செய்திகள்
இளவரசர் ஹாரி

தாத்தாவின் இறுதி சடங்கில் பங்கேற்க இளவரசர் ஹாரி அமெரிக்காவில் இருந்து லண்டன் சென்றார்

Published On 2021-04-12 22:42 GMT   |   Update On 2021-04-12 22:44 GMT
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதி சடங்குகள் வருகிற 17-ந் தேதி நடைபெறுகின்றன.
லண்டன்:

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 99. அவரின் இறுதி சடங்குகள் வருகிற 17-ந் தேதி நடைபெறுகின்றன. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக மிகவும் நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இளவரசரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற பொறுப்பில் இருந்து விலகி தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இளவரசர் ஹாரி தனது தாத்தாவின் இறுதி சடங்கில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது.

எனினும் இளவரசர் ஹாரிக்கும், அரச குடும்பத்துக்கும் இடையிலான உறவு எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் ஹாரி தனது தாத்தாவின் இறுதி சடங்கில் பங்கேற்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. பக்கிங்ஹாம் அரண்மனையும் இதனை உறுதி செய்தது.

அதன்படி தனது தாத்தாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக 36 வயதான இளவரசர் ஹாரி நேற்று முன்தினம் இரவு லண்டன் சென்றடைந்தார். அவர் லண்டனில் உள்ள கென்சிங்டன் அரண்மனையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இளவரசர் ஹாரியின் மனைவியும், முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகன் தற்போது கர்ப்பமாக இருப்பதால் அவர் தனது கணவருடன் லண்டன் செல்லவில்லை.
Tags:    

Similar News