தொழில்நுட்பம்

'கூகுள் ஆஃப்லைன் சர்ச்': இண்டர்நெட் இல்லாமல் கூகுள் தேடல் சாத்தியமாம்

Published On 2017-01-18 16:22 GMT   |   Update On 2017-01-18 16:22 GMT
ஸ்மார்ட்போன் இன்டர்நெட் வசதி இல்லாமலும் கூகுள் தேடலை மேற்கொள்ள உதவும் புதிய வசதியை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:

கூகுள் நிறுவனம் தனது தேடுபொறி செயலியில் ஆஃப்லைன் வசதியை வழங்க துவங்கியுள்ளது. இதே போன்ற சேவையை கூகுள் நிறுவனம் சோதனை செய்து வருவதாக முன்னதாக தகவல் வெளியானது. புதிய ஆஃப்லைன் அம்சம், ஸ்மார்ட்போனில் இணைப்பு வந்ததும் ஒற்றை கிளிக் மூலம் தேடல்களை தொடர முடியும் என கூகுள் மேலாளர் சேகர் சரத் தெரிவித்துள்ளார்.  

புதிய ஆஃப்லைன் தேடல் அம்சம் குறியீட்டு வார்த்தைகளை கூகுளில் டைப் செய்ய வழி செய்கிறது, பின் தேடல்களை இன்டர்நெட் இணைப்பு பெற்றதும் பேக்கிரவுண்டில் தேடல்களுக்கான பதிலை வழங்குகிறது. தேடல் முடிந்ததும் வாடிக்கையாளர்களுக்கு நோட்டிபிகேஷன் அனுப்பப்படும். 

இனி 'Manage Search' ஆப்ஷனில் வாடிக்கையாளர் பதிவு செய்த வார்த்தைகளை பார்க்க முடியும். பின் குறிப்பிட்ட வார்த்தைகளை கிளிக் செய்து தேடல்களுக்கான பதில்களை அறிந்து கொள்ள முடியும். இந்த அம்சம் வாடிக்கையாளர்களுக்கு விருப்பம் என்றால் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் படி வழங்கப்பட்டுள்ளது. 

சிலருக்கு பேக்கிரவுண்டில் இன்டர்நெட் டேட்டா பயன்படுத்த வேண்டாமெனில் இந்த ஆப்ஷனை ஆஃப் செய்து கொள்ளலாம். கூகுள் ஆஃப்லைன் சர்ச் அம்சம் குறைந்த அளவு பேட்டரி மற்றும் டேட்டாவினை பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த மாதம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கூகுள் செயலியின் அப்டேட் வழங்கப்பட்டது. தற்சமயம் கூகுள் சர்ச் கார்டுகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் விளையாட்டு, செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்டவையும் இரண்டாவது பிரிவில் தனிப்பட்ட தகவல்கள், பயணச்சீட்டு உள்ளிட்ட தகவல்களும் இடம்பெறுகிறது.

Similar News