செய்திகள்

மெக்சிகோ அதிபராக மேனுவேல் லோபெஸ் ஆப்ரடார் பதவி ஏற்றார்

Published On 2018-12-02 08:06 GMT   |   Update On 2018-12-02 08:06 GMT
அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவின் புதிய அதிபராக இடதுசாரி அமைப்பை சேர்ந்த மேனுவேல் லோபெஸ் ஆப்ரடார் இன்று பதவி ஏற்று கொண்டார். #LopezObrador #Mexiconewpresident #Mexicopresident
மெக்சிகோ சிட்டி:

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அதிபர் பதவி, பாராளுமன்றம் மற்றும்  3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கு கடந்த ஜூலை மாதம் முதல் தேதி தேர்தல் நடந்தது. அப்போதைய அதிபராக இருந்த பெனா நெய்டோவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்ததால், அவர் சார்ந்துள்ள ஐஆர்பி கட்சி தோல்வியை தழுவும் என கருத்து கணிப்புகள் முன்னரே வெளியாகின.
 
ஐஆர்பி கட்சியில் இருந்து பிரிந்து இடதுசாரி சித்தாந்தங்கள் கொண்ட தேசிய ரீஜெனரேசன் இயக்கம் தொடங்கிய லோபெஸ் ஆப்ரடார் இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அவருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதே போல தேர்தல் முடிவுகள் எதிரொலித்தன.

53 சதவீதம் வாக்குகள் பெற்று அவர் முதலிடம் பிடித்தார். இதன்மூலம் மெக்சிகோவை கடந்த 89 ஆண்டுகளாக மெக்சிகோவை ஆண்டுவந்த இரு முக்கிய கட்சிகளை தோற்கடித்தவர் என்ற வரலாற்று சாதனையை லோபஸ் ஆப்ரதோர் படைத்தார்.

முன்னாள் அதிபர் வாழ்த்து தெரிவித்த போது எடுத்த படம்.

ஊழல், வறுமை, போதை மாபியா ஆகியவற்றை ஒழிப்பதே தனது முதல் இலக்கு என லோபஸ் ஆப்ரதோர் தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்காவின் குடியேற்ற கொள்கையை கடுமையாக ஆப்ரடார் விமர்சித்து வந்தாலும், இவரது வெற்றிக்கு டிரம்ப் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிலையில்,  தேர்தல் முடிவுகள் வெளியாகி ஐந்து மாதங்களுக்கு பின்னர் மெக்சிகோ புதிய அதிபராக மேனுவேல் லோபெஸ் ஆப்ரடார் இன்று பதவி ஏற்று கொண்டார்.

பதவியேற்பு விழாவில் பேசிய அவர், இன்று முதல் புதிய அரசங்காத்தின் துவக்கம் என்று கூறுவதைவிட அரசியல் அதிகாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்றும் குறிப்பிடுவதுதான் பொருத்தமாக இருக்கும் என தெரிவித்தார்.

மெக்சிகோ மக்களிடம் பொய் சொல்ல மாட்டேன், திருட மாட்டேன், அவர்களை வஞ்சிக்க மாட்டேன் என்ற எனது வாக்குறுதியை நான் மீண்டும் தெரிவித்து கொள்கிறேன் எனவும் அவர் உறுதியளித்தார். #LopezObrador #Mexiconewpresident #Mexicopresident
Tags:    

Similar News