செய்திகள்
ஜபிஹுல்லா முஜாஹித்

ஆப்கானிஸ்தானில் இணை மந்திரி நியமனத்திலும் பெண்களுக்கு வாய்ப்பு இல்லை

Published On 2021-09-22 04:29 GMT   |   Update On 2021-09-22 06:43 GMT
கல்வி உரிமை, வேலைக்கு செல்லும் உரிமை போன்றவை வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்த நிலையில் மந்திரிசபையில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது சர்வதேச அளவில் கண்டனத்துக்கு வழிவகுத்தது.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் முழு நாட்டையும் தங்கள் வசமாக்கிய தலிபான் பயங்கரவாதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிவிட்டு புதிய இடைக்கால அரசை அறிவித்தனர்.

அதனை தொடர்ந்து, புதிய அரசின் மந்திரி சபையை கடந்த 8-ந்தேதி தலிபான்கள் அறிவித்தனர். தலிபான்களின் இந்த மந்திரி சபையில் ஒரு பெண் கூட இல்லை. கடந்த முறையை போன்று ஆட்சி இருக்காது, பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும், கல்வி உரிமை, வேலைக்கு செல்லும் உரிமை போன்றவை வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்த நிலையில் மந்திரிசபையில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது சர்வதேச அளவில் கண்டனத்துக்கு வழிவகுத்தது.

இந்த நிலையில் புதிய அரசின் இணை மந்திரிகள் பட்டியலை தலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் நேற்று வெளியிட்டார். இதிலும் ஒரு பெண்ணுக்கு கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

எனினும் வரும் காலங்களில் பெண்களுக்கும் மந்திரி சபையில் வாய்ப்பு வழங்கப்படும் என ஜபிஹுல்லா முஜாஹித் கூறினார். இதுபற்றி அவர் கூறுகையில் “இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இணை மந்திரிகள் பட்டியலில் சிறுபான்மையாக இருக்கும் ஹசரா பிரிவினருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இப்போது அமைத்துள்ள அரசு இடைக்கால அரசு. இனிவரும் காலங்களில் மந்திரிசபை விரிவாக்கம் நடக்கும்போது, பெண்களும் மந்திரிசபையில் சேர்க்கப்படுவார்கள்” என்றார்.


Tags:    

Similar News