செய்திகள்
தீர்ப்பை கொண்டாடும் மக்கள்

நீதி வென்றுவிட்டது... ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை கொண்டாடும் மக்கள்

Published On 2021-04-21 04:17 GMT   |   Update On 2021-04-21 10:53 GMT
ஜார்ஜ் பிளாய்டுக்காக மட்டும் போராடவில்லை, உலகில் உள்ள ஒவ்வொருவருக்காகவும் போராடுகிறேன் என அவரது சகோதரர் கூறி உள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு, கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் தனது கால் முட்டியை வைத்து அழுத்தியது, இதனால் அவர் மூச்சுவிட முடியாமல் திணறி உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. 

ஜார்ஜ் பிளாய்டின் சாவுக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. இனவெறிக்கு எதிராகவும் போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும் நடந்த இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவையே உலுக்கியது. 

ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் உள்பட 4 போலீசார் மற்றும் மினியாபோலீஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டெரிக் சாவின் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. அவரின் குற்றத்துக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.





இந்த தீர்ப்பை ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். தீர்ப்பைக் கேட்டதும் ஜார்ஜ் பிளாய்டுக்கு மரியாதை செலுத்தியும், கண்ணீர் மல்க நீதித்துறைக்கு நன்றி தெரிவித்தும் கொண்டாடிவருகின்றனர். நீதி வென்றுவிட்டதாக பலரும் கருத்து பதிவிட்டுவருகின்றனர்.

இந்த தீர்ப்பு பலருக்கு கிடைத்த வெற்றி என்றும், இன்று நாம் மீண்டும் சுவாசிக்க முடிகிறது என்றும் ஜார்ஜ் ஃபிளாய்டின் குடும்பத்தினர் கூறி உள்ளனர். ஆனால் நீதிக்கான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை என்றும் குறிப்பிட்டனர். 

ஜார்ஜ் பிளாய்டுக்காக மட்டும் போராடவில்லை, உலகில் உள்ள ஒவ்வொருவருக்காகவும் போராடுகிறேன் என அவரது சகோதரர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News