செய்திகள்
இளவரசர் ஹாரி, மேகனுடன் ராணி எலிசபெத்

இளவரசர் ஹாரி, மேகனுக்கு ராணி எலிசபெத் ஆதரவு - புதிய வாழ்க்கை தொடங்க தடை ஏதும் இல்லை

Published On 2020-01-14 19:54 GMT   |   Update On 2020-01-14 19:54 GMT
ஒரு இளம் குடும்பமாக ஹாரியும், மேகனும் புதிய வாழ்க்கையை தொடங்கும் விருப்பத்துக்கு முழுமையான ஆதரவை அளிக்கிறோம் என ராணி இரண்டாம் எலிசபெத் தெரிவித்துள்ளார்.
லண்டன்:

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியர் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகின்றனர். இதையொட்டி, அவர்கள் தாமாக முடிவு எடுத்து கடந்த வாரம் அறிவித்தது, அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அரச குடும்பத்தில் இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியின் எதிர்கால நிலை குறித்து விவாதிக்க ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நோர்போக்கில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில், அரச குடும்ப உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இளவரசர் ஹாரி, மேகன், இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் சார்லஸ்சுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, மேகனை தவிர மற்றவர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேகன், கனடாவில் இருந்து தொலைபேசி வழியாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் ராணி இரண்டாம் எலிசபெத் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:-

குடும்ப உறுப்பினர்கள் உடனான ஆலோசனை கூட்டம் ஆக்கப்பூர்வமாக அமைந்தது. ஹாரியும், மேகனும் கனடாவிலும், இங்கிலாந்திலும் மாறி மாறி தங்கள் காலத்தை கழிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

நானும், எனது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் ஒரு இளம் குடும்பமாக ஹாரியும், மேகனும் புதிய வாழ்க்கையை தொடங்கும் விருப்பத்துக்கு முழுமையான ஆதரவை அளிக்கிறோம். அவர்கள் அரச குடும்பத்தில் முழுநேர பணி உறுப்பினர்களாக இருப்பதற்கே நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். இருந்தபோதிலும், அவர்கள் எனது குடும்பத்தின் மதிப்புக்குரிய அங்கமாக தொடர்வதுடன் அவர்கள் மேலும் சுதந்திரமான ஒரு வாழ்க்கையை வாழ விரும்பும் முடிவை நாங்கள் மதிக்கிறோம். புரிந்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News