செய்திகள்
ஹாங்காங் போராட்டம் (கோப்பு படம்)

ஹாங்காங் போராட்டம் - போலீசாரால் தேடப்பட்ட 80-க்கும் மேற்பட்டோர் தைவான் தப்பியோட்டம்

Published On 2020-01-27 13:31 GMT   |   Update On 2020-01-27 13:31 GMT
ஹாங்காங்கில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று போலீசாரால் தேடப்பட்டு வந்த 80-க்கும் அதிகமானோர் தைவானுக்கு தப்பி சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹாங்காங்:

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. 

இதை எதிர்த்து லட்சக்கணக்கான மக்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கைதி பரிமாற்ற சட்ட மசோதாவை ரத்து செய்தல், ஹாங்காங் அரசியலில் சீனா தலையிடுவதை நிறுத்த வேண்டும், சுதந்திரமான தேர்தல், போலீசாரால் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்தல், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் குறித்து விசாரணை மேற்கொள்ளுதல் வேண்டும் என்ற கோரிக்கைகளோடு இந்த போராட்டம் தொடங்கப்பட்டது. 

லட்சக்கணக்கான மக்கள் தங்கள் முகத்தில் முகமூடியை அணிந்து கொண்டு வீதிகளில் இறங்கி சுமார் 5 மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தின் விளைவாக கைதி பரிமாற்ற சட்ட மசோதாவை கை விடுவதாக ஹாங்காங் நிர்வாகம் அறிவித்தது.

ஆனாலும், ஹாங்காங் நிர்வாகத்தில் சீனாவின் தலையிடு இருக்கக்கூடாது, நேர்மையான தேர்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளுடன் போராட்டங்கள் தற்போதும் சிறிய அளவில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

இதற்கிடையில், போராட்டங்களை தலைமையேற்று நடத்தியது, வன்முறையில் ஈடுபட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தி சுமார் 800-க்கும் அதிகமானோரை ஹாங்காங் போலீசார் கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். 



இந்நிலையில், போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்த 80-க்கும் அதிகமானோர் கைது நடவடிக்கைக்கு பயந்து அருகில் உள்ள தைவான் நாட்டிற்கு தப்பிச்சென்று விட்டதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

போலீசார் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை கைது அவர்களது வீட்டிற்கு சென்றபோது அவர்கள் அங்கு இல்லை என்பதும் அண்டை நாடான தைவானுக்கு தப்பிச் சென்றதும் தெரிய வந்துள்ளது. 

ஆனால் தைவானுக்கு தப்பி சென்றவர்களின் உண்மையான எண்ணிக்கை 220-க்கும் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது. தப்பி சென்ற அனைவரும் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News