செய்திகள்
கோத்தபய ராஜபக்சே

இலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்சே

Published On 2019-11-18 07:16 GMT   |   Update On 2019-11-18 07:16 GMT
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
கொழும்பு:

இலங்கையின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில், ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா, இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளரும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபய ராஜபக்சே ஆகியோருக்கு இடையேதான் நேரடி போட்டி நிலவியது.

நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிவடைந்தது. ஓட்டுப்பெட்டிகள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையில், தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சஜித் பிரேமதாசா அதிக ஓட்டுகள் பெற்றார். முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் முத்தூர் பகுதியிலும் அவருக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தன.

ஆனால், சிங்களர்கள் அதிகமாக வசிக்கும் மாகாணங்களில் கோத்தபய ராஜபக்சேவுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தன. இதனால், கோத்தபய ராஜபக்சே தொடர்ந்து முன்னிலையிலேயே இருந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில், அவர் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.



இந்நிலையில்  புதிய அதிபர் பதவியேற்கும் விழா இன்று நடைபெற்றது. அநுராதபுரம் ஜெயஸ்ரீ மஹா போதிக்கு அருகே நடைபெற்ற விழாவில், இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே மற்றும் பல்வேறு எம்பிக்கள் பங்கேற்றனர்.

மகிந்த ராஜபக்சே 2005 முதல் 2015 வரை அதிபராக இருந்தபோது, அவரது சகோதரரான கோத்தபய ராஜபக்சே, இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்தவர். இலங்கை போரில் தமிழர்கள் பலர் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News