செய்திகள்
மோடி, டிரம்ப்

ஒரே மேடையில் மோடி-டிரம்ப்: அமெரிக்க பத்திரிகை புகழாரம்

Published On 2019-09-24 02:45 GMT   |   Update On 2019-09-24 02:45 GMT
ஒரே மேடையில் மோடியும், டிரம்பும் பங்கேற்றது, இருநாட்டு உறவின் அதிகரித்து வரும் வியூக முக்கியத்துவத்தை உணர்த்துகிறது என்று அமெரிக்காவின் முன்னணி பத்திரிகை புகழாரம் சூட்டி உள்ளது.
வாஷிங்டன் :

அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் அமெரிக்க இந்தியர்கள் நடத்திய நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் ஒரே மேடையில் பங்கேற்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ இதுதொடர்பாக நேற்று தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மோடியும், டிரம்பும் ஒரே மேடையில் கூட்டாக தோன்றியது, இந்திய-அமெரிக்க உறவின் அதிகரித்து வரும் வியூக முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்துக்கு உலகின் மாபெரும் ஜனநாயக நாடுகளான இந்தியாவும், அமெரிக்காவும் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளன. இதை டிரம்ப் உறுதி செய்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், இந்தியர்களின் ஓட்டுகள் டிரம்புக்கு அதிகமாக கிடைக்கவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில், அவர்களின் பெருமளவு ஓட்டுகளை பெற்று விடலாம் என்று டிரம்ப் கருதுகிறார்.

21-ம் நூற்றாண்டில் இரு நாடுகளின் வளத்துக்கும் அமெரிக்க இந்தியர்களின் பங்களிப்பு முக்கியமானது. எனவே, இந்தியர்களுடன் இணைந்து செயல்படுவதன் பலன்களை டிரம்ப் புரிந்து கொண்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு முன்னணி பத்திரிகையான ‘தி நியூயார்க் டைம்ஸ்’ கூறியிருப்ப தாவது:-

இந்த கூட்டம், ஒரே பாணியில் செயல்படும் இரு தலைவர்களை ஒன்று சேர்த்துள்ளது. மோடி, டிரம்ப் ஆகிய இருவருமே வலதுசாரி கொள்கையை தழுவியும், மக்களை காக்க வந்தவர்களாக தங்களை முன்னிறுத்தியும் பதவிக்கு வந்தவர்கள்.

இருவரும் தத்தமது நாடுகளை மீண்டும் மாபெரும் தேசமாக மாற்றிக் காட்டுவதாக வாக்குறுதி அளித்தவர்கள். மத, பொருளாதார, சமூக தளங்களில் பதற்றத்தை உண்டாக்கியவர்கள். ஆனால், மோடியை பக்கத்தில் வைத்துக்கொண்டாலும், இந்தியர்களின் ஓட்டுகளை டிரம்ப் பெறுவது எளிதல்ல. அவர்கள் ஜனநாயக கட்சிக்குத்தான் ஓட்டு போடுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

டிரம்பின் ஜனாதிபதி பதவி செயல்பாடுகளை ஆதரித்து மோடி பேசியுள்ளார். இதன்மூலம் அமெரிக்காவுடனான பதற்றத்தை தணிக்கும் வியூகத்தை மோடி கடைபிடித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. 
Tags:    

Similar News