செய்திகள்
கோப்புப்படம்

மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அகதி சுட்டுக்கொலை

Published On 2021-01-30 19:15 GMT   |   Update On 2021-01-30 19:15 GMT
மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அகதியை ரோந்து படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
டெக்சாஸ்:

மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அகதிகள் விவகாரத்தில் கடுமையான போக்கை கையாண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், அகதிகள் நுழைவதை தடுக்க மெக்சிகோ எல்லையில் பாதுகாப்புகளை பலப்படுத்தினார். அத்துடன் அவர் மெக்சிகோ எல்லையில் ராட்சத சுவர் அமைக்கும் பணியையும் தொடங்கினார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

இதனால் அமெரிக்காவுக்குள் நுழைவதற்காக நூற்றுக்கணக்கான அகதிகள் மெக்சிகோ எல்லையில் குவிந்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மெக்சிகோ எல்லையை ஒட்டியுள்ள அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹிடல்கோ நகருக்குள் நுழைவதற்கு அகதிகள் பலர் முயற்சித்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லை ரோந்து படை வீரர் ஒருவர், அகதிகளை விரட்டியடிக்க முயற்சித்தார். ஒரு கட்டத்தில் அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அகதிகளை அச்சுறுத்தினார்.‌ இதைக் கண்டு பயந்த அகதிகள் வந்த வழியே திரும்பி ஓடினர். ஆனால் ஒருவர் மட்டும் இதனைப் பொருட்படுத்தாமல் முன்னேறி வந்தார். இதையடுத்து எல்லை ரோந்து படை வீரர் துப்பாக்கியால் அந்த நபரை சுட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அதனைத் தொடர்ந்து எல்லை ரோந்து படை வீரர் அந்த நபரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க மத்திய புலனாய்வு போலீசார் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News