செய்திகள்
நைஜீரியாவின் எனுகு நகரம்

குடியிருப்பில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ் அதிகாரி -5 பேர் பலி

Published On 2021-06-21 16:11 GMT   |   Update On 2021-06-21 16:11 GMT
தாக்குதல் நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
லாகோஸ்:

நைஜீரியாவின் தென்கிழக்கு பகுதியில் கடந்த சில மாதங்களாக பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதில், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டுள்ளனர். இக்போ இன மக்களுக்கு தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி வரும் பியாஃப்ரா பழங்குடி மக்கள் என்ற அமைப்பு இந்த தாக்குதல்களை நடத்துவதாக சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், இதனை அந்த அமைப்பு மறுத்துள்ளது.

இந்நிலையில், எனுகு நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று திடீரென ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் புகுந்து, அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், 5 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்திய இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. 

1967ஆம் ஆண்டில் பியாஃப்ராவின் சுதந்திர பிரகடனம் செய்யப்பட்டதையடுத்து, 30 மாதங்கள் உள்நாட்டு போர் நடைபெற்றது. மத்திய படையினர் நடத்திய தாக்குதல்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இக்போ மக்கள் கொல்லப்பட்டனர். அதன்பின்னர், கிளர்ச்சி ஒடுக்கப்பட்டது. அதன்பின்னர், பியாஃப்ரா பழங்குடி மக்கள் அமைப்பானது, வாக்கெடுப்பின் மூலம் பியாஃப்ரா சுதந்திர அரசை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
Tags:    

Similar News