செய்திகள்
கத்திக்குத்து தாக்குதல் நடந்த பகுதி

இங்கிலாந்து - மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலி - 7 பேர் படுகாயம்

Published On 2020-09-06 14:32 GMT   |   Update On 2020-09-06 14:32 GMT
இங்கிலாந்து நாட்டில் மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் 1 நபர் உயிரிழந்தார். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.
லண்டன்:

இங்கிலாந்து நாட்டின் வெஸ்ட் மிட் லேண்ட்ஸ் மாகாணத்தின் பர்மிங்காம் நகரின் இரவு நேர நிகழ்ச்சிகளுக்கு மிகவும் பிரபலமான இடமான கான்ஸ்டிடியுசன் ஹில் பகுதியில் நேற்று இரவு முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அப்போது இரவு 12.30 மணியளவில் அப்பகுதிக்கு வந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினார். 

பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்ற அந்த மர்ம நபர் லிவரி தெரு, இர்விங் தெரு, ஹர்ஷ் தெரு ஆகிய பகுதிகளுக்கு அடுத்தடுத்து சென்று அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் மீது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை
கொண்டு தாக்குதல் நடத்தினார். 

இரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை அந்த மர்ம நபர் தெருக்களில் சுற்றித்திருந்து தன் கண்ணில் பட்டவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால், போலீசார் வருவதற்கு முன்னர் கத்தி குத்து தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர் அப்பகுதியை விட்டு தப்பிச்சென்றுவிட்டார்.

இதையடுத்து, கத்தி குத்து தாக்குதலில் படுகாயமடைந்த 8 பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 8 பேரில் 1 நபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

எஞ்சிய 7 பேருக்கும் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற மர்மநபரை தீவிரமாக தேடிவருகின்றனர். 

இங்கிலாந்து நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான பர்மிங்கமில் நடைபெற்ற இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். 

  
Tags:    

Similar News