செய்திகள்
உலக சுகாதார அமைப்பு

பணக்கார நாடுகள் மீது உலக சுகாதார அமைப்பு குற்றச்சாட்டு

Published On 2021-04-10 09:47 GMT   |   Update On 2021-04-10 12:24 GMT
கொரோனா தடுப்பு மருந்துகளை பணக்கார நாடுகள் அதிக அளவில் பெறுகின்றன என்று உலக சுகாதார அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.

ஜெனீவா:

கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்துகளை உருவாக்கி உள்ளன. அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் தடுப்பூசிகளை தங்களது குடிமக்களுக்கு செலுத்தி வருகின்றன.

ஆனால் ஏழை மற்றும் நடுத்தர நாடுகள் கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்க மிகவும் சிரமப்படுகின்றன. இதனால் அந்நாட்டு மக்கள் தடுப்பூசி கிடைக்காமல் தவிக்கிறார்கள்.

இதையடுத்து உலக சுகாதார அமைப்பு ‘கோவாக்ஸ்’ என்ற திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து தடுப்பு மருந்துகளை பெற்று ஏழை நாடுகளுக்கு அளித்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு மருந்துகளை பணக்கார நாடுகள் அதிக அளவில் பெறுகின்றன என்று உலக சுகாதார அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் கூறியதாவது:-

உலக அளவில் நிர்வகிக்கப்படும் 700 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக பணக்கார நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.


பணக்கார நாடுகளில் நான்கு பேரில் ஒருவர் தடுப்பூசியை குறைந்தபட்சம் ஒரு டோசை பெற்றுள்ளார். ஆனால் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 500 பேரில் ஒருவருக்கு மட்டுமே கிடைத்துள்ளது.

தடுப்பூசிகளின் உலக அளவிலான வினியோகத்தில் அதிர்ச்சியூட்டும் ஏற்றத்தாழ்வு உள்ளது. கோவாக்ஸ் திட்டத்தில் இதுவரை உலக அளவில் சுமார் 38 மில்லியன் மருந்து வழங்கப்பட்டுள்ளது. இது உலக மக்கள் தொகையில் 0.25 சதவீதத்தை ஈடுசெய்வது ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News