செய்திகள்
நைஜீரியா கட்டிட விபத்து

நைஜீரியாவில் சோகம் - அடுக்குமாடி கட்டிடம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

Published On 2021-11-05 18:20 GMT   |   Update On 2021-11-05 18:20 GMT
நைஜீரியாவில் 21 அடுக்குமாடி கட்டிடம் இடிந்த விபத்தில் இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
அபுஜா:

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் லகோஸ் மாகாணம் இயோகி மாவட்டத்தில் 21 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டிடப் பணியில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையே, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த அந்த அடுக்குமாடி கட்டிடம் கடந்த திங்கட்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டிடத்தில் வேலை செய்துகொண்டிருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News