செய்திகள்

போலி விசா மூலம் அமெரிக்காவுக்கு படிக்க சென்ற இந்திய மாணவர்கள் கைது

Published On 2019-02-01 11:34 GMT   |   Update On 2019-02-01 11:34 GMT
இந்தியாவில் இருந்து கல்லூரியில் சேர்வதற்காக போலி விசா மூலம் அமெரிக்காவுக்கு சென்ற சுமார் 130 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வாஷிங்டன்:

அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படிக்க விசா பெற்று ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கா செல்கின்றனர்.

ஆனால், இவ்வாறு செல்பவர்களில் பலர் போலியாக விசா பெற்று செல்வது தெரிய வந்தது.

புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வருவோரை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

போலி விசா பெற்று வரும் மாணவர்கள் எவ்வாறு வருகிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்காக அமெரிக்க போலீசார் போலி பல்கலைக்கழகம் ஒன்றை ரகசியமாக உருவாக்கினார்கள்.

இந்த பல்கலைக்கழகம் பெயரில் மாணவர்கள் சேர்க்கைக்காக விளம்பரம் செய்யப்பட்டது. அதை அமெரிக்காவில் வசிக்கும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த ஏஜெண்டுகள் அணுகி போலி விசா பெற்று மாணவர்களை அனுப்பி வைத்தனர்.

இதற்காக மாணவர்களிடம் பல லட்சம் ரூபாய் கமி‌ஷன் பெற்று அனுப்பினார்கள். அவர்கள் அமெரிக்காவில் படிப்பதற்கு பதிலாக வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் இவ்வாறு போலி விசா பெற்று யார்- யார் வந்திருக்கிறார்கள்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்க போலீசார் இறங்கினார்கள்.

சுமார் 600 மாணவர்கள் இவ்வாறு வந்திருந்தனர். அவர்களை கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கினார்கள்.

அதில், 100 மாணவர்கள் சிக்கி இருக்கிறார்கள். அவர்களிடம் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. அவர்களுக்கு போலி விசா கொடுத்து ஏமாற்றிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற மாணவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

போலி விசா பெற்று சேர்ந்திருப்பதால் அவர்கள் அனைவரும் கைதாகும் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்தும் ரூ. 6 லட்சம் வரை கட்டணம் பெற்று சேர்த்துள்ளனர். இதில், பல மாணவர்களுக்கு போலி விசா என்பது தெரியாது. அவர்கள் ஏஜெண்டுகளிடம் ஏமாந்து போலீசில் சிக்கி உள்ளனர்.

இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர வேறு பல வெளிநாட்டு மாணவர்களையும் போலி விசா மூலம் சேர்த்து இருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். அவர்கள் மத்திய அரசிடம் முறையிட்டு மாணவர்களை காப்பாற்றும்படி கேட்டு உள்ளனர்.

எனவே, மாணவர்களை காப்பாற்றும் வகையில் இந்திய தூதரகம் மூலம் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அமெரிக்காவின் ஆந்திர சங்கமும் அந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது.
Tags:    

Similar News