செய்திகள்
குல்பூஷன் ஜாதவ்

பாகிஸ்தான் சிறையில் குல்பூஷன் ஜாதவை சந்தித்தார் இந்திய துணைத்தூதர்

Published On 2019-09-02 10:55 GMT   |   Update On 2019-09-02 10:55 GMT
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவை இந்திய துணைத்தூதர் கவுரவ் அலுவாலியா இன்று சந்தித்துப் பேசினார்.
இஸ்லாமாபாத்:

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், உளவு பார்த்ததாக கூறி 2016ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. இதையடுத்து குல்பூஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் 2017, ஏப்ரலில் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து இந்தியா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி உத்தரவிட்டது.

சர்வதேச ஒப்பந்தங்களின்படி, குல்பூஷன் ஜாதவுக்கு அளிக்கப்பட வேண்டிய சட்டரீதியிலான உரிமைகளையும், தூதரக உதவிகளையும் காலதாமதமின்றி உடனடியாக அளிக்க வேண்டும்  எனவும் பாகிஸ்தானுக்கு சர்வதேச கோர்ட் உத்தரவிட்டது.

வியன்னா ஒப்பந்தங்களின்படி  இந்திய தூதரக அதிகாரிகள்  குல்பூஷன் ஜாதவை சந்திக்க அனுமதி அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது டுவிட்டரில் தெரிவித்தது.



இந்நிலையில், குல்பூஷன் ஜாதவை தூதரக ரீதியில் சந்திக்க பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அனுமதி வழங்கியதையடுத்து அந்நாட்டுக்கான இந்திய துணைத்தூதர் கவுரவ் அலுவாலியா இன்று குல்பூஷன் ஜாதவ் அடைத்து வைக்கப்பட்டுள்ள இஸ்லாமாபாத்தில் உள்ள கிளை சிறைச்சாலைக்கு சென்று அவரை சந்தித்தார்.

குல்பூஷன் ஜாதவ் மற்றும் இந்திய துணைத்தூதர் கவுரவ் அலுவாலியா இடையேயான சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Tags:    

Similar News