செய்திகள்
அமெரிக்கன் ஏர்லைன்ஸ்

அரசு கொடுத்த நிதியுதவி அனைத்தும் காலி - 19 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் முடிவு

Published On 2020-08-26 00:51 GMT   |   Update On 2020-08-26 00:51 GMT
அமெரிக்க அரசு கொடுத்த நிதியுதவி அடுத்த மாதத்துடன் முடிவுக்கு வருவதால் 19 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமெரிக்க ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வாஷிங்டன்:

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பல விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், பல மாதங்களாக விமான போக்குவரத்து நடைபெறாததால் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்கள் திவாலாகி வருகின்றன.

ஒரு சில விமான நிறுவனங்களுக்கு அந்நிறுவனத்தை சேர்ந்த நாடுகள் நிதி உதவி செய்து வருகின்றன. இதனால் விமான ஊழியர்களின் வேலை உறுதிபடுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனமான அமெரிக்கன் ஏர்லைசும் கொரோனா காரணமாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. 

நிதி நிலையை சமாளிக்கவும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு 25 மில்லியன் டாலர்களை கடந்த மார்ச் நிதியாக வழங்கியது.

இதனால், ஊழியர்களுக்கு சம்பளம் போன்ற பல்வேறுவகையிலான பிரச்சனைகளுக்கு பல மாதங்கள் தீர்வு கிடைத்துவந்தது. ஆனால், அமெரிக்க அரசு கொடுத்த நிதி அடுத்த மாதத்துடன் காலியாகுகிறது.

இந்த நிலைமையை சரிகட்ட மேலும் 25 மில்லியன் நிதியுதவி வழங்கவேண்டும் என  அமெரிக்கன் ஏர்லைன்ஸ் சார்பில் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

ஆனால், அமெரிக்கன் ஏர்லைன்சுக்கு நிதியுதவி வழங்க அனுமதிப்பது தொடர்பாக செனெட் சட்ட உறுப்பினர்கள் இதுவரை வாக்களிக்கவில்லை. இதனால் நிதி உதவி அளிப்பது தொடர்பாக முடிவெடுப்பதில் அமெரிக்க அரசுக்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அரசு நிர்வாகம் நிதி உதவி வழங்காததால் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 19 ஆயிரம் விமான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரசு நிதி வழங்கும் பட்சத்தில் இந்த வேலை இழப்பு தவிர்க்கப்படலாம் இல்லையேல் 19 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்க முடிவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 ஆயிரம் பேர் வேலைஇழக்கலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளதால் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News