செய்திகள்
ஆலங்கட்டி மழை பெய்தபோது அதில் விழுந்த ஐஸ் கட்டிகளை கையில் ஒருவர் பிடித்து பார்த்த காட்சி.

அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழை

Published On 2020-10-01 05:39 GMT   |   Update On 2020-10-01 05:39 GMT
ராசல் கைமா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது.
ராசல் கைமா:

அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:-

அமீரகத்தின் சில பகுதிகளில் நேற்று வெப்பநிலை குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக திடீரென மழையாக பெய்தது. ராசல் கைமா பகுதியில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இளைஞர்கள் சிலர் ஆலங்கட்டிகளை கையில் எடுத்து வைத்து மகிழ்ச்சியுடன் விளையாடினர்.

இந்த ஆலங்கட்டி மழையானது ராசல் கைமாவின் புரைக் பகுதியிலும், சார்ஜாவின் அல் உகைதிர் பகுதியிலும், புஜேரா செல்லும் ஷேக் கலீபா சாலையிலும் பெய்தது. வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனத்தின் மீது சடசடவென ஆலங்கட்டியானது விழுந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து அந்த பனிக்கட்டிகளை கையில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர்.

‘வாதி’ எனப்படும் பள்ளத்தாக்கு பகுதியில் இந்த மழை காரணமாக திடீர் வெள்ளம் ஏற்படலாம். எனவே பொதுமக்கள் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு வாகனங்களில் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.

ராசல் கைமாவின் கத்ரா பகுதியிலும் இந்த ஆலங்கட்டி மழை பெய்தது. இதனை அந்த பகுதி மக்கள் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள பாலைவனப் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஒட்டகங்கள் ஆலங்கட்டி மழை காரணமாக அதன் முகாம்களுக்கு வேகமாக ஓடுவதை காண முடிந்தது.

இந்த பகுதியில் சில நேரங்களில் காலநிலை மாற்றத்தின் போது ஆலங்கட்டி மழை பெய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. புஜேராவுக்கு செல்லும் ஷேக் கலீபா சாலை, ராசல் கைமாவின் அஸ்பனி, அல் கைல் மற்றும் சவ்கா சாலை ஆகிய இடங்களில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் தேங்கியிருந்தது.

வருகிற நாட்களில் அமீரகத்தின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்புள்ளது. எனவே வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மிகவும் கவனமுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News