செய்திகள்
சீரான கப்பல் போக்குவரத்து

சூயஸ் கால்வாயில் இயல்பு நிலை திரும்பியது - கப்பல் போக்குவரத்து தொடக்கம்

Published On 2021-03-30 23:02 GMT   |   Update On 2021-03-30 23:02 GMT
சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர் கிவன் சரக்கு கப்பல் கரையிலிருந்து நகர்த்தப்பட்டு மிதக்கத் தொடங்கியதால் அங்கு முற்றிலும் இயல்பு நிலை திரும்பியது.
கெய்ரோ:

ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான எவா் கிவன் என்ற சரக்கு கப்பல், கடந்த செவ்வாய்க்கிழமை உலகின் முக்கிய நீர் வழித் தடங்களில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சென்றபோது புழுதி புயல் காரணமாக குறுக்கே திரும்பி கால்வாயின் பக்கவாட்டில் சிக்கிக்கொண்டது.

இதனால், உலகின் 12 சதவீத வா்த்தகத்துக்குப் பயன்படுத்தப்படும் அந்த கால்வாயில் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது.

கச்சா எண்ணெய், கால்நடைகள் உள்ளிட்டவற்றுடன் 360-க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் கால்வாயின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. இதனால் சர்வதேச வர்த்தகத்தில் நாளொன்றுக்கு ரூ.65 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.‌



இதற்கிடையே சகதியை அகற்றும் ராட்சத எந்திரங்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட இழுவை படகுகளைக் கொண்டு அந்த ராட்சத சரக்கு கப்பலை கரையில் இருந்து நகர்த்தி மீண்டும் மிதக்க வைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக இரவு, பகலாக நடந்து வந்தன.

சரியாக ஒரு வாரம் நடந்த தீவிர மீட்பு பணியின் பலனாக நேற்று முன்தினம் மதியம் எவர் கிவன் சரக்கு கப்பல் கரையிலிருந்து நகர்த்தப்பட்டு மீண்டும் மிதக்கத் தொடங்கியது. மாலையில் அந்த கப்பல் அங்கிருந்து அகற்றப்பட்ட பின்னர் சூயஸ் கால்வாயில் முற்றிலும் இயல்பு நிலை திரும்பியது.

இந்நிலையில், நேற்று காலை முதல் சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இரு மார்க்கத்திலும் இருந்து சூயஸ் கால்வாய் வழியாக 113 கப்பல்கள் கடந்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News