செய்திகள்
ரஷிய அதிபர் புதின் மற்றும் அவரை சந்திக்க காத்திருந்த எர்டோகன்

சந்திப்பை தாமதப்படுத்தி துருக்கி அதிபரை அவமானப்படுத்தினாரா விளாடிமிர் புதின்? வீடியோ

Published On 2020-03-10 01:38 GMT   |   Update On 2020-03-10 01:38 GMT
இட்லிப் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த மாஸ்கோ சென்ற துருக்கி அதிபர் எர்டோகனை ரஷிய அதிபர் புதின் நீண்ட நேரம் காக்க வைப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாஸ்கோ: 

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அந்நாட்டு அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. 

கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம்  தாக்குதல் நடத்திவருகிறது. ஆனால், கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது.
 
கடந்த சில வாரங்களாக நடைபெற்ற சண்டையில் சிரியா மற்றும் துருக்கி என இரு தரப்பிலும் 50-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சண்டையில் சிரிய படைகளுக்கு ஆதரவு அளிக்கும் ரஷியா, கிளர்ச்சியாளர்களையும் துருக்கி படைகளையும் குறிவைத்து அதிரடி தாக்குதல்களை நடத்தியது.   

இதற்கிடையில், இட்லிப் விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் மாஸ்கோவில் கடந்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இட்லிப் மாகாணத்தில் நடைபெற்றுவரும் சண்டையை நிறுத்த இரு நாடுகளுக்கும் இடையேயும் உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி கடந்த 6-ம் தேதி முதல் இட்லிப் மாகாணத்தில் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இட்லிப் விவகாரம் தொடர்பாக மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்த சென்ற துருக்கி அதிபர் தாயிப் எர்டோகனை ரஷிய அதிபர் நீண்ட நேரம் காக்க வைத்துள்ளார். எர்டோகன் அதிபர் புதினை சந்திக்க சென்றபோது அவரை ரஷிய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி தனி அறையில் நிற்க வைத்தனர். 

இதனால் தனது சக அதிகாரிகளுடன் அந்த அறையிலேயே மிகுந்த கலக்கத்துடன் எர்டோகன் திகைத்து நின்றுகொண்டிருந்தார். 



சிறிது நேரம் கழித்து அங்கு ஊழியர்கள் அமர வைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்த எர்டோகன் சற்று நெருடலாக இருந்தார். சுமார் 2.30 நிமிடங்கள் அந்த அறையில் இருந்து வெளியே சென்று ரஷிய அதிபர் புதினை சந்திக்க துருக்கி அதிபருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த சம்பவம் விளாடிமிர் புதினால் துருக்கி அதிபரை அவமானப்படுத்தும் நோக்கிலேயே அரங்கேற்றப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், எர்டோகன் ரஷிய அதிபரை சந்திக்க காத்திருப்பது போன்ற வீடியோவும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.
Tags:    

Similar News