செய்திகள்
ஈரானில் பதவியேற்பு விழாவில் ஆளுநரை அறைந்த மர்மநபர்

ஈரானில் பதவியேற்பு விழாவில் ஆளுநரை அறைந்த மர்மநபரால் பரபரப்பு

Published On 2021-10-24 06:14 GMT   |   Update On 2021-10-24 06:14 GMT
ஈரானில் பதவியேற்பு விழாவில் மேடையில் பேசிக்கொண்டிருந்த ஆளுநரை மர்மநபர் ஒருவர் திடீரென அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அபிதின் கோரம் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பதவியேற்பு விழாவில் அபிதின் கோரம் மேடையில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, மேடையின் வெளியே இருந்து திடீரென உள்ளே வந்த மர்மநபர் ஆளுநரின் பின்னந்தலையில் பளார் என அறைந்தார். பின்னர், ஆளுநரிடம் சண்டையிடத் தொடங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தி விசாரணை மேற்கொண்டதில், அந்த நபரின் பெயர் அயுப் அலிசாதே என்பது தெரியவந்துள்ளது.

ஒருமுறை ஈரானின் துணை ராணுவப் புரட்சிப் படையில் பணியாற்றியபோது, சிரியாவில் கிளர்ச்சிப் படைகளால் ஆளுநர் அபிதின் கோரம் கடத்தப்பட்டுள்ளார். அதனால், இந்த தாக்குதல் சம்பவமும் தனிப்பட்ட வெறுப்புக் காரணமாக நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், தனது மனைவிக்கு ஒரு ஆண் மருத்துவ பணியாளர் கொரோனா தடுப்பூசி போட்டதால் அந்த மர்மநபர் கோபத்தில் இருந்ததாகவும் ஒரு பக்கம் கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து ஆளுநர் அபிதின் கோரம் கூறுகையில், " சம்பந்தப்பட்ட நபர் யார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், நான் சிரியாவில் இருந்தபோது எதிரிகளால் சூழப்பட்டு ஒரு நாளைக்கு 10 முறை சவுக்கடி வாங்கி இருக்கிறேன். பலமுறை என் நெற்றியில் துப்பாக்கி ஏற்றப்பட்டுள்ளது. அந்த எதிரிகளுக்கு இணையாக இந்த நபரை கருதுகிறேன். இருப்பினும் அவரை மன்னிப்போம்" என்றார்.


Tags:    

Similar News