செய்திகள்

பாகிஸ்தானில் மதஅவமதிப்பு குற்றத்தில் கிறிஸ்தவப் பெண் விடுவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

Published On 2019-01-29 11:18 GMT   |   Update On 2019-01-29 11:18 GMT
பாகிஸ்தானில் மதஅவமதிப்பு குற்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவப் பெண் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #PakistanSC #blasphemycase #Asiabeevi
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஆசியா பீபி. அந்நாட்டின் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது முகம்மது நபியை தரக்குறைவாக பேசியதாக மத அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வந்தார்.

இந்த வழக்கில் ஆசியா பீபிக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2010-ம் ஆண்டு உள்ளூர்  நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உறுதிப்படுத்தி லாகூர் உயர் நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட ஆசியா பீபியின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் அவரது வழக்கறிஞர் மேல்மூறையீடு செய்திருந்தார்.

இந்த மனுவின்மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மியான் சகிப் நிசார் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் 31-10-2018 அன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் ஆசியா பீபிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.

அவர் மீதான மத அவமதிப்பு குற்றச்சாட்டை அரசுதரப்பு வழக்கறிஞர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க தவறியதால் இவ்வழக்கில் இருந்து ஆசியா பீபியை விடுதலை செய்வதாக அறிவித்த நீதிபதிகள் அவர்மீது வேறெந்த வகையிலும் போலீசார் நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்தனர்.

மரண தண்டனையில் இருந்து ஆசியா பீபியை விடுவித்து வெளியான இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட பெருநகரங்களிலும் நாட்டின் பிறபகுதிகளிலும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த பலர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

ஆசியா பீபி விடுதலை செய்யப்படதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரி முஹம்மது சலாம் என்பவர் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.



சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆசிப் சயீத் கோசா தலைமையிலான அமர்வு இன்று இம்மனுவை தள்ளுபடி செய்தது.

ஆசிபா பீபியை விடுதலை செய்வதற்கு முன்னதாக முஸ்லிம் மதத்தலைவர்களின் கருத்தையும் நீதிமன்றம் அறிந்திருக்க வேண்டும் என மனுதாரரின் வழக்கறிஞர் வாதாடினார்.

இதுஎப்படி மத விவகாரம் ஆகும்? சாட்சிகள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில்தான் இந்த கோர்ட் தீர்ப்பளித்தது. ஒருவர் குற்றவாளி அல்ல என்று தெரிந்தும் அவரை தண்டிக்க வேண்டும் என இஸ்லாம் மதம் கூறுகிறதா? என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி இந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தார். #PakistanSC #blasphemycase #Asiabeevi
Tags:    

Similar News