செய்திகள்
தாக்குதல் நடைபெற்ற பகுதி

லண்டனில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை சுட்டுக்கொன்ற போலீசார்

Published On 2020-02-03 07:33 GMT   |   Update On 2020-02-03 07:33 GMT
லண்டனில் பொதுமக்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை போலீசார் சுட்டுக்கொன்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன்:

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள ஸ்ட்ரிட்தாம் ஹை சாலையில் நேற்று மாலை பொதுமக்கள் சிலர் சென்றுகொண்டிருந்தனர். 

அப்போது அங்கு வந்த சுதேஷ் அமான் என்ற பயங்கரவாதி சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை கொண்டு பயங்கரமாக தாக்கினார். பயங்கரவாதி நடத்திய இந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்தனர். 
  
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பொதுமக்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சுதேஷ் அமான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். 



இதையடுத்து கத்திக்குத்தில் காயமடைந்த 3 பேரை மீட்ட போலீசார் அவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

சுட்டுக்கொல்லப்பட்ட அமான் கடந்த 2018-ம் ஆண்டு இங்கிலாந்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்ற குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.

ஒன்றரையாண்டுகள் சிறைதண்டனை நிறைவடைந்த நிலையில் சிலநாட்களுக்கு முன்னர் தான் பிணையில் சிறையை விட்டுவெளியே வந்துள்ள அமான் இந்த பயங்கர செயலில் ஈடுபட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News