செய்திகள்
கடலுக்கடியில் பொருத்தப்பட்ட நவீன கருவி

சுற்றுச்சூழல் மாற்றங்களை நீண்ட காலம் கண்காணிக்க நவீன கருவி கடலுக்கடியில் பொருத்தப்பட்டது

Published On 2021-01-20 03:10 GMT   |   Update On 2021-01-20 03:10 GMT
சார்ஜா பகுதியில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் பருவ மாறுபாடுகளை தொடர்ந்து நீண்ட காலம் கண்காணிப்பதற்கு வசதியாக நவீன கருவி ஒன்று கடலுக்கடியில் பொருத்தப்பட்டுள்ளது.
சார்ஜா:

சார்ஜா சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் ஆணையத்தின் தலைவர் ஹனா சைப் அல் சுவைதி கூறியதாவது:-

சார்ஜா பகுதியில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் பருவ மாறுபாடுகளை தொடர்ந்து நீண்ட காலம் கண்காணிப்பதற்கு வசதியாக நவீன கருவி ஒன்று கடலுக்கடியில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவியானது சார்ஜாவில் உள்ள சர் புநைர் தீவின் கடல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த தீவுப்பகுதியானது சுற்றுச்சூழல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இயற்கை பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இங்கு கடலுக்கடியில் தற்போது நவீன கருவியானது மூழ்க வைக்கப்பட்டு அங்கு தரைப்பகுதியில் கான்கிரீட்டால் செய்யப்பட்ட மேடையில் இந்த நவீன கருவியானது பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கருவியில் இருந்து கடல்சார் தகவல்கள், படங்கள், வீடியோக்கள், வானில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், செயற்கைகோள் படங்கள் உள்ளிட்டவைகளை சேகரித்து வைத்துக்கொள்ள முடியும். அதேபோல் நிரந்தரமாக கடலில் இருந்தபடியே இந்த கருவியானது தொடர்ந்து கடல் சூழியலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த தகவல்களை அளிக்கும். குறிப்பாக கடல்நீரின் வெப்பநிலை, உப்புத்தன்மை, அமில, காரத்தன்மை (பி.ஹெச்.), நீலப்பச்சை பாசிகளின் அளவு, காற்றின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றழுத்தம், மழையளவு, சூரியகதிர்வீச்சின் அளவு உள்ளிட்டவைகள் அனைத்தையும் கண்காணிக்கும்.

இந்த கருவியானது சார்ஜா சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனைத்து தகவல்கள் மற்றும் மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News