தொழில்நுட்பம்

சாம்சங் தயாரிக்கும் டிஸ்ப்ளேவுடன் '2017 ஐபோன்': புதிய தகவல்கள் வெளியாகின

Published On 2016-12-30 14:22 GMT   |   Update On 2016-12-30 14:22 GMT
2017-ல் ஆப்பிள் நிறுவனம் வெளியிட இருக்கும் ஐபோனில் சாம்சங் நிறுவனம் தயாரிக்கும் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சான்பிரான்சிஸ்கோ:

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் வெளியாக இன்னும் பல மாதங்கள் இருந்தாலும், ஏற்கனவே புதிய ஐபோன் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. அடுத்த ஆண்டு ஐபோன்களின் 10 ஆம் ஆண்டு விழாவை குறிக்க இருப்பதால் ஆப்பிள் நிறுவனம் 2017 ஐபோனில் பல்வேறு புதிய அம்சங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய ஐபோனில் சாம்சங் நிறுவனம் தயாரிக்கும் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. அதன் படி சாம்சங் தயாரிக்கும் 5.8 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, புதிய ஐபோனில் வழங்கப்படும் என கூறப்படுகின்றது. 

2017-ல் ஆப்பிள் ஐபோன்களில் மூன்றாவது மற்றும் பிரீமியம் மாடல் சாதனத்திற்கான டிஸ்ப்ளேக்களை சாம்சங் நிறுவனம் பிரத்தியேகமாக தயாரித்து வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5.8 இன்ச் AMOLED டிஸ்ப்ளேக்களின் தயாரிப்பு பணிகள் குறைந்த அளவுகளில் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது. 

சாம்சங் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் கிட்டதட்ட 20 மில்லியன் சாதனங்களை தயாரித்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. 4.7 இன்ச் மற்றும் 5.5 இன்ச் ஐபோன்களில் OLED டிஸ்ப்ளேக்கள் வழங்கப்படாது என்றும் இவற்றில் வழக்கமான TFT-LCD டிஸ்ப்ளேக்களே வழங்கப்படும் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு  சுமார் 60-70 மில்லியன் AMOLED டிஸ்ப்ளே கொண்ட சாதனங்கள் விநியோகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

Similar News