உலகம்
பர்தா அணிந்த பெண்கள்

பொது இடங்களில் பெண்கள் பர்தா கட்டாயம் அணியவேண்டும் - தலிபான்களுக்கு ஜி7 நாடுகள் கண்டனம்

Published On 2022-05-13 03:09 GMT   |   Update On 2022-05-13 07:19 GMT
ஆப்கானிஸ்தானில் வசிக்கும் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக் கூடாது என உத்தரவிட்ட தலிபான்கள், பெண்கள் மேல்நிலைக் கல்வி பயிலவும் தடை விதித்தனர்.
ஒட்டாவா:

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். தலிபான்கள் ஆட்சி அமைந்ததுமே அங்கு பழமைவாத சட்டங்கள் பின்பற்றப்படலாம் என அந்நாட்டு மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும்  கவலை தெரிவித்தனர்.

தங்களின் முந்தைய ஆட்சி காலத்தை போன்று கடுமையான ஆட்சி இருக்காது என தலிபான்கள் உறுதி அளித்தனர்.  ஆனாலும், பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை தலிபான்கள் தொடர்ந்து விதித்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில்  பெண்கள் தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைத்தபடி பர்தா அணிய வேண்டும் என தலிபான்கள் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் பெண்கள் பர்தா கட்டாயம் அணியவேண்டும் என்ற தலிபான்களின் உத்தரவுக்கு ஜி 7 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக, ஜி7 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகத்தில் முழுமையாகவும், சமமாகவும், அர்த்தமுள்ளதாகவும் பங்கேற்கும் மக்கள்தொகையின் பாதியைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News