செய்திகள்

அமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்

Published On 2018-09-22 05:41 GMT   |   Update On 2018-09-22 05:41 GMT
அமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #AmericanAirlines #Studentarrest

ஒர்லண்டோ:

அமெரிக்காவில் புளோரிடா தொழில் நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர் நிஷால் சாங்கட் (22). கடந்த 20-ந்தேதி அவர் ஒர்லண்டோவில் உள்ள மெல்பல்ன் சர்வதேச விமான நிலைய பகுதிக்கு காரில் வந்தார்.

விமான நிலையத்தின் வெளியே 140 மீட்டர் தூரத்தில் காரை நிறுத்தினார். பின்னர் விமான நிலையத்தின் காம்பவுண்டு சுவர் மீது ஏறி உள்ளே குதித்தார்.

அங்கு ‘ஏர்பஸ்-321’ ரக பயணிகள் விமானம் தயாராக நின்று கொண்டிருந்தது. அதற்குள் நுழைந்த அவர் விமானியின் அறைக்குள் நுழைந்து அதை இயக்க முயன்றார்.

உடனே விமானத்தில் இருந்த 2 தொழில்நுட்ப நிபுணர்கள், 2 பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

விசாரணையில், நிஷால் டிரினிடாட்டை சேர்ந்தவர் என்றும், கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்தவர் என்றும் தெரியவந்தது. இவர் சரக்கு விமானம் ஓட்ட லைசென்சு வைத்துள்ளார். ஆனால் பயணிகள் விமானம் ஓட்ட தகுதி பெற வில்லை. அவரது வீடு மற்றும் காரில் போலீசார் சோதனை செய்தனர்.

அங்கு ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் எதுவும் இல்லை. எனவே அது பயங்கரவாத நடவடிக்கை இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர் நிஷால் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான காரணம் தெரியவில்லை.

விமானத்தை திருட முயன்றதாக நிஷால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஊழியர் ஒருவர் சீட்டிங் விமான நிலையத்தில் இருந்து விமானத்தை கடத்திச் சென்று ஒரு தீவில் மோதி விபத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #AmericanAirlines #Studentarrest

Tags:    

Similar News