உலகம்
பிலிப்பைன்ஸ் வெள்ளம்

பிலிப்பைன்சில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு

Published On 2022-04-13 19:27 GMT   |   Update On 2022-04-13 19:27 GMT
பிலிப்பைன்சில் வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மணிலா:

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய நகரங்களில் மேகி என பெயரிடப்பட்ட சூறாவளி தாக்கியது. இதனால், பல்வேறு நகரங்களில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது.

கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது. நகரின் பல பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதி துண்டிக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, அந்நாட்டின் லெய்டி மாகாணம் பேபே நகரில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, பிலிப்பைன்சில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 28 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும், நூற்றுக்கணக்காணோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், பிலிப்பைன்சில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர்  எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழு தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்களை தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் கடலோர காவல்படை, காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் ராணுவமும் இணைந்துள்ளது.

Tags:    

Similar News