கண்டனம் எழுந்தது. இதனையடுத்து வீடியோ தொடர்பாக விளக்கமளித்த அவர், பூங்காவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போதைப்பொருள் தொடர்பாக தனக்குப் பலமுறை புகார் வந்தது. அதனால்தான் தான் பூங்காவிற்கு வருகை தந்தேன். ஆனால், யாரையும் அச்சுறுத்தும் நோக்கம் தனக்கு இல்லை. தகவல்தொடர்பை எளிதாக்க இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினேன்" என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், இந்த வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, பாஜக மேலிடத்தின் வற்புறுத்தலின் பேரில் பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். 


    • ராஜ்பவன் பெயரை, லோக் பவன் என்ற மக்கள் மாளிகை என்று மாற்றம் செய்ய வேண்டும் என்பதற்கு வித்திட்டவர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. தான்.
    • 'பெயர் மாற்றத்தைவிட சிந்தனை மாற்றமே தேவை' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    நாடு முழுவதும் உள்ள ராஜ் பவன் என்று சொல்லப்படும் ஆளுநர் மாளிகையின் பெயர், மக்கள் மாளிகை என பெயர் மாற்றப்படுவதாக கடந்த நவ.30-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது.

    இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களின் துணை நிலை ஆளுநர் ஆகியோருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அதில்,

    கடந்த 2024-ம் ஆண்டில் நடந்த ஆளுநர் மாநாட்டில் ராஜ்பவன் என்பதனை லோக் பவன்கள் என பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. ஏனென்றால் ராஜ்பவன் என்ற சொல் காலனித்துவத்தை நினைவூட்டுகிறது. எனவே அனைத்து ஆளுநர் அலுவலகங்களும், துணை நிலை ஆளுநர் அலுவலகங்களும் அதிகாரபூர்வமாக முறையே லோக் பவன், லோக் நிவாஸ் என பெயரிடப்பட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    அதன் தொடர்ச்சியாக நாட்டில் உள்ள அனைத்து ஆளுநர் மாளிகையின் பெயர்களும் லோக் பவன் என்று மாற்றப்படுகிறது. அதன்படி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையும், ஆங்கிலத்தில் லோக் பவன் என்று பெயர் மாற்றப்படுகிறது. தமிழில் அது மக்கள் மாளிகை என்று அழைக்கப்படும்.

     

    நாடு முழுவதும் உள்ள ஆளுநர்களின் அதிகாரபூர்வ இல்லமான ராஜ்பவன் பெயரை, லோக் பவன் என்ற மக்கள் மாளிகை என்று மாற்றம் செய்ய வேண்டும் என்பதற்கு வித்திட்டவர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. தான். அவர் தான் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த ஆளுநர் மாநாட்டில் அதற்கான தீர்மானத்தை கொண்டு வந்தார். அதனை மற்ற ஆளுநர்கள் அனைவரும் ஏற்று கொண்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில் மத்திய அரசு இப்போது நடவடிக்கை எடுத்து இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் கூறுகையில்,

    ஆளுநர் மாளிகைகள் 'ராஜ்பவன்' என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஆளுநர்கள் மாநாட்டில் தலைமையேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி 'ராஜ்பவன்' என்பதை 'மக்கள் பவன்' என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    அதை அனைவரும் வரவேற்ற நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகமும் அதை ஏற்று அதிகாரபூர்வமாக 'ராஜ்பவன்' என்பதை இனி 'மக்கள் பவன்' என அனைத்து மாநிலங்களும் மாற்றி அழைக்க உத்தரவிட்டுள்ளது.

    நமது ஆளுநரின் இந்த முயற்சி ராஜ்பவன் வரலாற்றில் ஒரு மைல்கல். அவரது கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசுக்கு நன்றி என்று தெரிவித்து இருந்தார்.

     

    'மக்கள் பவன்' பெயர் மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'பெயர் மாற்றத்தைவிட சிந்தனை மாற்றமே தேவை' எனத் தெரிவித்தார்.

    சட்டமன்றத்தை மதிக்காதவர்கள் 'மக்கள் மாளிகை' என பெயர் மாற்றுவது கண் துடைப்பா என்றும் மக்களாட்சி தத்துவத்தின் கண்களில் மண்ணை தூவுவதற்காகவா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் தற்போதைய தேவை எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், ஆளுநர் மாளிகையின் பெயர் மாற்றம் தேவையற்றது என தெரிவித்தார்.

     

    தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இதனை வரவேற்றார். அவர், 'ஆளுநர் மாளிகைக்கு இதுவரையில் ராஜ் பவன் என்று இருந்த பெயரை, இப்போது லோக் பவன் என பெயர் மாற்றம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது' எனத் தெரிவித்தார்.

    • ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 26-ந் தேதி தொடங்குகிறது.
    • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றி விட்டது.

    இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 26-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இந்த அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பேட்டர்களில் ஒல்லி போப்-க்கு பதிலாக பெத்தேல் அணியில் இடம் பெற்றுள்ளார்.

    மேலும் பந்து வீச்சாளர்களில் காயம் காரணமாக ஆர்ச்சர் விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக கஸ் அட்கின்சன் அணியில் இடம் பெற்றுள்ளார்.

    இங்கிலாந்து ஆடும் லெவன்:-

    க்ராலி, பென் டக்கெட், பெத்தேல், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், வில் ஜாக்ஸ், கஸ் அட்கின்சன், கார்ஸ், ஜோஸ் டங்.

    ×