செய்திகள்
சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல்

சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் மீண்டும் மிதக்க தொடங்கியது

Published On 2021-03-29 04:34 GMT   |   Update On 2021-03-29 04:34 GMT
கால்வாயின் கரைகளில் மோதி தரைதட்டிய கப்பலையொட்டி இதுவரை 18 மீட்டர் ஆழத்திற்கு 27,000 கன மீட்டர் மணல் தோண்டப்பட்டுள்ளது.
கெய்ரோ:

சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான எவர்கிவன் என்ற சரக்கு கப்பல், கடந்த செவ்வாய்க்கிழமை சூயஸ் கால்வாயின் இரண்டு பக்க கரைகளில் மோதி சிக்கிக்கொண்டது. மணல் மற்றும் சகதியில் சிக்கியதால் கப்பலை நகர்த்த முடியவில்லை.

இதனால் அந்த வழித்தடத்தில், கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 450-க்கும் அதிகமான கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடக்க முடியாமல் நடுக்கடலில் நிற்கின்றன. இந்த சம்பவத்தால், சர்வதேச வர்த்தகம், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கப்பலின் இடது பக்கத்தில் இருக்கும் மணல் மற்றும் சகதியை நீக்கி, கப்பலை மீண்டும் நீரில் மிதக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பல்வேறு இழுவைப் படகுகளும், இரண்டு அகழ்வு எந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டன. 

தொடர் முயற்சிகளின் காரணமாக, கப்பல் மிதக்கத் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கப்பல் மிதக்கத் தொடங்கினாலும், கால்வாய் எப்போது போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்பது உறுதி செய்யப்படவில்லை. 

தரைதட்டிய கப்பலையொட்டி இதுவரை 18 மீட்டர் ஆழத்திற்கு 27,000 கன மீட்டர் மணல் தோண்டப்பட்டு ஆழப்படுத்தப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமைக்குள் மணலை அகற்றி கப்பலை மிதக்க வைக்க எகிப்து அரசு அவகாசம் கொடுத்துள்ளது. முடியாவிட்டால், கப்பலில் உள்ள கண்டெய்னர்களை இறக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. 

இப்போது கப்பல் மிதக்க தொடங்கியிருப்பதால் கண்டெய்னர்களை இறக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மெதுவாக கப்பலை நகர்த்தி கால்வாயின் மையப்பகுதிக்கு கொண்டு வந்ததும் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கப்பலின் முன்புறம் சேதமடைந்துள்ளது. எனினும், கப்பல் பயணம் செய்யும் அளவிற்கு பாதுகாப்பாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News