செய்திகள்
கோப்பு படம்

மது போதையில் ராணுவ வீரர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் - பொதுமக்கள் 12 பேர் பலி

Published On 2020-07-31 23:03 GMT   |   Update On 2020-07-31 23:03 GMT
காங்கோ நாட்டில் மது போதையில் ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பொதுமக்கள் 12 பேர் உயிரிழந்தனர்.
கின்ஷாசா:

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. சண்டையில் ஈடுபட்டுவரும் கிளர்ச்சியாளர்கள் குழுக்களை ஒடுக்கவும், பாதுகாப்புக்காகவும் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவம் பணியமர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் கிவு மாகாணம் சங் நகரில் நேற்று மது போதையில் வந்த ஒரு ராணுவ வீரர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நின்று கொண்டிருந்த பொதுமக்களை குறிவைத்து கண்மூடித்தனமாக திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.

இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்கும் ஓடினர். ஆனாலும், அந்த ராணுவ வீரர் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றான்.

ராணுவ வீரர் நடத்திய பயங்கர தாக்குதலில் பொதுமக்களில் 12 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற ராணுவ வீரரை தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து சங் நகர மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News