செய்திகள்
சஹர் கோடயாரி

ஈரான்: ஆண் வேடமிட்டு கால்பந்து மைதானத்துக்குள் நுழைந்த பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2019-09-11 08:49 GMT   |   Update On 2019-09-11 08:49 GMT
ஈரானில் உலககோப்பை கால்பந்து போட்டியை காண ஆண் வேடமிட்டு மைதானத்துக்குள் நுழைந்ததால் கைதான பெண் தண்டனைக்கு பயந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
டெஹ்ரான்:

ஈரான் நாட்டில் பெண்கள் கால்பந்தாட்ட மைதானத்துக்கு வந்து விளையாட்டை ரசிப்பதற்கு கடந்த 1981-ம் ஆண்டு முதல் தடை இருக்கிறது. எழுதப்படாத இந்த சட்டம் அந்த நாட்டு அதிகாரிகளால் மிக தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கு அந்த நாட்டில் உள்ள மனித உரிமை அமைப்புகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கடந்த ஆண்டு டெக்ரானில் உள்ள மைதானத்தில், உலக கோப்பை கால்பந்து போட்டி ஒளிபரப்பு செய்யப்பட்ட போது சில பெண்கள் மட்டும் அங்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், பொதுவாக ஈரானில் பெண்களுக்கு அனுமதி மறுப்பே நிலவுகிறது.

உலக அளவில் இதற்கான எதிர்ப்புகள் இருந்தபோதும், கலாசாரத்தை கடந்து இதை அனுமதிக்க நாங்கள் முயற்சியில் இருக்கிறோம் என்று மழுப்பலாகவே ஈரான் அரசு பதிலளித்து வந்தது. உலக கால்பந்து சம்மேளனம், ஈரான் பெண்கள் மீதான இந்தத் தடையை ஆகஸ்ட் மாதம் 6-ந்தேதிக்குள் நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தும், ஈரான் அதற்குச் செவி சாய்க்கவில்லை.

இதனால் ஈரானில் பெண்கள், ஆண்கள் போல வேடமிட்டு தங்களின் விருப்பமான அணி விளையாடும் போட்டிகளை காணவருவது கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்தது, ‘தாடி வைத்த பெண்கள்’ என்று இவர்களை குறிப்பிட்டனர்.

இந்த நிலையில்தான் சஹர் கோடயாரி என்ற பெண், கடந்த மார்ச் மாதம் ஆண் வேடமிட்டு மைதானத்துக்கு நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டு மூன்று நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவர்மீது வழக்கும் தொடுத்தனர். பின்னர், ஜாமீனில் வெளிவந்த அவர் வழக்கு விசாரணைக்காக 6 மாதங்கள் காத்திருந்தார்.

ஆறு மாதங்கள் கழித்து கடந்த வாரம் விசாரணைக்கு வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதிபதி வராத காரணத்தினால் வழக்கு நடைபெறவில்லை. அங்கு இருந்தவர்கள் அவருக்கு நிச்சயம் ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறினர். இதைகேட்ட அவர் பயந்து போனார். இதனால் வேதனை அடைந்த அவர் நீதிமன்ற வாசலிலேயே தீக்குளித்தார். உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிர் இழந்தார்.

நேற்று தற்கொலை எதிர்ப்பு தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தபோது, ஈரானில் பெண் ஒருவரின் தற்கொலை, உலகையே உலுக்கியிருக்கிறது.

‘உலகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது, பெண்கள் விண்வெளியை அடைந்துவிட்டனர், என நாம் எல்லாம் மார்தட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில், இன்னும் தாம் விரும்பிய விளையாட்டை நேரில்கண்டு ரசிக்கக்கூட வாய்ப்பு வழங்கப்படாத நிலையும் சில நாடுகளில் தொடர்வது வேதனையளிப்பதாக உலகம் முழுக்க கண்டன குரல்கள் எழுந்துள்ளன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானிய மக்கள், ‘ஈரானை உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலக்கிவையுங்கள்’ என்று மற்ற உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
Tags:    

Similar News