செய்திகள்
அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை கொண்டாடிய அமெரிக்க வாழ் இந்தியர்கள்

ராமர் கோவில் பூமி பூஜை விழா- வாஷிங்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கொண்டாட்டம்

Published On 2020-08-05 06:45 GMT   |   Update On 2020-08-05 06:45 GMT
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவை அமெரிக்க வாழ் இந்தியர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
வாஷிங்டன்:

அயோத்தியில் பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு ராமருக்கு கோவில் கட்டுவதற்கான அனுமதியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியது. இதனை தொடர்ந்து ‘ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை நிறுவியது. அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டுவது என முடிவு செய்து, இந்த அறக்கட்டளை சார்பில் கோவில் கட்டுமான பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதன்படி இன்று ஆகஸ்டு 5-ந்தேதி (ராமர் கோவிலுக்கான பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு இந்து மதத்தலைவர்களும், அரசியல் கட்சியினரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவை கொண்டாடும் விதமாக, அங்கு வாழும் இந்தியர்கள் பலர் திரண்டு வந்திருந்தனர். அவர்கள் தங்கள் கைகளில் காவிக் கொடிகளை ஏந்தியவாறு ராமரைப் போற்றி கோஷங்களை எழுப்பினர். மேலும் பூமி பூஜை விழாவிற்கு அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாழ்த்துகளை தெரிவிக்கும் விதமாக வாஷிங்டன் நகரில் கேபிடல் ஹில் பகுதியில் ஊர்வலமாக சென்றனர்.

சமூக விலகலை கடைபிடித்து, முகக்கவசங்கள் அணிந்தபடி ஊர்வலமாக சென்று, அமெரிக்க வாழ் இந்தியர்கள் அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவைக் கொண்டாடினர்.   
Tags:    

Similar News