செய்திகள்

பருவ வயதை அடையும் முன்னர் மணமகன்களான 11.5 கோடி பேர் -யூனிசெப் ஆய்வில் தகவல்

Published On 2019-06-07 10:20 GMT   |   Update On 2019-06-07 10:20 GMT
உலகம் முழுவதும் சுமார் 11.5 கோடி பேர் பருவ வயதை அடையும் முன்னர் மணமகன்களாகி தாம்பத்ய வாழ்க்கையை தொடங்கிவிட்டதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நியூயார்க்:

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள 82 நாடுகளில் குழந்தை திருமணம் குறித்து பிரபல  ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் நடத்திய ஆய்வில் எதிர்பாராத பல அதிர்ச்சி தரும் விதமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வு தெற்கு ஆசிய நாடுகள், லத்தின் அமெரிக்கா, பசிபிக் போன்ற பகுதிகளில் நடத்தப்பட்டது.

இதில் சுமார் 11.5 கோடி பேர் பருவநிலை அடையும் முன்னரே மணமகன்களாக மாறியுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு மடங்கு மணமகன்கள் 15 வயதை எட்டும் முன்னரே திருமணம் செய்து கொள்கின்றனர்.



பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அதிகபட்சமாக, ஆப்பிரிக்காவில் 28 சதவீதம் பேரும், நிகரகுவாவில் 19 சதவீதம் பேரும், மடகஸ்கரில் 13 சதவீதம் பேரும் பருவ நிலை அடையும் முன்னரே திருமணம் செய்து கொள்கின்றனர்.

இந்த ஆய்வு குறித்து யூனிசெப் செயல் இயக்குனர் ஹென்ரீட்டா ஃபோரே கூறுகையில், ‘சிறுவர்கள் விரும்பாதபோதும் கட்டாயமாக திருமணம் செய்து வைத்து குடும்பத்தை தாங்கும் பொறுப்பினை குடும்பத்தினர் கொடுக்கின்றனர்.

முன்னதாகவே திருமணம் செய்வதால், அவர்கள் சீக்கிரமாகவே தந்தையாகவும் மாறி விடுகிறார்கள். இதனால் குடும்ப பிரச்சனைகளை முழுவதுமாக சுமக்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.

மேலும் திருமணத்தால்  அவர்களின் கல்வி பாதிப்படைவதோடு வேலைக்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது போன்ற திருமணங்களை குறைக்க யூனிசெப் தொடர்ந்து முயற்சி எடுக்கும். விழிப்புணர்வு ஏற்படுத்தும்’ என கூறியுள்ளார்.

Tags:    

Similar News