செய்திகள்
போரிஸ் ஜான்சன்

பிரெக்சிட் நடைமுறையை 2020-க்கு மேல் நீட்டிக்க மாட்டோம்: பிரிட்டன் பிரதமர் உறுதி

Published On 2019-12-17 11:23 GMT   |   Update On 2019-12-17 11:23 GMT
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் நடைமுறையை 2020-க்கு மேல் நீட்டிக்க கூடாது என்ற வாக்குறுதிக்கு சட்டவடிவம் அளிக்க பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீர்மானித்துள்ளார்.
லண்டன்:

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ள போரிஸ் ஜான்சன், புதிய அமைச்சரவை அமைப்பதற்கான அனுமதியை ராணி எலிசபெத்திடம் முறைப்படி பெற்றார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) பாராளுமன்ற பொதுச்சபையில் சபாநயகரை தேர்வு மற்றும் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு ஆகியவை நடைபெறவுள்ளன.

தற்போது தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தை ராணி எலிசபெத் வரும் வியாழக்கிழமை தொடங்கி வைத்து புதிய அரசின் கொள்கைத் திட்டங்கள் மற்றும் பாராளுமன்ற நிகழ்ச்சிநிரல் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி உரையாற்றுகிறார்.



இதற்கிடையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் நடைமுறையை  2020-க்கு மேல் நீட்டிக்க மாட்டோம் என தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு சட்டவடிவம் அளிக்க பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீர்மானித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், ‘பிரெக்சிட் நடவடிக்கையை நிறைவேற்றி, இந்த நாட்டை முன்னெடுத்து செல்லும் என்று நமபிக்கையில்தான் கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் எங்கள் கட்சிக்கு மக்கள் வாக்களித்தனர். எனவே, அந்த வாக்குறுதியையும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் நிறைவேற்றும் பணிகள் இந்த வாரத்தில் தொடங்கும்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் நடவடிக்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க மாட்டோம் என்று எங்களது தேர்தல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.

எனவே, எங்கள் தேர்தல் வாக்குறுதிக்கு சட்டவடிவம் அளிக்கும் வகையிலும் இவ்விவகாரத்தில் பிரிட்டன் அரசு இனியும் காலநீட்டிப்புக்கு ஒப்புக்கொள்ளாத முறையிலும் பாராளுமன்றத்தில் புதிய மசோதாவை கொண்டுவர பிரதமர் போரிஸ் ஜான்சன் தீர்மானித்துள்ளார்’ என தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் நடவடிக்கைக்கான இறுதிக்கெடுவாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் தேதி குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதற்கு பின்னர் சில நிதி விவகாரங்கள் மற்றும் வர்த்தகம் தொடர்பான சிக்கல்களுக்கு அடுத்த ஆண்டுக்குள் பிரிட்டன் அரசு தீர்வுகாண வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News