செய்திகள்

இலங்கை போர் குற்ற விசாரணை- சிறிசேனாவுக்கு எதிராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கருத்து

Published On 2019-03-08 03:56 GMT   |   Update On 2019-03-08 03:56 GMT
இலங்கை போர் குற்ற விசாரணை தொடர்பாக அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கருத்து தெரிவித்துள்ளார். #RanilWickremesinghe
கொழும்பு:

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். போர் குற்றத்தில் ஈடுபட்டதாகவும், மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக 2015-ம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கை போரில் இருதரப்பிலும் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை மற்றும் அமெரிக்கா இணைந்து விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடைபெற உள்ள 40-வது ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்த தீர்மானத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்யப்பட உள்ளது.

இந்த தீர்மானத்துக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்து இருந்த இலங்கை அதிபர் சிறிசேனா, திடீரென தனது நிலையை மாற்றிக்கொண்டு ‘‘இலங்கையில் யாருடைய தலையீடும் இல்லாமல் எங்கள் சொந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ள எங்களுக்கு சில காலம் தேவை என்றும், ஐ.நா. கூட்டத்துக்கு எனது சார்பில் ஒரு குழுவை அனுப்புவேன்’’ என்று தெரிவித்தார்.

ஆனால் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மறுநாளே இதற்கு மாறான கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகமும், வெளியுறவு அமைச்சகமும் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில், ‘‘இலங்கை தனது வாக்குறுதியை தொடர்ந்து செயல்படுத்தும். ஐ.நா. தீர்மானப்படி ஒரு நீண்டகால மற்றும் நிலையான சமரச தீர்வை அடைவதற்கான முயற்சியை மேற்கொள்ளும். நடைபெற இருக்கும் 40-வது ஐ.நா. கூட்டத்தில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு மேலும் காலஅவகாசம் கேட்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

இது அதிபர் சிறிசேனா தெரிவித்த கருத்துக்கு நேர்மாறாக உள்ளது. சிறிசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் ஏற்கனவே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து சிறிசேனா நீக்கினார். இந்த பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டதால் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்றது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் அவர்களுக்குள் இன்னும் மோதல் போக்கு இருந்துவருவது தெரியவந்துள்ளது. #RanilWickremesinghe

Tags:    

Similar News