செய்திகள்
விஜய் மல்லையா

என் சொத்துகளில் இருந்து கடன் பாக்கியை எடுத்துக்கொள்ளுங்கள் - விஜய் மல்லையா

Published On 2020-02-15 01:12 GMT   |   Update On 2020-02-15 01:12 GMT
என் சொத்துகளில் இருந்து கடன் பாக்கியை வங்கிகள் எடுத்துக்கொள்ளலாம் என்று பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.
லண்டன்:

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, சில வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்துள்ளார். அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிஓடி விட்டார். இந்தியா விடுத்த வேண்டுகோளின் பேரில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் லண்டனில் கைது செய்யப்பட்டார். அப்போது இருந்து அவர் ஜாமீனில் உள்ளார்.

இந்தியா தொடர்ந்த வழக்கில் அவரை நாடு கடத்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு இங்கிலாந்து உள்துறை மந்திரி சஜித் ஜாவீத் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்தார்.

நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து லண்டன் ராயல் கோர்ட்டில் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்தார். கடந்த 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை 3 நாட்கள் விசாரணை நடைபெற்று முடிந்தது.

நீதிபதிகள் ஸ்டீபன் இர்வின், எலிசபெத் லைங் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.

இந்தியா சார்பில் வாதிட்ட இங்கிலாந்து அரசுத்தரப்பு வக்கீல் மார்க் சம்மர்ஸ், பொய் சொல்லி கடன் வாங்கிய விஜய் மல்லையா, அதை திருப்பிச் செலுத்த மறுக்கிறார் என்று கூறினார்.

விஜய் மல்லையா தரப்பு வக்கீல்கள், விமான தொழிலின் நஷ்டத்துக்கு விஜய் மல்லையா பலிகடா ஆனதாகவும், அவர் கடன் பெற்றதில் தவறான உள்நோக்கம் இல்லை என்றும் வாதிட்டனர்.

விசாரணை முடிவடைந்த நிலையில், கோர்ட்டுக்கு வெளியே விஜய் மல்லையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

வங்கிகள் அளித்த புகாரின் பேரில், எனது சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது. சொத்துகளை முடக்கும் அளவுக்கு சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் நான் எந்த குற்றமும் செய்யவில்லை.

அந்த சொத்துகளில் இருந்து கடன் பாக்கியை எடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் வங்கிகளிடம் கூறுகிறேன். ஆனால், அந்த சொத்துகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமலாக்கத்துறை கூறுகிறது. இதனால் ஒரே சொத்துகளுக்காக வங்கிகள் ஒருபுறமும், அமலாக்கத்துறை ஒருபுறமும் அடித்துக்கொள்கின்றன. இப்படித்தான், கடந்த 4 ஆண்டுகளாக இந்த அமைப்புகள் என்னை நியாயமின்றி நடத்தி வருகின்றன.

நான் வங்கிகளை கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். என் சொத்துகளில் இருந்து உங்கள் அசலை 100 சதவீதம் எடுத்துக் கொள்ளுங்கள். அசல் தொகையில் எந்த தள்ளுபடியும் தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News