செய்திகள்

வியட்நாமில் பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்து 6 பேர் உயிரிழப்பு

Published On 2018-11-22 05:58 GMT   |   Update On 2018-11-22 05:58 GMT
வியட்நாமில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி தீப்பிடித்து, அருகில் உள்ள வீடுகளை தீக்கிரையாக்கியதில் 6 பேர் உயிரிழந்தனர். #VietnamTruckFire
ஹனோய்:

வியட்நாம் நாட்டின் தெற்கு மாகாணமான பின் புவோக் மாகாணம் சோன் தான் மாவட்டத்தில் இன்று பெட்ரோல் நிரப்பிய ஒரு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அதிகாலை 4 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடிய அந்த லாரி, கற்கள் ஏற்றி வந்த மற்றொரு லாரியுடன் மோதியது.

பின்னர் சாலையோரம் உள்ள பிளாட்பாரத்தில் ஏறி மின்கம்பத்தில் இடித்து தள்ளியது. பின்னர் லாரி கவிழ்ந்தது. இதனால் அதில் இருந்த பெட்ரோல் சாலையில் கொட்டி தீப்பிடித்தது.  இதன் காரணமாக சாலையோரம் இருந்த 16 வீடுகளும் தீப்பற்றி எரிந்தன.  வீட்டிற்குள் தூங்கிகொண்டிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். சிலர் தீயில் சிக்கிக்கொண்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.


இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வியட்நாமில் இந்த ஆண்டில் முதல் 10 மாதங்களில் 3770 தீவிபத்துகள் மற்றும் வெடிவிபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 91 பேர் உயிரிழந்ததாகவும் தீயணைப்புத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. #VietnamTruckFire

Tags:    

Similar News