தொழில்நுட்பம்

ரிலையன்ஸ் ஜியோவை எதிர்கொள்ள பலே திட்டம் போடும் பாரதி ஏர்டெல்

Published On 2017-01-22 11:53 GMT   |   Update On 2017-01-22 11:53 GMT
ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ள சிறப்பு நிதி திரட்ட பாரதி ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

இந்திய டெலிகாம் சந்தையில் மற்ற நிறுவனங்களிடம் பலத்த போட்டியை ஏற்படுத்தியிருக்கும் புதுவரவு நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகள் சிறப்பு திட்டங்களின் பெயரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை சமாளிக்க நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் நிதி திரட்டி முதலீடு செய்ய இருக்கிறது. எனினும் எத்தகைய அளவு பணம் முதலீடு செய்யப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

இந்த தகவல் ஜியோவின் வளர்ச்சி மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மூலம் ரூ.30,000 கோடி வரை முதலீடு செய்யப்பட இருப்பதை தொடர்ந்து வெளியாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.  

ஸ்டாக் எக்சேஞ்களிடம் இந்நிறுவனம் தெரிவித்துள்ள தகவலின் படி கடன் பத்திரங்களின் மூலம் நிதி திரட்டுவது குறித்து தலைமை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் முடிவு செய்வர் என கூறப்பட்டுள்ளது. இது சார்ந்த சந்திப்பு ஜனவரி 24 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. டவர் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்த சுமார் 40 சதவிகித பங்குகள் விற்பனை செய்யப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

குறைந்த விலையில் சலுகைகளை வழங்கும் போதே ஜியோ தனது சேவைகளின் தரத்தை சீர்படுத்தி கொள்ள வேண்டும் என தொலைதொடர்பு சந்தை வல்லுநர்களின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

Similar News