செய்திகள்
கிம் ஜாங் உன்

நான் உங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை - நாட்டு மக்களிடம் கண்கலங்கிய வடகொரிய அதிபர்

Published On 2020-10-13 10:42 GMT   |   Update On 2020-10-13 13:27 GMT
வடகொரியாவில் நடைபெற்ற ராணுவ அணி வகுப்பு நிகழ்ச்சியின் போது, அதிபர் கிம் ஜாங் உன் உணர்ச்சிவசமாக பேசி மக்களைப் பார்த்து கண்கலங்கினார்.
சியோல்:

வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, ராணுவ அணி வகுப்பு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த ராணுவ அணி வகுப்பின்போது ஹவாசோங் -16 என்ற புதிய ஏவுகணையை அறிமுகப்படுத்தியது வடகொரியா.

இந்த புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆயுதம் பயங்கரமானது என்று பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், இந்த ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியின்போது பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

அவர் பேசியது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், எங்கள் நாட்டு மக்கள் வானத்தை விட உயரமாகவும், கடல் போன்று ஆழமாகவும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

ஆனால், அதை நான் திருப்திகரமாக செய்ய தவறிவிட்டேன். நான் உங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. இதற்காக மிகவும் வருந்துகிறேன். இந்த நாட்டை வழிநடத்திய தந்தை மற்றும் தாத்தாவைப் பற்றி கூறிய கிம் ஜாங், அதன் பின் இந்த நாட்டை வழி நடத்தும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கு மக்கள் என்மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. என் முயற்சிகள் எப்போதும் நேர்மையாகவே இருக்கும், தங்கள் வாழ்க்கையில் உள்ள சிரமங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்று தந்தை மற்றும் தாத்தாவை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்

இது குறித்து பேசும் போது, கிம் கண்கலங்கி விட்டதாகாவும், கிம்மின் உரையைக் கேட்டு அங்கிருக்கும் மக்கள் பலரும் கண்கலங்கி விட்டதாகவும், ராணுவ வீரர்களுக்கு அவர் ஆற்றிய உரையைக் கண்டு சில ராணுவ வீரர்களும் உணர்ச்சியில் கண்கலங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், கிம்மின் இந்த உணர்ச்சிவசமான உரையைக் கண்ட ஆய்வாளர்கள் பலரும் கிம் மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக இப்படி பேசியுள்ளதாகக் கூறுகின்றனர்.


Tags:    

Similar News