செய்திகள்

கும்பகோணம் மகாமகக் குளத்தில் மாசிமக தீர்த்தவாரி

Published On 2019-02-19 04:55 GMT   |   Update On 2019-02-19 04:55 GMT
கும்பகோணம் மகாமகக் குளத்தில் மாசிமக தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்கள்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரசித்தி பெற்ற மகாமக திருவிழா நடைபெறும். இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகம் நட்சத்திரன்று மாசி மக திருவிழா நடைபெறும்.

அதன்படி இந்தாண்டுக் கான மாசி மகத்திருவிழாவையொட்டி கும்பகோணம் மகா மகத்திருவிழா தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர், காசி விசுவநாதர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுத மேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோவில்களில் மாசிமக திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதேபோல் 11-ந் தேதி வைணவ தலங்களான சக்கரபாணி சுவாமி கோவில், ராஜகோபால சுவாமி கோவில், ஆதிவராக பெருமாள் கோவில்களில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

இந்த நிலையில் ஆதிகும் பேஸ்வரர் கோவிலில் நேற்று பஞ்சமூர்த்தி சுவாமி வீதியுலா நடந்தது. முன்னதாக காசி விசுவநாத சுவாமி கோவில், அபிமுகேஸ்வர சுவாமி கோவில், கவுதமேஸ்வரர் கோவில்களின் தேரோட்டம் மகாமகக்குள கரையில் நேற்று மாலை நடந்தது. இதேபோல் வியாழ சோமேஸ்வரர் கோவில் தேரோட்டமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.



மாசி மக திருவிழாவை யொட்டி இன்று காலை 7 மணிக்கு சக்கரபாணி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இதையடுத்து மதியம் 12 மணியளவில் மகாமகக் குளகரையில் மாசி மக தீர்த்தவாரி நடந்தது. 10 நாள் உற்சவம் நடைபெறும் சிவன் கோவில்களான கொட்டையூர் கோடீஸ்வர சுவாமி, பாணபுரீஸ்வரர் கோவில், சாக்கோட்டை அமிர்தகலசநாதர், ஏகாம்பேஸ்வரர், நாகேஸ்வரர், ஆதிகம்பட்ட விசுவநாதர் ஆகிய 6 சிவன் கோவில்களில் இருந்து சுவாமி, அம்பாள் மகாமக குளக்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதை யடுத்து அந்தந்த கோவில் களின் அஸ்திர தேவருக்கு அபிஷேகம், தீர்த்தவாரி நடந்தது.

அப்போது மகாமகக் குளத்தை சுற்றிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி - அம்பாளை வழிபட்டனர்.

முன்னதாக இன்று காலை மாசி மக தீர்த்தவாரியையொட்டி ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு மகா மகக்குளக்கரையில் தர்ப்பணம் செய்து பூஜை நடத்தி வழிபட்டனர்.
Tags:    

Similar News