செய்திகள்
ஜோ பிடென், ஹிலாரி கிளிண்டன்

ஜோ பிடெனுக்கு, ஹிலாரி கிளிண்டன் ஆதரவு - அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்

Published On 2020-04-30 06:44 GMT   |   Update On 2020-04-30 06:44 GMT
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், கடந்த தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன், ஜோ பிடெனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கு மாகாண வாரியாக தேர்தல் நடந்து வருகிறது. இதில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். எனவே டிரம்பை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் இவர்தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதனால் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் பலரும் தொடர்ந்து, ஜோ பிடெனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, செனட்சபை எம்.பி. பெர்னி சாண்டர்ஸ் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.க்கள் கமலா ஹாரிஸ், பிரமீளா ஜெயபால் உள்ளிட்டோர் ஜோ பிடெனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிட்டவருமான ஹிலாரி கிளிண்டன், ஜோ பிடெனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் கூறுகையில், “அமெரிக்காவுக்கு ஒரு உண்மையான ஜனாதிபதி தேவை. டிரம்பை போல் தொலைக்காட்சிகளில் மட்டும் பங்கு வகிக்கும் ஜனாதிபதி நாட்டுக்கு தேவையில்லை. எனவேதான் எனது அருமை நண்பர் ஜோ பிடெனை அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்ய எனது முழு ஆதரவை தெரிவிக்கிறேன்” என கூறினார்.

Tags:    

Similar News