செய்திகள்
கனடா ராணுவ வீரர்கள்

ஈராக்கில் உள்ள கனடா ராணுவ படைகள் குவைத்திற்கு மாற்றம்

Published On 2020-01-08 06:07 GMT   |   Update On 2020-01-08 06:07 GMT
ஈராக்கில் அமெரிக்க விமான படைகள் மீதான தாக்குதலை தொடர்ந்து அங்குள்ள கனடா நாட்டு ராணுவ வீரர்களை தற்காலிகமாக குவைத் நாட்டிற்கு மாற்றுவதாக கனடா உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒட்டாவா:

அமெரிக்கா, ஈரான் இடையேயான மோதல்களினால் மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்கா ஈரான் இடையேயான பதற்றத்தை தணிக்க உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. 

இதற்கிடையே ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக்கில் உள்ள அமெரிக்கா விமானப்படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஈராக்கில் முகாமிட்டுள்ள கனடா நாட்டு ராணுவ வீரர்களில் 500 பேரை தற்காலிகமாக குவைத் நாட்டிற்கு மாற்றுவதாக கனடா ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘நேட்டோவின் திட்டப்படி எங்களது ராணுவ வீரர்கள் சிலர், தற்காலிகமாக குவைத் நாட்டிற்கு மாற்றப்பட உள்ளனர். ராணுவ வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எங்கள் கடமை ஆகும்’, என கனடா ராணுவ தலைமை அதிகாரி ஜானத்தன் வேன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் நாடும் ஈராக்கில் உள்ள தங்களது படைகளின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
Tags:    

Similar News