செய்திகள்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

இம்ரான்கான் பதவி விலக கோரி நாடு தழுவிய போராட்டம்- அனைத்துக்கட்சிகள் முடிவு

Published On 2020-09-21 08:10 GMT   |   Update On 2020-09-21 08:10 GMT
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவி விலக கோரி நாடு தழுவிய போராட்டம் நடத்த அனைத்துக்கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் இருந்து வருகிறார். அவருடைய செயல்பாடுகளை கண்டித்து ஏற்கனவே அரசியல் கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தன.

இந்த நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.

இது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நேற்று பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஏற்பாட்டின்படி நடை பெற்றது.

இதில், முதன்மை எதிர்க்கட்சிகளான நவாஸ் செரீப்பின் பாகிஸ்தானின் முஸ்லிம் லீக், ஜமைத் உலாமா மற்றும் பல்வேறு கட்சிகள் பங்கேற்றன.

அதில், 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பிரதமர் இம்ரான்கானால் செயல்பட முடியவில்லை. அவரால் தன்னிச்சையாக அரசை நடத்த முடியவில்லை.

ஆட்டிப்படைக்கும் பொம்மையாக அவர் இருந்து வருகிறார். இதனால் நாடு மிகவும் கீழ்நோக்கி சென்று விட்டது.

ஆபத்தான நிலையில் நாடும், அமைப்புகளும் உள்ளன. எனவே, இம்ரான் கான் பதவியில் நீடிக்க தகுதியில்லை.

எனவே, அவர் பதவியில் இருந்து உடனடியாக விலக கோரி நாடு தழுவிய போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்தனர்.

இதன்படி முதல் கட்டமாக 4 பிராந்தியங்களிலும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து அக்டோபர் மாதம் கூட்டு போராட்டத்தை நடத்துவது, 2-வது கட்டமாக டிசம்பர் மாதம் பெரிய அளவில் பேரணி நடத்துவது,

இறுதி கட்டமாக ஜனவரி மாதம் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி மாபெரும் ஊர்வலம் செல்வது, அப்போது அவரை பதவி விலக நெருக்கடி கொடுப்பது என்று முடிவு எடுத்து இருக்கிறார்கள்.

இந்த கூட்டம் நடந்த போது, லண்டனில் இருந்த முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் டெலிபோன் மூலமாக உரை நிகழ்த்தினார்.

திறமையற்ற இம்ரான் கானிடம் இருந்து நாட்டை காப்பாற்ற இந்த முயற்சிகளை நாங்கள் எடுத்துள்ளோம் என்று கூறினார்.

Tags:    

Similar News