செய்திகள்
மெகுல் சோக்சி

மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் சிக்கல் -கரீபியன் கோர்ட் இடைக்கால தடை

Published On 2021-05-28 07:22 GMT   |   Update On 2021-05-28 07:22 GMT
மறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வரை மெகுல் சோக்சியை டொமினிகா போலீசார் வெளியேற்ற மாட்டார்கள் என்று நீதிபதி பிர்னி ஸ்டீபன்சன் தெரிவித்தார்.
புதுடெல்லி:

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இதனால், சி.பி.ஐ. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர்.

ஆன்டிகுவாவில்  தஞ்சம் அடைந்திருந்த மெகுல் சோக்சியை (வயது 62) அவரை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அவரை நாடு கடத்துவது தொடர்பான சட்ட நகர்வுகளை மேற்கொண்டு வந்த நிலையில், திடீரென மெகுல் சோக்சியை காணவில்லை. 

ஆன்டிகுவாவை விட்டு வெளியேறிய மெகுல் சோக்சி, படகு மூலம் அருகில் உள்ள சிறிய தீவு நாடான டொமினிகாவுக்கு சென்றபோது போலீசில் சிக்கினார். டொமினிகாவில் இருந்து கியூபாவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது போலீசில் சிக்கியதாக தகவல் வெளியானது. அவரிடம் டொமினிகா போலீசார் விசாரணை நடத்தினர்.

டொமினிகா போலீஸ் கஸ்டடியில் உள்ள மெகுல் சோக்கியை ஆன்டிகுவா அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட மெகுல் சோக்சியை டொமினிகாவிலிருந்து நேரடியாக இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு ஆன்டிகுவா மற்றும் பார்புடா பிரதமரான கேஸ்டன் பிரவுன் கோரிக்கை வைத்தார். 

ஆனால் சோக்சி இப்போது இந்தியக் குடிமகன் அல்ல, ஏற்கெனவே இருக்கும் சட்டங்களின்படி அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த முடியாது என்று சோக்சியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறினார். அத்துடன், கிழக்கு கரீபியன் உச்ச நீதிமன்றத்தில் சோக்சியின் வழக்கறிஞர்கள் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தனர். இதையடுத்து மெகுல் சோக்சியை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம்.

மறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வரை மெகுல் சோக்சியை டொமினிகா போலீசார் வெளியேற்ற மாட்டார்கள் என்று நீதிபதி பிர்னி ஸ்டீபன்சன் தெரிவித்தார். மேலும், சோக்சி அவரது வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதித்தும் உத்தரவிட்டார். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இன்று மீண்டும் நடைபெறுகிறது.

ஆன்டிகுவா-பார்புடா, டொமினிகா உள்ளிட்ட 6 சுயாதீன நாடுகள் கிழக்கு கரீபியன் உச்ச நீதிமன்ற வரம்பிற்குள் வருகின்றன.
Tags:    

Similar News